Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காவிரி விவகாரம்: கர்நாடகா பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு நடுவண் அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

பாஜகவை தவிர ஆளும் அதிமுக கட்சி முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடையடைப்பு, முற்றுகை, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 7ம் தேதி முதல் காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும்போதும் சிலர் கருப்புக்கொடி காட்டியும், காலணிகளை மைதானத்திற்குள் வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னதாக, போட்டிக்குத் தடை விதிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாளை (ஏப்ரல் 12, 2018) தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டவும் அனைத்து எதிர்க் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளை தமிழக எல்லையிலேயே நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடகா பதிவெண் கொண்ட பேருந்துகள், திம்பம் சோதனைச் சாவடி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.