Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் கருப்புக்கொடி போராட்டங்கள், ஆளும்தரப்பு மற்றும் பாஜக வட்டாரத்தில் கடும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உருவாக்கப்பட்ட #ஓடிப்போமோடி என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது.

நாடு முழுவதும் மோடி மீது எழுந்துள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்த ட்விட்டர் ட்ரெண்டிங் அமைந்துள்ளது.

உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போக்குக் காட்டி வருகிறது நடுவண் பாஜக அரசு. இதற்கான 6 வார கால அவகாசம் முடிவுற்ற கடைசி நாளில், இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் தெரியவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்திய அரசு.

எதிர்வரும் கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துத்தான் திட்டமிட்டே காலம் கடத்துவதற்காக இவ்வாறு நடுவண் அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து நடுவண் அரசைக் கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் காவிரி மீட்பு நடைப்பயணம் போராட்டம் நடத்தி வருகின்றனர். மட்டுமின்றி, திமுக தரப்பில் கடையடைப்பு போராட்டமும் நடந்தது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து களமாடி வருகின்றன. தமிழ் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்களும் மவுன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 12, 2018) காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.

எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினர் கருப்பு சட்டை அணிந்தும், ‘கோ பேக் மோடி’ என்று ஆங்கிலத்தில் எழுதிய ராட்சத பலூன்களை பறக்க விட்டும் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியும் இன்று கருப்பு சட்டை அணிந்து, பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தது பரவலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழர்களிடம் கிளம்பிய எதிர்ப்பைப் பார்த்தாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

கோவையில் சிலர், ‘ஓடிப்போ மோடி’ என்று எழுதிய அட்டையை புறாக்களின் கால்களில் கட்டி பறக்கவிட்டும் மிகவும் நூதன வழியில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில், #கோபேக்மோடி என்றும், #ஓடிப்போமோடி என்றும் ஹேஷ்டேக் உருவாக்கி, தங்கள் எதிர்ப்பை பலரும் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் உருவாக்கிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

மதியம் 12.45 மணியளவில் உலகளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. ஒரு சில மணி நேரங்களில் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மோடிக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை தொடர்பான உதிரிபாகங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறிய மோடி, சென்னையில் அவருக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணமாக சாலைவழிப் பயணத்தைத் தவிர்த்து, விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக வான் வழியாகவே நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்குச் செல்ல நேர்ந்தது. அவருடைய இத்தகைய ‘துணிச்சலை’ வைகோ, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கிண்டல் செய்து கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆளும் அதிமுகவை பலவீனப்படுத்தியது, ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து வந்த நீட் தேர்வு, உதய் மின் திட்டங்களை அமல்படுத்தியது, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்தியது என தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மோடியை பலரும் விமர்சித்துள்ளனர்.

கிண்டியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ஒலி மாசை ஏற்படுத்தக்கூடிய ஹெலிகாப்டர் பயணத்திற்கு அனுமதி கொடுத்தது யார்?, இரவோடு இரவாக ஐஐடி சுற்றுச்சுவரை இடித்து புதிதாக வழித்தடத்தை ஏற்படுத்த அனுமதி கொடுத்தது யார்? என்றும் பலர் வினா எழுப்பியுள்ளனர்.

கருப்புக் கொடி காட்டும் எதிர்ப்பாளர்களின் பார்வையில் படக்கூடாது என்பதற்காக அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்குச் செல்ல சென்னை ஐஐடியின் பின்பக்கம் அவசரகதியில் புதிய வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. இதை சிலர், ‘முப்படை தளபதிகளோடு சென்று வந்த பிரதமரை இப்படி மூத்திர சந்துக்குள் போக வெச்சீட்டீங்களேடா…’ என்று நடிகர் வடிவேல் பாணியில் கிண்டலாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமர் இன்று ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் போராட்டங்கள் தீவிரம் அடையும் எனத் தெரிகிறது.

 

– வழிப்போக்கன்.