Saturday, September 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழ் அறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் ஆகியோர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். தமிழ் இருக்கைக்காக நிதியுதவியும் வழங்கினர்.

அதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் ஜெயலலிதா அறிவித்தார்.

இதற்காக சுமார் ரூ.33 கோடி செலவாகும் என்று தமிழ் அறிஞர்கள் கூறினர். மேலும், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து இதுவரை ரூ.19 கோடி திரட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதற்காக தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 27, 2017) தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழ் இருக்கை அமைவதற்கான பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதன் மூலம் என்னென்ன பயன்கள் கிடைக்கப்போகிறது என்பது குறித்து தமிழறிஞர், பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தரும், சென்னை தமிழ் இசைக்கல்லூரியின் ஆலோசகருமான முனைவர் தங்கராஜூவிடம் கேட்டோம்.

அவர் கூறியதாவது:

உலகில் சிறந்த ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகளில் யார் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு என் வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லலாம். இதன்மூலம் தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் இன்னும் மேம்படும். பல்வேறு ஆய்வு நூல்கள் வெளிவர உறுதுணயாக இருக்கும். உலகம் முழுமைக்கும் தமிழ் பரவும்.

இன்னும் நம்மிடம் தமிழ் வரலாறும், தமிழக வரலாறும் கிடையாது என்பதுதான் உண்மை. எனக்குத் தெரிந்து 1971-1976 காலக்கட்டத்தில் கலைஞர், பழந்தமிழ் ஆய்வுக்காக ஒரு குழு அமைத்தார். சிதம்பரம் செட்டியார், பாவாணர், டாக்டர் மு.வ. உள்ளிட்ட பெரும் தமிழறிஞர்கள் பலரும் அந்தக்குழுவில் இருந்தனர். அவர்கள், ‘தொல்பழங்காலம்’ என்ற ஒரே ஒரு ஆய்வு நூலைக் கொண்டு வந்தனர். அத்தோடு அந்த ஆட்சியும் போச்சு. அந்தக்குழுவும் போச்சு.

‘வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்’ என்று ஓர் ஆய்வு இருக்கிறது. இன்னும் அதற்கான ஆய்வுகள் எல்லாம் செய்யவே இல்லை. லெமூரியா கண்டம் எங்கு இருந்தது?. நமக்கு குமரிக்கண்டம் எது? சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், ‘பஃருளியாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள…’ என்று பாடுகிறார். பஃருளியாறு என்பது கங்கையைக் காட்டிலும் பேராறு என்று கருதப்படுகிறது. பல கிளை ஆறுகளைக் கொண்டது. அந்த ஆறு தமிழகத்தில் இரு ந்திருக்கிறது.

குமரிக்கண்டம் ஏன் வந்தது? நாவலன் தீவு எப்படி வந்தது? என்ற ஆராய்ச்சிகளை செம்மையாக முடித்தாலே தமிழர்களின் வரலாறு, லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு போய்விடும். தமிழ் மொழி 2000 ஆண்டுகள் பழமையானது என்று ஏன் சொல்கிறார்கள்? நம் மொழி 50 ஆயிரம், ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானது சொன்னால் நம் வாய் என்ன கசந்தா போய்விடும்?

சங்க இலக்கியங்களில் 2285 பாடல்கள் இருக்கின்றன. 300 புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து இருக்கிறோம். அவற்றை தொகுத்ததன் அடிப்படையில் தமிழ் மொழியின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லி வருகிறோம். ஆனால் அந்தப் பாடல்களை அதற்குமுன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிவிட்டனர்.

நான் 1977ல் எம்.லிட். என்ற ஆய்வுப்பட்டம் பெற்றேன். அது, பிஹெச்.டி.,க்கு இணையானது. ‘தமிழர்க்கு மொழி எல்லை வேங்கடம் ஆட்சி எல்லை இமயம்’ என்று கட்டுரையில் பதிவு செய்தேன். அப்போது வாய்மொழித்தேர்வு நடத்த வந்தவர் மிகப்பெரும் தமிழ் அறிஞரான வ.சுப.மாணிக்கம். எதன் அடிப்படையில் இப்படி எழுதினீர்கள் என்று கேட்டார்.

தமிழர்களுக்கு எப்போதுமே தன் மொழியை பிறர் மீது திணிக்கும் பழக்கம் கிடையாது. அதனால்தான் தமிழின் மொழி எல்லை வேங்கடம் (திருப்பதி) வரையிலும், ஆட்சி எல்லை இமயமலை வரையிலும் இருந்தது. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்’ என்கிறது தொல்காப்பியம்.

நம்முடைய இலக்கியங்கள் ஆட்சி, அரசியல், வாழ்க்கை, சமுதாயம், பண்பாடு, நாகரீகம், பழக்கவழக்கம் பற்றி பேசுகின்றன. அதில் படையெடுப்புகள் வருகின்றன. ஆட்சி எல்லைகள் வருகின்றன. அதை வைத்து நான் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டேன்.

தமிழ் ஆய்வுகள் இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும். விரிவுபடுத்த வேண்டும். சங்க இலக்கியங்களை முழுவதும் படித்தவர்கள் எத்தனை பேர் என்பதே கேள்விதான். 1967 வரை தமிழை முன்னெடுத்துதான் அரசியல் நடத்தினோம். அதன்பின் தமிழைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் செய்கிறோம். அதுதான் வேறுபாடு.

மொழிதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. ஒரு சமுதாயத்தின் மொத்த உள்ளீடு அது. மொழியை வைத்துதான் ஒரு சமுதாயத்தின் வரலாறு, மாண்புகளை அறிய முடியும். மொழியைப் புறக்கணித்துவிட்டு எந்த ஒரு சமூகமும் வளரவும் முடியாது. வாழவும் முடியாது. ஆகவே, தமிழ் மொழி ஆராய்ச்சி அவசியம்.

ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கை ஆராய்ச்சியில் தமிழ் மொழி அறிவாளிகளைக் காட்டிலும் மொழி உணர்வாளர்களை ஈடுபடுத்த வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.

இவ்வாறு முனைவர் தங்கராஜூ கூறினார்.

– இளையராஜா சுப்ரமணியம்.