Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு; மக்களுக்கு பேருந்து கட்டண உயர்வா?

அரசுப்பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி வெகுசன மக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எம்எல்ஏக்களுக்கு இரட்டை மடங்கில் சம்பளத்தை உயர்த்திவிட்டு, அதன் சுமையை சமாளிக்க சாமானியர்கள் பயணிக்கும் பேருந்து கட்டணத்தை உயர்த்தலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே அரசுப்பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன. இதற்கிடையே, ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு தள்ளிப்போனது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் இறுதியாக கேட்டதோ 2.57 மடங்கு ஊதிய உயர்வு. ஆனால், அரசுத்தரப்பு அவர்களுக்கு வழங்கியது 2.44 மடங்கு. இடைப்பட்ட வித்தியாசம் வெறும் 0.13 சதவீதம் மட்டுமே. அதாவது கால் சதவீதத்திற்கும் குறைவு.

ஆனால், நிதிநெருக்கடியைக் காரணம் காட்டி, இதற்குமேல் உயர்த்தி வழங்க முடியாது என கைவிரித்த தமிழக அரசாங்கம்தான், சத்தமே இல்லாமல் எம்எல்ஏக்களின் ஊதியத்தை ரூ.55000ல் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்திக் கொண்டது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கூடாது என்பதல்ல நமது நோக்கம். 2006-2011 வரையிலான திமுக ஆட்சியின்போதே நான்கு முறை எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீடு பற்றி எரியும்போது, அரசாங்கம் ஃபிடில் வாசிக்கக்கூடாது என்பதுதான் நாம் சொல்ல விழைவது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் ஆளும் இபிஎஸ் – ஓபிஎஸ் அரசு, சற்றும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. பொங்கல் விழா, எம்ஜிஆர் பிறந்த நாள் விழாக்களில் ஆளும் தரப்பு மூழ்கிப் போனது.

வேலைநிறுத்தம் காரணமாக, இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியுமா என்பதே கேள்விக்குறியாகி இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் திடீரென்று பேருந்து கட்டணத்தை உயர்த்தி, அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளது தமிழக அரசு. அதுவும் 50 முதல் 65 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

எல்லா நிகழ்வுகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். ஆப்பிள் விழுவதற்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் உள்ள தொடர்பை போல. பேருந்து கட்டண உயர்வைக் காட்டி, ஓலா, உபேர் முதல் நம்மூர்களில் மலிந்து கிடக்கும் ஆட்டோக்கள் வரை கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

”பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன். பல்வேறு பொருள்களின் விலைகளும் உயர்ந்து விடும் என்று அச்சம் தெரிவிக்கிறார் திருமாவளவன்.

புயலிலும், மழையிலும் சிக்கிக்கொண்டு மரண ஓலமிடும் மக்களின் குரலுக்கே மிக மிக மிக தாமதமாக காது கொடுக்கும் இந்த அரசாங்கத்தின் செவிகளில் இவர்களின் கூக்குரல் மட்டும் விழுந்துவிடுமா என்ன?

சரி. அப்படியே மக்களில் யாரேனும் நீதிமன்றத்தை நாடினால் அங்கே என்ன சொல்லிவிடப் போகிறார்கள்?. பேருந்தில் டிக்கெட் எடுத்துப் போக முடியாதவர்கள் நடந்தே போகலாம் என்று சொல்லிவிடுவார்கள்.

ஏனெனில், செவிலியர்கள் போராட்டத்தின்போது, சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்குச் செல்லவேண்டியதுதானே என்று இதே உயர்நீதிமன்றம்தான் கேட்டது. அரசுப்போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கினால், அதை ஏன் தனியார்மயமாக்கக் கூடாது என்றுகூட வெந்தும் வேகாத்தனமாக ஒரு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பேருந்து கட்டண உயர்வின்போதுதான் தமிழ்நாட்டில் விரைவு பேருந்து, அதிவிரைவுப் பேருந்து, சொகுசு பேருந்து, குளிர்சாதன பேருந்தெல்லாம் இருக்கிறதா என்றே தெரிய வருகிறது. என்னளவில் சாதாரண பேருந்துக்கும், விரைவுப் பேருந்துக்கும் உள்ள வித்தியாசம், ஒரே ஒரு ஸ்டிக்கர் மட்டுமே.

‘விரைவுப் பேருந்து’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்படாத பேருந்துகள், சாதாரண பேருந்துகள் என்று நினைத்துக் கொள்வேன். ஏனெனில் அவற்றின் வேகத்தில் எந்த வேறுபாடும் கிடையாது. மழையில் நனைந்து விடுவோம் என்று பேருந்தில் ஏறினால் உள்ளேயும் சிலர் குடை பிடித்தபடி நிற்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ. 20488 கோடி நட்டத்தில் இயங்குவதாகவும், எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு காரணமாக கட்டணத்தை உயர்த்தியதாகச் சொல்கிறது தமிழக அரசு.

ஆனால், அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் என்ற போர்வையில் போக்குவரத்துக் கழகத்தில் பலர் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கி வருவதாக சொல்கின்றனர்.

வாங்காத உதிரி பாகங்களுக்கு போலி கணக்கு எழுதுவது முதல் எல்லாவற்றிலும் ஊழல் நிறைந்திருக்கும்போது நஷ்டம் வராமல் என்ன செய்யும்? அடிப்படை நிர்வாக கட்டமைப்பில் உள்ள நிர்வாக குளறுபடிகளைச் சரிசெய்திடாமல் வெறுமனே கட்டணத்தை உயர்த்தினால் மட்டும் இழப்பில் இருந்து மீண்டு வந்துவிட முடியுமா?

மாட்டை அடக்க உரிமை கேட்டு போர்க்கொடி தூக்குவதும், மனித வதையைக் கண்டும்காணாமல் விலகி நிற்பதும் தமிழர்களின் மாறுபட்ட இருவேறு குணங்கள். அதை அதிகாரத்தில் இருப்பவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தப் புத்தாண்டு புதிய நலன்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட நலன்களும், வளங்களும் யாருக்கு என்பதை இப்போது மக்களுக்கு நன்றாகவே விளங்கியிருக்கக் கூடும்.

– பேனாக்காரன்.