Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசியலுக்கு வர தயங்குவது ஏன்?; ரஜினி விளக்கம்!

ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக இன்று (டிசம்பர் 26, 2017) கூறினார். ரசிகர்களுடனான புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த மே மாதம் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, “நம்மை யார் விமர்சித்தாலும் அதைக்கண்டு அஞ்சாதீர்கள். எதிர்ப்புகள் இருக்கத் தான் செய்யும். தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நான் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறா? போருக்கு தயாராக இருங்கள்” என்றார்.

தேர்தலைத் தான் அவர் போர் என்ற குறியீடு மூலம் உணர்த்தியதாகவும், நிச்சயமாக அவர் அரசியலில் நுழைவது உறுதியாகவிட்டது என்றும் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதையடுத்து, காலா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது காலா படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில், எஞ்சியுள்ள 17 மாவட்ட ரசிகர்களை சென்னையில் இன்று (டிசம்பர் 26, 2017) முதல் அவர் சந்தித்து வருகிறார். வரும் 31ம் தேதி வரை அவர் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

சில நாள்களுக்கு முன் ரஜினியை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்த தமிழருவி மணியன், ரசிகர்களுடனான சந்திப்பின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து வரும் 31ம் தேதி ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறியிருந்தார். அதை இன்று ரஜினிகாந்தும் ரசிகர்கள் மத்தியில் அறிவிப்பாக வெளியிட்டார். இதனால், தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ரஜினி மேலும் பேசுகையில், ”ரசிகர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி. காலா படப்பிடிப்பு காரணமாக சந்திப்பு தாமதமானது. நான் நடித்த ‘முள்ளும் மலரும்’ படத்தை பார்த்த பிறகு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.

அரசியல் விஷயமாக என்ன சொல்லபோகிறேன் என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு ஆர்வம் உள்ளதோ இல்லையோ ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. போர் வரும்போது பார்க்கலாம் என கூறியிருந்தேன். போர் என்றால் தேர்தல். ஏன் இழுத்தடிக்கிறார் என பலர் நினைக்கின்றனர். இப்போது போர் வந்துவிட்டதா?

அரசியல் எனக்கு புதிது அல்ல. 1996 முதல் அரசியலில் உள்ளேன். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், ஆழம் அனைத்தும் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்.

போருக்கு சென்றால் ஜெயிக்கணும். போரில் வெற்றி பெற பலம் மட்டும் போதாது. வியூகம் முக்கியம். அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிக்க உள்ளேன். அன்று என்ன முடிவு எடுக்க போகிறேன் என்பதைதான் தெரிவிக்கவுள்ளேன்,” என்றார்.

அரசியலுக்கு வர விருப்பம் இல்லையென்றால், ரஜினி இப்படி குறிப்பிட்ட ஒரு தேதியை குறிப்பிட்டு அறிவித்திருக்க தேவையில்லை. தவிர, புத்தாண்டுக்கு முந்தைய தினம் எதிர்மறையான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் முடிவையும் அவர் எடுக்கவே மாட்டார். எனவே புத்தாண்டு பரிசாக ரஜினி தனது ரசிகர்களுக்கு கொடுக்கப் போவது, அரசியல் நுழைவுதான். அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.