Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

 

சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு கடுமையாக வலுத்துள்ள நிலையில், இன்று (ஜூலை 23, 2018) மேம்பாலம் கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்ய வந்த ஊழியர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை கைது செய்து விடுவோம் என்று காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 186 ஹெக்டேர் நிலங்கள், தனியார் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் ஆகும்.

 

 

சேலம் மாவட்டம் ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, குப்பனூர், நிலவாரப்பட்டி, சித்தனேரி, பாரப்பட்டி, பூலாவாரி அக்ரஹாரம் உள்ளிட்ட 20 கிராமங்களின் வழியாக எட்டு வழிச்சாலை செல்கிறது. விவசாய நிலத்தை அழித்துப் போடப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு மேற்கண்ட அனைத்து கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

மக்களின் எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளிய சேலம் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் உதவியுடன் பசுமைவழிச்சாலைக்குத் தேவையான விளை நிலங்களை கையகப்படுத்தி, முட்டுக்கல் பதித்தனர். அடுத்தக்கட்டமாக துல்லிய அளவீடு செய்யும்  பணிகளும் முடிவுற்றன.

 

 

இந்நிலையில், எட்டுவழிச்சாலை செல்லும் சில பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. மேம்பாலம் கட்டப்படும் இடத்தில் தூண்கள் எழுப்புவதற்கேற்ப மண்ணின் தரம் உள்ளதா என்பதை அறிய, இன்று குள்ளம்பட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மண் பரிசோதனை செய்தனர். முன்னெச்சரிக்கையாக 20க்கும் மேற்பட்ட காரிப்பட்டி போலீசாரும் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டனர்.

 

குள்ளம்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், அன்பு ராதா, மூக்காயி, முத்து, சித்ரா, மணிகண்டன், செல்வி, மற்றொரு மணிகண்டன், அரவிந்த் உள்பட பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டு வந்து, பட்டா நிலத்துக்குச் சொந்தக்காரரான கணேசன் என்பவர் நிகழ்விடத்தில் இல்லாதபோது, அவருடைய நிலத்தில் மண் பரிசோதனை செய்வது நியாயமா? இந்தப் பணிகளை உடனடியாக நிறுத்துங்கள் என்று கூறினர்.

 

 

போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். வேண்டுமானால் கோர்ட்டில் வழக்குப் போடுங்கள். இங்கே எதுவும் கலாட்டா செய்யக்கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசினர்.

 

திடீரென்று விவசாயி பன்னீர்செல்வம், மண் பரிசோதனை இயந்திரத்தை இயக்கக்கூடாது… ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் என்று கூறியவாறே, அங்கே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் நெருங்கிச்சென்றார். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த ஒரு காவலர், பன்னீர்செல்வத்தை குண்டுக்கட்டாக தூக்கி, அங்கிருந்து அப்புறப்படுத்தினார். மற்ற போலீசார் அவர் மீது அடிக்கச் செல்வதுபோல பாய்ந்து சென்றனர்.

 

 

பாதுகாப்புப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், காவலர் ஜெகதீஸ்குமார் ஆகியோர், தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தால் கைது செய்வோம் என்று மிரட்டினர். அதற்கு விவசாயிகள், ‘வேண்டுமானால் கைது செய்யுங்கள். அதற்காக அவர் மீது கைவைப்பது எந்த விதத்தில் நியாயம்?,’ என்று வாக்குவாதம் செய்தனர். சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களம்போல் காட்சி அளித்தது.

 

கொதிப்பின் உச்சத்தில் இருந்த விவசாயிகள், ‘எங்களை இதே இடத்தில் சுட்டு வீழ்த்திவிட்டு இந்த இடத்தை எடுத்துச்செல்லுங்கள். எங்கள் நிலத்தை விட்டுவிட்டு நாங்கள் அகதிகளாக போக வேண்டியதுதானா?. எங்களை ஏன் பிச்சைக்காரர்களாக ஆக்குறீங்க?,’ என்றனர்.

 

 

மூதாட்டிகள் சிலர் போலீசாருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சாபம் விட்டனர். யூனிஃபார்ம் போட்டுவிட்டால் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா? என்றும் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். விவசாயி அன்பு ராதா என்பவர், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்தைப் பார்த்து, முட்டாள்தனமாக கேள்வி கேட்கிறீர்கள் என்று சொன்னார். இதனால் கொதிப்படைந்த இன்ஸ்பெக்டர், யாரை முட்டாள்னு சொல்ற? நீதான் முட்டாள். ஜாக்கிரதையாக பேசு என மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசினார்.

 

வருவாய் அலுவலரை எங்களிடம் பேசச்சொல்லுங்கள் என்று சில விவசாயிகள் சொன்னதற்கு, காவலர் ஜெகதீஸ்குமார் ராமலிங்கபுரத்திற்கு வருவாய் அலுவலர் வந்தாரே அப்போது அவரிடம் கேட்க வேண்டியதுதானே? என்றார். அதற்கு விவசாயி பன்னீர்செல்வம், ‘டிஆர்ஓவிடம் கேட்டோம். வளர்ச்சி வளர்ச்சி என்கிறீர்களே எங்களோட விவசாயத்தால் வளர்ச்சி வரவில்லையா? என்று கேட்டோம். அதற்கு டிஆர்ஓ சிரித்துக்கொண்டே போய்விட்டார்,Õ என்று கூறி காவலர் ஜகதீஸ்குமாரின் பதிலடி கொடுத்தார்.

 

 

இந்தக் காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நம்மிடம் வந்த காவலர் ஜெகதீஸ்குமார், ‘நீங்கள் வீடியோ, ஃபோட்டோ எடுப்பதால்தான் அவர்களும் ஆவேசம் அடைகின்றனர். படம் பிடித்தவரை போதும். விட்டுவிடுங்கள்,’ என்று கூறி நம்மையும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தார்.

 

 

இதுகுறித்து தகவல் அறிந்து மாலை 6 மணியளவில் சாவகாசமாக அங்கு வந்த வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்ற பிறகுதான் மண் பரிசோதனை நடத்தப்படுவதாக கூறினார். பிறகு ஒருவழியாக விவசாயிகளும் சமாதானம் அடைந்தனர். இதற்கிடையே, மண் பரிசோதனை செய்யும் பணிகளையும் தொழிலாளர்கள் முடித்திருந்தனர்.

 

 

சேலத்தில், எட்டு வழிச்சாலை விவகாரம் இன்னும் சூடு தணியாமல்தான் கிடக்கிறது.

 

#வீடியோ

 

– பேனாக்காரன்.