Thursday, May 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆசிரியர் நியமன ஊழல் கோப்புகள் மாயமானதா இல்லையா? பெரியார் பல்கலை மழுப்பல்!

 

சேலம் பெரியார் பல்கலையில் ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காத்திரமான புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய கோப்புகள் விவகாரத்தில் மழுப்பலான பதிலைச் சொல்லி செனட் கூட்டத்தை ஒப்பேற்றியுள்ளது பல்கலை நிர்வாகம்.

 

சேலம் பெரியார் பல்கலையில் கடந்த 20ம் தேதி ஆட்சிப்பேரவைக்குழு எனப்படும் செனட் கூட்டம் நடந்தது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டிய இக்கூட்டம், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடந்து முடிந்துள்ளது.

பல்கலை செனட் அரங்கில் காலை 11 மணிக்கு துவங்கிய இக்கூட்டம், மதியம் 1.30 மணிக்கு முடிந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசுக்கல்லூரி, உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட செனட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடக்கும் கூட்டம் என்பதால், முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவின் தற்கொலை மர்மம், முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதன் பணிக்காலத்தில் முறையற்ற பணி நியமனங்களில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் புகார்கள் குறித்தெல்லாம் அனல் தெறிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

துணைவேந்தர் குழந்தைவேல்

ஆனால், நமுத்துப்போன பட்டாசாக, வெறும் உப்புமா கூட்டமாகவே முடிந்து போனது. எனினும், சேலம் சவுடேஸ்வரி உதவி பெறும் கல்லூரி, நாமக்கல் கேகேசி கல்லூரி பிரதிநிதிகள் மட்டும் ஊசி பட்டாசு போல சில கேள்விகளை கேட்டனர். மற்ற உறுப்பினர்கள் வறுத்த முந்திரி, காபிக்கு மட்டுமே வாய் திறந்தனராம்.

 

பெரியார் பல்கலையில் 15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு துணைவேந்தர் குழந்தைவேல், ‘இதுகுறித்து எதிர்வரும் நிதிக்குழுவில் பொருள்நிரல் சமர்ப்பிக்க 99வது ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. நிதிக்குழுவின் வழிகாட்டுதல்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என பட்டும்படாமலும் ஒரு பதிலை தெரிவித்துள்ளார்.

 

தகுதியான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்த கேள்விக்கும், ‘தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது,’ என்று மட்டும் கூறி அத்துடன் அந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது, பல்கலை நிர்வாகம்.

பதிவாளர் மணிவண்ணன்

கூட்டத்தில் பெரிய அளவில் சலசலப்புகள் ஏழாமல் பல்கலை தரப்பு சாமர்த்தியமாக காய்களை நகர்த்திவிட்டாலும், கூட்டத்திற்கு முன்பு வழங்கப்பட்ட அஜண்டாவிலும் பல கேள்விகளுக்கு படுமொக்கையான பதில்களையே அச்சு வடிவில் தெரிவித்துள்ளது.

 

‘கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?’ என்பதுபோல் உள்ள புகார்கள் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்காமலும், கேள்விகளுக்கு உரிய பதிலும் தராமல் போனாலும்கூட பெரும்பாலான செனட் உறுப்பினர்கள், ‘நாட்டாமை’ படத்தில் வரும் ‘மிக்சர் பார்ட்டி’ போல் ஒப்புக்கு கலந்து கொண்டுவிட்டு ‘சிட்டிங் அலவன்ஸ்’ வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்துள்ளனர்.

 

செனட் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அஜண்டாவில் இடம்பெற்றிருந்த சில கேள்விகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் கூறினர்.

 

முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்துவிட்டுப்போன கடிதத்தில், அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன், இப்போதைய பல்கலை டீன் பேராசிரியர் கிருஷ்ணகுமார் (இவரை ஊழலுக்கு மூளையாக செயல்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்), இந்நாள் பதிவாளர் மணிவண்ணன், அலுவலக ஊழியர்கள் நெல்சன், ராஜமாணிக்கம், குழந்தைவேல், ஸ்ரீதர் ஆகிய ஏழு பேரும்தான் தனது தற்கொலைக்குக் காரணம் என தெரிவித்து இருந்தார்.

 

அந்தக் கடிதத்தில், முன்னாள் துணைவேந்தரின் ஊழலும், அதற்கு மற்றவர்கள் துணை போனது குறித்து விரிவாகவும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் மீது துறை ரீதியான நடவடிக்க எடுக்கப்பட்டு உள்ளதா என, செனட் உறுப்பினர்கள் கேள்வி எழுபியதற்கு, பல்கலை நிர்வாகம் சீரியஸான பதிலைச் சொல்லும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்தக் கேல்விக்கு, ‘அங்கமுத்து தற்கொலை வழக்கு காவல்துறையின் விசாரணையில் உள்ளது’ என்று மொக்கையான பதிலைச் சொல்லி முடித்துக் கொண்டது.

பேராசிரியர் கிருஷ்ணகுமார்

அதேபோல் பல்கலை ஊழல் சம்பந்தமான முக்கிய கோப்புகள் மாயமானது குறித்த கேள்விக்கும், ‘கோப்புகள் எதுவும் காணாமல் போகவில்லை. முன்னாள் பதிவாளர் கோப்புகளை ஒப்படைக்காமல் சென்றது குறித்து மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது,’ என்று பல்கலை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

 

ஆனால் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பல்கலையின் முக்கிய கோப்புகள காணவில்லை என்றுதான் பதிவாளர் மணிவண்ணன் புகார் அளித்திருந்தார். அதேநேரம் செனட் குழுவுக்கு அளித்திருந்த பதிலில், கோப்புகள் காணாமல் போகவில்லை என்று முன்னுக்குப்பின் முரணான பதிலைத் தெரிவித்துள்ளனர்.

 

சம்பிரதாயமாக கூட்டம் முடிந்த நிலையில், செனட் உறுப்பினர்களுக்கு பல்கலையின் ‘ஃபுட் கோர்ட்’ அரங்கத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. தனியார் உயர்தர சைவ உணவகத்தில் இருந்து, ஸ்வீட், காரம், பாயசத்துடன் உணவு பதார்த்தங்கள் தருவிக்கப்பட்டு விருந்து வழங்கப்பட்டது.

 

பயணப்படி, அமர்வுப்படி பெற்றுக்கொண்ட திருப்தியில் பறந்த செனட் உறுப்பினர்கள், ‘பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணப்பபடியும் இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும்,’ என்று கேட்கத் தவறவில்லை.

 

 

– ஞானவெட்டியான்.