Friday, May 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘ரஜினி, ஒரு பயந்தாங்கொள்ளி’ என்றும், ‘விஸ்வரூபம்’ படத்த வெளியிட கமல்ஹாஸன் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகை, அதிமுக, திமுக, பாஜக செயல்பாடுகள் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விஜயகாந்த், தனக்கே உரிய உடல்மொழியில் பதில் அளித்தார். உடல்நலம் தேறி வந்திருக்கும் விஜயகாந்தின் குரல், சில இடங்களில் குளறுவதுபோல் இருந்தது.

நடிகர் கமல்ஹாஸன், அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே என்று கேட்டபோது, ”அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு…? அவர் உண்மையைத்தான் சொல்கிறார்,” என்று பதில் அளித்தார்.

கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு, ”விஸ்வரூபம் படம் சர்ச்சையில் சிக்கியபோதே அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டுமே. அப்போது ஏன் வரவில்லை…அந்தப் படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டபோது பிரச்னையை சமாளிக்க அவர் சிலருக்கு ரூ.25 லட்சம் கொடுத்தார். அதன் பிறகுதான் படம் வெளியானது.

அது யாருக்கு, எந்த கட்சிக்குனு சொல்ல மாட்டேன். அது உங்களுக்கும் தெரியும்…எனக்கும் தெரியும்…அந்தப் பிரச்னைய மனசுல வெச்சிக்கிட்டுதான் இப்போது விமர்சனம் பன்றாரு. அவருக்கு பின்னால திமுக இல்லேனா பிஜேபி யாராவது இயக்கலாம்…” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தமிழருவி மணியன் மூலமாக சொல்வது எதனால்? என்ற கேள்விக்கும் விஜயகாந்த் சர்ச்சைக்குரிய பதிலைச் சொன்னார்.

அதற்கு அவர், ”ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி. நான் ஓப்பனா சொல்றேன். எதா இருந்தாலும் பயப்படக்கூடாது. நாளைக்கு நம்மள யாராவது குறை சொல்லுவாங்கனு ரஜினி நினைக்கலாம்… தமிழருவி மணியன் கலைஞர முதல்வர் ஆக்கணும்னு சொன்னாரு…அப்புறம் ஜெயலலிதாவ சொன்னாரு…அப்புறம் என்னைக்கூடத்தான் முதல்வர் ஆக்குவேனு சொன்னாரு….இப்போ ரஜினியை முதல்வர் ஆக்குவேனு சொல்றாரு. ரஜினி, கமல் யார் அரசியலுக்கு வந்தாலும் இந்த விஜயகாந்துக்கு பயமில்லை. விஷால், விஜய், அஜித், சூர்யா எல்லாரும் அரசியலுக்கு வரட்டுமே,” என்றார்.

உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கவில்லை என்பதால்தானே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினீர்கள்? என்ற கேள்விக்கு, ”அது…அப்படிலாம் இல்ல…நதிகள இணைப்பேனு சொல்லிட்டு இணைக்கலேல….அதான் கூட்டணியில இருந்து வெளிய வந்துட்டேன். பிஜேபி ஊழல் செய்யலேனு சொல்லிக்கிட்டே, இங்க ஊழல் கட்சியதான் தூக்கிப்பிடிக்குது,” என்றார்.

மேலும், ”அதிமுக ஆட்சியில் ஊழல்தான் நடக்குது. எதுக்கு எடுத்தாலும் 30 பர்சன்ட் கமிஷன் கேட்கறாங்க. இந்த ஆட்சி சீக்கிரமே கவிழ்ந்திடும்,” என்றும் விஜயகாந்த் கூறினார். இணைப்பு.