Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இலங்கை அணி 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோற்று வாஷ் – அவுட் ஆனது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி, 3&0 கணக்கில் வென்று இருந்தது. நான்காவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று (செப். 3) நடந்தது. இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி வீரர்கள், கடந்த இரு நாட்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ரஹானே, ரோஹித், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் கேப்டன் தரங்கா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக திரிமான்னே 67 ரன்களும், மாத்யூஸ் 55 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவர் முடிவதற்கு இரண்டு பந்துகள் மீதம் இருந்த நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி 238 ரன்கள் எடுத்தது. புவனேஷ்¢வர்குமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. முதல் விக்கெட் ஜோடியான ரோஹித் ஷர்மா 16 ரன்கள், ரஹானே 5 ரன்கள் எடுத்து வெறியேறினர். இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி 110 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். 30வது சதமும்கூட. அவருக்கு பக்கபலமாக ஆடிய மனீஷ் பாண்டே 36 ரன்களில் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக ஆடி 63 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 46.3 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி 110 ரன்களும், தோனி 1 ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரிலும் இலங்கை அணி முழுமையாக வாஷ் -அவுட் ஆனது. ஏற்கனவே அந்த அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்தியாவிடம் 3-0 கணக்கில் முழுமையாக பறிகொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.