Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை!; 46 ஆண்டுகள் சிறை!!

சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில் கொடூரன் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 19, திங்கள் கிழமை) மாலை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அவனுக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:

ஹாசினி

சென்னை குன்றத்தூர் முகலிவாக்கத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாபு. சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களுடைய மகள் ஹாசினி (6). அதே குடியிருப்பைச் சேர்ந்தவர் சேகர் – சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் (24). பொறியியல் பட்டதாரி.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் தஷ்வந்த். அவள் வலியால் துடித்து கூச்சலிட்டாள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டால் என்ன செய்வது என அச்சம் அடைந்த தஷ்வந்த், அவளை கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் தடயத்தை மறைப்பதற்காக, யாருக்கும் தெரியாமல் சிறுமியின் சடலத்தை அனகாபுத்தூர் பகுதிக்குக் கொண்டு சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

நெஞ்சை உலுக்கும் இந்த நிகழ்வில் தஷ்வந்த்தான் குற்றவாளி என்பதை ஊர்ஜிதம் செய்த மாங்காடு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். அவர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதால், குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பின்னர் முகலிவாக்கம் குடியிருப்பைக் காலி செய்த சேகர் – சரளா தம்பதியினர் மகனை அழைத்துக்கொண்டு குன்றத்தூர் சம்பந்தம் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வீட்டில் இருந்த தாய் சரளாவிடம் கைச்செலவுக்காக 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார் தஷ்வந்த். அவர் தர மறுக்கவே, ஆத்திரம் அடைந்த தஷ்வந்த் பெற்ற தாயென்றும் பாராமல், அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல், மோதிரம் உள்பட 25 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.

விசாரணையில் அவர் மும்பையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து மும்பை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது வழியில் மீண்டும் தப்பி ஓடினார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தஷ்வந்தை கோழி அமுக்குவது போல் அமுக்கிப் பிடித்து கைது செய்தனர்.

தஷ்வந்த்தின் தாய் சரளா.

5 பிரிவுகளில் வழக்கு:

பின்னர் தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஹாசினி கொலை வழக்கு, கடந்த ஓராண்டாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தஷ்வந்த் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 363 (கடத்தல்), 302 (கொலை), 356 (பாலியல் ரீதியாக தாக்குதல்), 354 (பி) (பாலியல் வன்புணர்வு), 201 (தடயத்தை மறைத்தல்) ஆகிய ஐந்து பிரிவுகளின் வழ க்குப்பதிவு செய்து, விசாரணை நடந்தது.

பாலியல் தாக்குதலிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. போக்ஸோ சட்டப்படி ஓராண்டுக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருதரப்பு வாதங்களும் கடந்த 14ம் தேதி நிறைவு பெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தஷ்வந்த் குற்றவாளி:

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி புழல் சிறையில் இருந்து தஷ்வந்த், இன்று காலையிலேயே செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார். அவரும், இருதரப்பு வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள், ஹாசினியின் பெற்றோர், தஷ்வந்தின் தந்தை ஆகியோர் மட்டும் நீதிபதி வேல்முருகனின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டது. பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.

கொடூரன் தஷ்வந்த்.

தீர்ப்பு காலை 11 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை சரியாக 3 மணிக்கு தீர்ப்பை கூறினார் நீதிபதி வேல்முருகன். ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என்று மட்டும் ஒரு வரியில் தீர்ப்பு அளித்தார் நீதிபதி. எனினும், தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தை ஒத்தி வைத்தார்.

தூக்குத் தண்டனை:

இன்று மாலை 4.40 மணியளவில் நீதிபதி வேல்முருகன் தஷ்வந்துக்கு போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியை பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை செய்ததுடன், குற்றத்தை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளித்தார். இத்துடன், 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்

இந்த வழக்கில் தஷ்வந்துக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக முன்வராததால் தானே வாதாடினார். மொத்தம் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அம்பத்தூர் காவல்துறை உதவி ஆணையர் கண்ணன் பேட்டி:

போக்ஸோ சட்டத்தின் கீழ் பெறப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. அறிவியல் பூர்வமாக சாட்சிகளை திரட்டி, நிரூபித்தோம். எதிரி படித்த பட்டதாரி. கொலையை மறைப்பதற்கு எல்லாவிதமான சதி திட்டங்களையும் தீட்டியுள்ளான். அவனுக்கு இப்போது உச்சபட்ச தண்டனை கிடைத்துள்ளது. குழந்தையின் சடலம் முழுமையாக கிடை க்கவில்லை. பாதிக்கும் மேல் எரிந்த நிலையில் இருந்தது.

இத்தனையும் செய்துவிட்டு தஷ்வந்த் நல்லவன் போல் வெளியில் நடமாடிக் கொண்டிருந்தான். காவல்துறைக்கும் அவன்தான் தொலைபேசியில் தகவல் அளித்தான். அவனது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், தொடர்ந்து கண்காணித்தோம். அவன் விட்டுச்சென்ற ஒவ்வொரு தடயத்தையும் கவனமாக சேகரித்தோம். இந்த வழக்கில் தடயவியல் நிபுணர் சோபியா பங்களிப்பும் அதிகம். மாங்காட்டை சேர்ந்த பலர் தாமாகவே முன்வந்து அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை அளித்தனர். அவர்களுக்கும் நன்றி.

குறைச்சுக் கொடுங்கய்யா…:

முன்னதாக கொலை குற்றவாளி தஷ்வந்த், தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியுடன் முறையிட்டார். ஆனால், ஹாசினி தரப்பு வழக்கறிஞர்களும், பெற்றோரும் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினர்.

மேலும் தஷ்வந்த், வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் என்னைப்பற்றி முரணான தகவல்களை கூறுகின்றனர். அவர்கள் கூறுவதை அப்படியே செய்தியாக போடாதீர்கள். தீர்ப்பில் நீதிபதி என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய்தியாக போடுங்கள் என்று ஊடகத்தினரைப் பார்த்து தஷ்வந்த் கேட்டுக்கொண்டார்.