Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாஜகவுக்கு ரஜினி சொம்பு தூக்கினாரா?: கமல் ரசிகர்கள் கிண்டல்

பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மையே சேவை’ திட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் டுவிட்டரில் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ரஜினி – கமல் ரசிகர்களிடையே சமூகவலைத்தளங்களில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் முதுமை காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நல்லகண்ணு, மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் போன்ற மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைத்து தரப்பு மக்களாலும் ஈர்க்கப்படவில்லை. சீமான், திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் மாற்று அரசியலை முன்னெடுக்கின்றனர். ஆனாலும், அவர்களை முதல்வர் நாற்காலிக்கான அந்தஸ்தில் வைத்துப் பார்க்க மக்கள் ஏனோ தயங்குகின்றனர்.

இத்தகைய இடைவெளியில்தான் ரஜினி, கமல்ஹாசன் ஆகிய இரு முன்னணி நடிகர்களுக்கும் அரசியல் களம் காணும் ஆசை உச்சம் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினி, ‘போருக்குத் தயாராக இருங்கள்’ என்று தனது அரசியல் உள்ளக்கிடக்கையை வெளியிட்டார். விரைவில் ரஜினி சினிமா ஒப்பனையை கலைத்து, அரசியல் அவதாரம் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

நடப்பு அரசியல் நிலையை தொடர்ந்து டுவிட்டரில் பகடி செய்து வரும் நடிகர் கமல்ஹாசனும், நேரடி அரசியலுக்கு தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார். பினராயி விஜயன், அரவிந்த் கேஜரிவால் போன்றோரை சந்தித்துப் பேசி வருகிறார். திராவிடம், பெரியாரியம் கலந்த சித்தாந்தத்தை கமல்ஹாசன் முன்வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ரஜினிகாந்த், தேசியம் பேசி வருகிறார்.

திரைத்துறையைக் கடந்தும் ரஜினி, கமல் ஆகியோரிடையே நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. ஆனாலும், அவர்களுடைய ரசிகர்கள் அன்று எப்படியோ அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறார்கள். 80, 90&களில் ரஜினி, கமல் படங்கள் வெளியாகும்போது எப்படி இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்வார்களோ அதே பாணியை இப்போது டுவிட்டர், முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் கடைப்பிடிக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ”பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மையே சேவை’ திட்டத்திற்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மையாக இருத்தல் தெய்வீகமானது,” என்று கருத்து தெரிவித்திருந்தார். ரஜினிக்கு பாஜக மீதும், பாஜகவுக்கு ரஜினி மீதும் ஓர் அளப்பரிய பாசம் இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வரும் நிலையில், ‘தூய்மையே சேவை’ திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், கமல் ரசிகர்கள் அவரை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்துள்ளனர்.

நடிகர் விஜய், ஆரம்பத்திலிருந்தே ரஜினியின் ரசிகராக காட்டிக் கொள்பவர். ஆனாலும் அவருடைய ரசிகர்கள்கூட ரஜினியை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

ரஜினி ரசிகர் ஒருவர், ”இப்போ வந்து ரஜினி, மோடிக்கு சொம்படிக்கிறார்னு கதறுவானுங்க. டேய், இது மோடிக்காக இல்ல. நாட்டுக்காக. சில ஜென்மங்களுக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது,” என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக கமலை நியமித்தபோது, அவர் அப்போது அந்த திட்டத்தை ஆதரித்து பேசிய வீடியோவையும் வெளியிட்டு கமல் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

கமல் ரசிகர்கள் எல்லை கடந்து, ரஜினியை தனிப்பட்ட முறையிலும் தாக்கி எழுதியுள்ளனர். அவருடைய முதுமை, வழுக்கை தலை ஆகியவற்றையும் கேலி, கிண்டலாக எழுதியுள்ளனர். போதாக்குறைக்கு ஆபாச வார்த்தைகளாலும் பலர் ‘டுவீட்’ செய்துள்ளனர். அதற்கு ரஜினி ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்தாலும், அவர்கள் கொச்சையான வார்த்தைகளை தவிர்த்துள்ளனர்.

”தமிழ்நாட்டில் உள்ள திமுக, பாமக, காங்கிரஸ், நாம் தமிழர், விசிக, மதிமுக என அனைத்து கட்சிகளும், உங்கள் திரைத்துறை சார்ந்த பலரும் பாஜகவை காரித்துப்பும்போது…” என்று ரஜினியை தாக்கி ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், ”தமிழ்நாடே எதிர்த்த நீட்&க்கு வாயை மூடிட்டு இருந்தீங்க” என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். அதற்கு ஒருவர், ”அப்போது வாயில புண். அதான் பேசல…ஹி…ஹி…” என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.

இன்னொரு பதிவர், ”ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழனுக்கு தேவையான செருப்படிதான்,” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவர், ”பணமதிப்பிழப்பிற்கு ஆதரவு கொடுத்தார். புதிய இந்தியா பிறந்தது. இப்போது இதற்கு…அவ்வளவுதான்….” என்று கிண்டலடித்துள்ளார்.

சிலர் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளை வைத்து மீம்ஸ் தயாரித்து, அதன் மூலமும் ரஜினியின் கருத்தை கிண்டல் செய்துள்ளனர். ஒருவர், ”போர் தொடங்கிருச்சா இல்லையா…தொடங்குமா தொடங்காதா…உங்கள நம்பலாமா நம்பக்கூடாதா…” என்று சந்திரமுகி படத்தில் ரஜினியும், வடிவேலும் பேய் பங்களாவில் பேசும் வீடியோ காட்சிகளுடன் தொடர்புபடுத்தி விமர்சித்துள்ளார்.

சுந்தர்கமல் என்ற பதிவர், ”நாங்க என்ன செய்கிறோமோ அதை அப்படியே செய்யற” என்று மீம்ஸ் பதிவிட்டிருந்தார். அதற்கு ரஜினி ரசிகரான ராஜேஷ் என்பவர், ”காசு வாங்கிட்டு கூவுர கமலோட ரசிகன் எல்லாம் ரஜினிய பத்தி பேச தகுதியே கிடையாதுடா,” என்று காட்டமாக பதிலிட்டுள்ளார்.

பழுவேட்டரையர் என்ற கமல் ரசிகர், ”டேய் நீ இன்னும் இங்கதான் இருக்கியா. நாட்டுல இருந்து முதல்ல உன்னமாதிரி குப்பைகள தாண்டா கிளீன் பண்ணனும். ஓடு ஓடு,” என்று வடிவேலு காமெடி காட்சியை வைத்து ஒரு ‘மீம்’ பதிவிட்டிருந்தார். அதற்கு ‘வாங்க பழகலாம்’ என்ற ரஜினி ரசிகர், ”கமலு வியாபாரத்துக்கு சொம்படிக்கிற நீயெல்லாம் இங்க திரியும்போது…” என்று கவுண்டமணி காமெடி காட்சியை வைத்து சுடச்சுட ஒரு மீம் பதிவிட்டுள்ளார்.

‘அர்ஜூன் 2.0’ என்ற ரஜினி ரசிகர், ”ஏன்டா நல்லவனுங்களா இதுவே விஜயோ, கமலோ சொல்லியிருந்தா, ‘நாட்டுப்பற்று’னு சொல்லுவீங்க. ஆனா ரஜினி சொன்னா மோடிக்கு ஜால்ராவா…என்னங்கடா…த்தூ…” என காரி உமிழ்ந்திருந்தார். விஜய் ரசிகர் ஒருவர்ரஜினியை ‘சொட்டை’ என்று கேலி செய்திருந்தார். அதற்கும் ரஜினி ரசிகர்கள் உடனுக்குடன் சூடாக பதிலடி கொடுத்திருந்தனர்.

‘வாத்தியார் பாலா’ என்பவர், ”பார்சிலோனாவுக்கு முடி நட போன முண்டைங்க எல்லாம் 67 வயசு ஆளப்பார்த்து சொட்டைனுதுங்க. காலக்கொடும பைரவா…” என்று நடிகர் விஜயையும் கிண்டலடித்து இருந்தனர். சதீஷ் என்ற பதிவர், ”தலைவர் ரசிகர்கள் யாரையும் விமர்சனம் பண்ண வேண்டாம். நாயோட குணமே குரைக்கிறதுதான். விடுங்க. அதுவே குரைச்சு குரைச்சு வாய் வலிச்சு செத்துடும்,” என்று நக்கலும், கிண்டலும் கலந்தவாறு பதிலடி கொடுத்திருந்தார்.

ரஜினியின் டுவிட்டர் பக்கத்தில் கமல், விஜய் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக தாக்கி கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். அவற்றில் பல, ஏட்டில் எழுத முடியாதவை.

அ திகார வெறியும், பதவி மோகமும் எந்தளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ முடியும், அறத்தின் எலும்பை முறிக்க முடியும் என்பதற்கு இன்றைய தமிழக ஆளுங்கட்சியினரைப் பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அரசியல் களத்திற்கே வராத நிலையிலும், ரஜினி, கமல், விஜய் ரசிகர்களின் மோதலும், டுவிட்டரில் பதிவிடும் வார்த்தை பிரயோகங்களும் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளைவிட கேவலமானதாகவே இருக்கிறது.

ஒருவேளை ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால், அப்போது டுவிட்டரில் சண்டைபோட்ட இவர்களில் ஒரு சிலர் சீட் கிடைத்து, தேர்தலில் வெற்றி பெற்றால், அப்போதும் தமிழகத்தில் மாற்று அரசியல் வராது. அதற்கு டுவிட்டரில் மோதிக்கொள்ளும் அந்த நடிகர்களின் ரசிக கண்மணிகளின் சம்பாஷணைகளே சாட்சி.

இணைப்பு: தூய்மை இந்தியா திட்டம் குறித்து கமல்ஹாசன் கருத்து.

– வெண்திரையான்.