Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முதல்வர் மருத்துவக்குழு டாக்டர்கள் குறைப்பு: ஓரவஞ்சனை ஏன்?

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முதல்வருடன் பின்தொடர்ந்து செல்லும் மருத்துவக்குழுவின் பலம் திடீரென்று குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் போன்ற முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போது, அவர்களுக்கு ‘ஹை செக்யூரிட்டி’ போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். தவிர, அந்தந்த மாவட்டக் காவல்துறையினரும் பாதுகாப்புக்குச் செல்வது நடைமுறை.

போலீஸ் பந்தோபஸ்து தவிர, விஐபிக்களை பின்தொடர்ந்து மருத்துவக்குழுவினர்களுடன் கூடிய ஓர் ஆம்புலன்ஸ் வாகனமும் செல்லும். அந்த வாகனத்தில் அவசர சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டு இருக்கும். பொதுவாக, இருதயவியல் மருத்துவர், பொது மருத்துவர், சிறுநீரகவியல் மருத்துவர், எலும்புமுறிவு மருத்துவர் மற்றும் இவர்களுடன் ஒரு மயக்கவியல் மருத்துவரும் உடன் செல்வர்.

இவ்வாறு குறைந்தது ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் பின்தொடர்ந்து செல்வது நடைமுறை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது அந்தந்த மாவட்ட அரசு மருத்துவர்கள் குழு அந்த பொறுப்பில் தொடர்ந்து ஈடுபடும்.

சில நேரங்களில், ஒரே குழுவே ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளிலும் இடம் பெறக்கூடும். சுழற்சி முறையில் இக்குழுவில் மருத்துவர்கள் இடம் பெறுவார்கள். இந்த ஐந்து பேர் மருத்துவர் குழுவில், முதன்மை மருத்துவர் அந்தஸ்தில் உள்ள மருத்துவர் ஒருவர் இடம்பெற வேண்டியது பாதுகாப்பு நெறிமுறைகளின்படி கட்டாயமாகும்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (செப். 23) எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று இரவு சென்னை&கோவை வழியாக சேலம் வருகிறார். இரவு, சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை பகலில் கட்சிக்காரர்கள் சந்திப்பை முடித்துவிட்டு, கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள காரில் செல்கிறார்.

முதல்வர் செல்லும் கான்வாயில் உடன் செல்ல சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனமும், மருத்துவர்கள் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தமுறை ஒரு மயக்கவியல் மருத்துவரும், ஒரு பொது மருத்துவர் என இரண்டு பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

வழக்கமாக இடம்பெறக்கூடிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாததால், வழியில் ஏதேனும் துரதிர்ஷ்டவசமாக யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பெரிய குழப்பங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள், அரசு மருத்துவர்கள். மேலும், பணி ஒதுக்கீடு பெற்றுள்ள அனைவருமே உதவி மருத்துவர் அந்தஸ்தில் உள்ளவர்கள்.

மருத்துவக்குழு நெரிமுறைகள்படி முதன்மை மருத்துவர் ஒருவர் இடம் பெற வேண்டும். அந்த அந்தஸ்திலான மருத்துவர் இப்போது இடம் பெறாதது குறித்தும் மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதுபோன்ற நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டு வந்தது என்றும், இப்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்தகைய விதிகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சரியாக பின்பற்றுவதில்லை என்றும் சில மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது ஓரவஞ்சனையான நடவடிக்கை என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply