Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்!

 

சேலம் அருகே, லஞ்ச வழக்கில் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஏட்டு இளங்கோ ஆகிய இருவரும் இன்று (ஆகஸ்ட் 11, 2018) பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி சிலர் சேவல்கட்டு பந்தயம் நடத்தினர். இதற்கு காவல்துறையில் அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது. இதனை அப்பகுதி மக்கள் பலர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவதை அறிந்ததும் அங்கிருந்த பலரும் தெறித்து ஓடினர். அப்போது பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த வாகனங்களை எல்லாம் போலீசார் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

 

இந்நிலையில் மேட்டூர் அனல்மின் நிலைய ஊழியரான செந்தில் என்பவர், தன்னுடைய மோட்டார் சைக்கிளை கொடுத்து விடுமாறும், தான் சேவல்கட்டு பந்தயத்தை வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் தனக்கும் அந்த போட்டிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு செய்யாமல் மோட்டார் சைக்கிளை தர வேண்டுமானால் 5000 லஞ்சம் வேண்டும் என இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கேட்டுள்ளார். இதுகுறித்து செந்தில், சேலம் மண்டல லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். அவர்களது வழிகாட்டுதலின்பேரில் ரசாயனம் தடவிய பணத்தை நேற்று (ஆகஸ்ட் 10, 2018) செந்தில், இன்ஸ்பெக்டர் ரவீந்திரனிடம் கொடுக்க முயன்றார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரவீந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக ஏட்டு இளங்கோ என்பவரையும் கைது செய்தனர்.

 

கைதான இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர் ஒருவர் கைதாகி 24 மணி நேரம் சிறையில் இருந்தாலே அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதன்படி சேலம் சரக டிஐஜி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஏட்டு இளங்கோ ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.