Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 5000 லஞ்சம்; கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கைது!

 

மேட்டூர் அருகே, சேவல் சண்டையை வேடிக்கை பார்த்தவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 10, 2018) கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்ன தண்டா பகுதியில் ஆகஸ்ட் 3ம் தேதியன்று, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சேவல்கட்டு பந்தயம் நடந்தது. காவல்துறை அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர்.

 

காவல்துறையினர் வருவதைப் பார்த்ததும் சேவல்கட்டு நடத்திய போட்டியாளர்கள், பார்வையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களைக்கூட போட்டுவிட்டு தெறித்து ஓடினர். காவல்துறையினர் அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டு, கொளத்தூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

வாகனத்தைக் கேட்டு சின்ன தண்டாவைச் சேர்ந்த செந்தில் என்பவர் கொளத்தூர் காவல் நிலையம் சென்றார். அவர், சேவல்கட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. வேடிக்கை மட்டுமே பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்த காவல் ஆய்வாளர் ரவீந்திரன், உன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

இதுகுறித்து செந்தில் சேலம் மண்டல லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை இன்று கொளத்தூர் காவல் ஆய்வாளரிடம் செந்தில் கொடுத்தார். அதை வாங்க முயன்றபோது அங்கே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வாளர் ரவீந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

Leave a Reply