Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

-சிறப்பு செய்தி-

 

சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம்.

பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.

 

பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.

 

தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.

 

அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. பல ஆசிரியர்கள் போலி அனுபவ சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்திருப்பதையும், பணி நியமனங்கள் குறித்த பலருடைய ஆவணங்கள் தணிக்கைக்கு உட்படுத்தாமல் மறைக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி பல்கலைக்கு குட்டு வைத்திருக்கின்றனர் தணிக்கைக் குழுவினர்.

கற்பித்தல் அனுபவம் இல்லாத பேராசிரியர்களை சுட்டிக்காட்டும் அறிக்கை.

பல்கலையில் ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்படும் ஒருவர் அந்த பதவிக்குரிய கல்வித்தகுதிகளை பெற்றிருப்பது மட்டுமின்றி, கற்பித்தலில் போதிய முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நேர்காணலின்போது பணி அனுபவச் சான்றிதழ், பணியாற்றிய கல்லூரியில் பெற்று வந்த ஊதியத்திற்கான சான்று, வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். முன்அனுபவ சான்றிதழில் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் / தொழில்நுட்பக் கல்வி இயக்குநரிடம் மேலொப்பம் பெற்றிருப்பதும் அவசியம்.

 

ஆனால் தற்போது, பெரியார் பல்கலையில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர் அவர்கள் பணியாற்றிய கல்லூரி முதல்வரிடம் இருந்து அனுபவ சான்றிதழ் பெற்று சமர்ப்பித்துள்ளார்களே தவிர, கல்லூரிக்கல்வி இணை இயக்குநரிடம் அதற்கான மேலொப்பம் பெறவில்லை. அப்படி பெறாத சான்றிதழ் ஒரு வகையில் போலியானதுதான்.

 

டெக்ஸ்டைல் துறை இணை பேராசிரியர் லட்சுமி மனோகரி, தாவரவியல் துறை பேராசிரியர் முருகேஷ், ஆங்கிலத்துறை பேராசிரியர் சங்கீதா, இதே துறையில் பணியாற்றும் இணை பேராசிரியர் கோவிந்தராஜ், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் செங்கோட்டுவேலன், மேலாண்மைத் துறை இணை பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் ஆசிரியர் கற்பித்தல் அனுபவச்சான்றிதழை போலியாக பெற்று, பல்கலையில் சமர்ப்பித்துள்ளதாக தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

 

போலி அனுபவ சான்றிதழ், துறை மாறி நியமிக்கப்பட்டவர்கள், கற்பித்தல் அனுபவம் இல்லாத பேராசிரியர்கள் என தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பேராசிரியர்கள். (இடமிருந்து வலமாக) பேராசிரியர்கள் லட்சுமி மனோகரி, முருகேஷ், சங்கீதா, சிவகுமார், வெங்கடாச்சலம், (கீழ் வரிசையில் முதலில்) தங்கவேல், கார்த்திகேயன், அய்யாசாமி, முருகேசன், முருகன் (கீழ் வரிசையில் கடைசி).

 

இன்னொரு கேலிக்கூத்தும் பல்கலையில் அரங்கேறியிருக்கிறது. கொல்லன் பட்டறையில் இரும்பு அடித்தவர்களை எல்லாம் மெக்கானிக்கல் இன்ஜினியர் என்று சொல்ல முடியுமா?. சொல்லலாம் என்கிறது பெரியார் பல்கலை.

 

எப்படி எனில், மனோதத்துவ ஆலோசகராக பணியாற்றிய வெங்கடாசலம் என்பவரை சைக்காலஜி துறை பேராசிரியராக நியமித்துள்ளது பெரியார் பல்கலை. தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த முருகேசன், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தனியார் கல்லூரியில் நூலகத்தில் புத்தகம் எடுத்துக்கொடுக்கும் வேலையை மட்டுமே செய்து வந்த முருகன், நூலக அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவருக்குமே அவரவர் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆசிரியராக பணியாற்றிய முன்அனுபவமே இல்லாதவர்கள்.

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததை சுட்டிக்காட்டும் அறிக்கை.

 

பல்கலை மானியக்குழு விதி எண்: எப்3/09, நாள்: 30.6.2010ன் படி, ஆசிரியர் பணிக்கு வரக்கூடிய ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் அல்லது அத்துறை தொடர்பான ஆராய்ச்சிப்பணியில் இருந்திருக்க வேண்டும். இந்த விதிகளுக்கு முரணாக மேற்கண்ட மூவரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

 

பணி நியமனங்களில் உள்ள மேலும் சில முரண்பாடுகளும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அதாவது, உயிர் வேதியியல் பாடத்தில் பட்டமேற்படிப்பை முடித்துள்ள உதவி பேராசிரியர் கார்த்திகேயன், உணவு அறிவியல் துறையிலும், தாவரவியல் துறையில் பட்டம் பெற்றுள்ள உதவி பேராசிரியர் இளங்கோவன், உயிரி தொழில்நுட்பத் துறையிலும் நியமி க்கப்பட்டு உள்ளனர்.

 

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமோ அதுதான் பேராசிரியர் தங்கவேல் பணி நியமனத்திலும் நடந்திருக்கிறது. கணிதத்தை முதன்மைப் பாடமாக படித்திருக்கும் பேராசிரியர் தங்கவேல், கணினி அறிவியல் துறைத்தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

துறை மாறி நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் பற்றிய குறிப்புகள்.

அதேபோல் சுற்றுச்சூழல் அறிவியலில் பட்டம் பெற்ற உதவி பேராசிரியர் அய்யாசாமியை நுண்ணுயிரியல் துறையிலும், விலங்கியல் துறையில் பட்டம் பெற்றுள்ள உதவி பேராசிரியர் சிவக்குமாரை சுற்றுச்சூழல் அறிவியல் துறையிலும் நியமித்துள்ளனர்.

 

படித்த துறையை விட்டுவிட்டு வேறு துறைகளில் ஆசிரியராக நியமிப்பதும் பல்கலை மானியக்குழு விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். குறைந்தபட்சம் அவர்கள் படித்த படிப்பும், பணியாற்றும் துறையும் நிகரானதுதான் என்பதையாவது நிரூபித்திருக்க வேண்டும். அதையும் பெரியார் பல்கலை நிர்வாகம் தவற விட்டிருக்கிறது. மேலும், இப்படி துறை மாறி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி நியமன ஆவணங்களும் தணிக்கைக்கு உட்படுத்தாமல் திட்டமிட்டு மறைத்துள்ளது பெரியார் பல்கலை.

 

எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பின்வாசல் வழியாக பணி நியமனம் பெறத்துடிப்பதன் மூலம் தரம் வாய்ந்த மாணவர்களை எப்படி உருவாக்கிட முடியும்? பணம் மற்றும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்வதைக் காட்டிலும் சாலையோரம் ‘போளி’ விற்றாவது பிழைத்துக் கொள்ளலாமே?

போளி

இப்படி தணிக்கை அறிக்கையில் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. மேலும், பல்கலையில் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ள பல முறைகேடுகளையும் தொடர்ந்து ‘புதிய அகராதி’ சுட்டிக்காட்டி இருக்கிறது.

 

புதிய துணைவேந்தர் குழந்தைவேல், இந்த முறைகேடுகளை களைவதன் முதல்படியாக தனது மவுனத்தைக் கலைக்க வேண்டும் என்பதே பல்கலை நலனில் அக்கறை கொண்டவர்களின் ஆகப்பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

– பேனாக்காரன்.