Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஓ.பன்னீர்செல்வத்தை கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பக்கத்தில் ‘அம்மா ஆட்சி’ என்று ஒரு பதிவுதான் பதிவிட்டார். மீம் கிரியேட்டர்கள் அவரை நொந்து நூடுல்ஸ் ஆக்கி, அழ வைக்கும் அளவுக்கு கேலி, கிண்டல் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்&ஆப் போன்ற சமூக வலைத்தளங்களே இப்போது சாமானிய மக்களின் நேரடி மேடையாகி விடுகிறது. கையில் ஒரு மொபைல் ஃபோன் இருந்தால்போதும், எதிரில் நிற்பவர் யாரென்றெல்லாம் பார்ப்பதில்லை. உடனுக்குடன் கருத்துகளை வரவேற்றோ, பகடி செய்தோ, அல்லது தர்ம அடியோ கொடுக்கும் விதமாக பதிலடி கொடுத்து விடுகின்றனர்.

அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பாக இருந்தாலும் சரி. பிரதமர் மோடியோ அல்லது தமிழக முதல்வரோ யாராக இருந்தாலும் இணையவாசிகளுக்கு ஒரே அளவுகோல்தான். அதேநேரம் நல்லதை வரவேற்கவும் தயங்குவதில்லை.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (அக். 14, 2017), ”இனி எத்தனை தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டிலே அமையப் போவது அம்மா அவர்களின் ஆட்சிதான்,” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

தர்மயுத்தத்தின் பேரில், சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கம்பு சுழற்றி வந்த ஓபிஎஸ், ஆறே மாதத்தில் துணை முதல்வர் பதவியுடன் தர்ம யுத்தத்தை முடித்துக் கொண்டார்.

இரு அணிகள் இணைப்புக்கு சில நாள்கள் முன்புதான், இபிஎஸ் ஆட்சியில் ஊழல் நடப்பதாகவும், அதை எதிர்த்து ஊர் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அறிவித்து இருந்தார்.

ஓபிஎஸ்ஸின் இரட்டை நிலப்பாடு, சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைப் பார்த்து அதுவரை அவரை ஆதரித்து வந்தவர்கள்கூட, அவர் மீது எரிச்சலுற்றனர்.

இந்த எரிச்சலையும், அவர் மீதான அவநம்பிக்கையையும் டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு எதிரான கணைகளாகத் தொடுத்து இருந்தனர். பலர் அவரை படுகேவலமாகவும் விமர்சித்து மீம்ஸ்களையும், கருத்துகளையும் பதிவிட்டு இருந்தனர். அல்லக்கை, அமாவாசை என்றும் தூற்றி இருந்தனர். பலர் ஒருமையிலும் கருத்துகளை பதிவிட்டு இருந்தனர்.

”முதலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். அப்போது தெரியும் உங்கள் வண்டவாளம் என்றும், இனி எந்த தேர்தல் நடந்தாலும் அதில் நீங்கள் டெபாசிட் கூட பெற முடியாது என்றும், தேர்தலுக்கு முன்பே யார் முதல்வர் என்று சொல்லி ஓட்டு கேட்கும் தைரியம் இருக்குதா?,” என்றும் சிலர் கருத்துகளை பதிவிட்டு இருந்தனர்.

ஓபிஎஸ்ஸின் கருதை பகடி செய்யும் வகையில் ஒருவர், ‘இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன,’ என்றும் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு பதிலடிகள் குவிந்து வருகின்றன. அவருக்கு ஆதரவாக ஓரிருவர் மட்டுமே கருத்து தெரிவித்து இருந்தனர்.

– நாடோடி.