Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் நிலவி வந்த சிக்கல் இன்று (அக். 16, 2017) சுமூகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து, திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக, சுமார் ரூ.135 கோடி பொருட்செலவில் தயாராகி இருக்கிறது ‘மெர்சல்’. இதில் நடிகர் விஜய் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடித்திருக்கிறார். அதில், மேஜிக் கலைஞராக ஒரு வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.

இதற்காக அவர் தொழில்முறை மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி பெற்று, படத்திலும் அவரே சுயமாக சில மேஜிக்குகளை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தீபாவளியன்று (அக். 18) உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த விலங்குகள் நல வாரியம், தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து இருந்தது.

இப்படத்தில் குதிரைகள் இடம்பெறும் காட்சிகளிலும், புறாக்கள் பறக்கும் காட்சியிலும், ராஜநாகம் வரும் காட்சியிலும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக படக்குழு தயாரிப்பில் சொல்லப்பட்டு இருந்தது. மேலும், ராஜநாகம் வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

ஆனால், விலங்குகள் நல வாரியத்திடம் சமர்ப்பித்த விவரங்களில் ராஜநாகம் என்று குறிப்பிடாமல் அதை நல்லபாம்பு என்று சொல்லப்பட்டு இருந்தது. கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் என்பதற்கான ஆதாரப்பூர்வமான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. இவைதான் விலங்குகள் நல வாரியத்தின் ஆட்சேபத்திற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டது.

இதற்கிடையே, நடிகர் விஜய் நேற்று தமிழக முதல்வர் எட்பபாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, கேளிக்கை வரி குறைப்புக்காக நன்றி சொன்னதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்பட்டது.

ஆனால், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் இருந்து வரும் சிக்கல் குறித்தும், பண்டிகை நாளில் திரையரங்கு கட்டணத்தை உயர்த்திக்கொள்ள விசேஷ அனுமதி வழங்குவது குறித்தும், அவர் முதல்வரிடம் பேசியதாக நேற்றைய ‘புதிய அகராதி’ இணையத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். விஜயின் கோரிக்கைகளுக்கு முதல்வரும் அப்போது செவி சாய்த்ததாகச் சொல்லப்படுகிறது.

வழக்கமாக புதன்கிழமைகளில் மட்டுமே கூடும் விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள், இன்று நடிகர் விஜய்க்காக அவசர அவசரமாக கூடி விவாதித்தனர். அப்போது நல வாரிய உறுப்பினர்கள் சில காட்சிகளை நீக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகே, விலங்குகள் நல வாரியம் தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்து, படத்தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்றிதழ் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. எல்லாம் சுமூகமாக முடிந்து படத்தை திட்டமிட்டபடி வரும் 18ம் தேதி (நாளை மறுநாள்) படம் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

– வெண்திரையான்.