Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி; நேரம் குறித்த தினகரன்

வரும் டிசம்பர் மாதத்திற்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக அம்மா அணி சார்பில் இன்று (அக். 15, 2017) நடந்தது.

நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்னர், ஊடகங்களைச் சந்தித்த அவர் கூறியது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதனை மறைத்தும், மறந்தும் விட்டு மேடை போட்டு எதை எதையோ பேசுகின்றனர். அரசு செலவில் எடப்பாடி பழனிசாமி கதை கூறிவருகிறார். இதனை பொது மக்கள் நம்ப தயாராக இல்லை.

தற்போது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் யார் என்று தெரிந்து விட்டது. சட்டமன்ற கூட்டத் தொடரின் மூலம் எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். இந்த டிசம்பர் மாதத்துக்குள் அனுப்பிவிடுவோம்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நான் போட்டியிட தயாராக உள்ளேன். ஆனால் பொதுக்குழு, உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்து, வேட்பாளர் யார் என்பதை பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பார். தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே எங்களது தொண்டர்கள் வெற்றிக்காக பாடுபட தொடங்கி விட்டார்கள்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரது கருத்தை மதிக்கிறேன். அதேவேளையில் அனைவரும் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையை ஏற்று செயல்படவேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் நேற்றே நிலவேம்பு கசாயம் வழங்க இருந்தோம். ஆனால் இன்றுதான் அனுமதி வழங்கினர்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.