Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

வாழ்வில் ஏற்படும் கொடுந்துயரங்களும், எதிர்பாராத இடர்களும்தான் சாதாரண மனிதர்களைக் கூட அசாதாரண செயல்களைச் செய்யக்கூடிய நாயகர்களாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கொரோனா என்னும் பேரிடர்,
இந்த உலகுக்கு மற்றுமொரு
நாயகியை பரிசளித்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கின்போது
வேலை, வருவாய் இழந்து
வயிற்றுக்கும் உயிருக்குமாய்
தத்தளித்துக் கொண்டிருந்த
சாமானியர்களுக்கு தன்னார்வலர்கள்
பலர் உணவளித்தல், மருத்துவ உதவிகள்,
உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட
பல்வேறு சேவைகளைச்
செய்து வந்தனர்.

உலகில் இன்னும்
மானுடம் மரித்துப் போய்விடவில்லை
என்பதற்கு அத்தகைய
தன்னார்வலர்களே தக்க சான்று.
அவர்களைப் பற்றிய தகவல்களை
நமது ‘புதிய அகராதி’யில்
‘நம்ம ஊர் நாயகன் / நாயகி’
என்ற தலைப்பில் தொடராக
எழுதி வருகிறோம்.
அந்த வரிசையில்
இப்போது, சீதா தேவி.

 

சென்னை கொடுங்கையூர்
மூலக்கடையைச் சேர்ந்த சீதா தேவி (36),
ஸ்ட்ரீட் விஷன் என்ற பெயரில்
டிரஸ்ட் நடத்தி வருகிறார்.
குழந்தைகள், பெண்கள்
மேம்பாடுதான் மைய நோக்கம்.
கடந்த மே, 2021 வரை
இந்த டிரஸ்ட் தான் இவரின்
அடையாளமாக இருந்தது.

 

மே 6ம் தேதிக்குப் பிறகு
சீதா தேவியின் அடையாளம்
ஒட்டுமொத்தமாக மாறிப்போனது.
சென்னையின் பிரபலமாக மாறிப்போனார்.
தமிழ்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி
என்டிடிவி, ஏஎன்ஐ உள்ளிட்ட
தேசிய அளவிலான ஆங்கில
ஊடங்கங்களும் அவரின்
சேவையைப் பாராட்டி
செய்திகள் வெளியிட்டன.

இந்தளவுக்கு அவர் பிரபலம்
ஆவதற்கு அவர் கொடுத்த விலை,
உண்மையில் விலை மதிக்க முடியாதது.
ஆமாம். கொரோனா நோய்த்தொற்றால்
பாதிக்கப்பட்டிருந்த அவருடைய
தாயார் விஜயாவை, அவர்
அப்போதுதான்
பறிகொடுத்திருந்தார்.

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தாயாரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பல மணி நேரம் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தார். கொத்து கொத்தாக கொரோனா நோயாளிகள் குவிந்த நிலையில், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

 

ஏமாற்றத்துடன் அங்கிருந்து
வெளியேறிய அவர்,
ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு
தாயாரை அழைத்துச் சென்றார்.
சிகிச்சைக்கு அட்மிஷன்
கிடைத்ததே தவிர,
மூச்சுத்திணறலால் மரணத்துடன்
போராடிக்கொண்டிருந்த தாயாருக்கு
போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை.
தன் கண் முன்னாலேயே தாயார்,
பரிதாபமாக உயிரிழந்தார்.

 

உற்ற துணையாக இருந்த தாயாரின் மரணம், அவரை ரொம்பவே உலுக்கியது. ஆனாலும் சீதா தேவி, மனதைத் தேற்றிக்கொண்டு அதிரடியாக ஒரு முடிவெடுத்தார். ‘ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இனி ஒருவர் கூட உயிரிழக்கக்கூடாது. அதற்கு தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்தே தீருவது,’ என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.

 

அந்த தீர்க்கமான முடிவில் உருவானதுதான் ஆக்ஸிஜன் ஆட்டோ. தனக்குத் தெரிந்த தன்னார்வலர்கள் உதவியுடன் மருத்துவ அவசர உதவிக்கென ஆட்டோ ஒன்றை வாங்கினார். ஆட்டோவுக்கு நீல நிற பெயிண்ட் அடித்து, முன்பக்கத்தில் ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ என எழுதினார். ஆக்ஸிஜன் சிலிண்டர், ஃபுளோ மீட்டர், ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர் உபகரணங்களையும் பொருத்தினார். அவ்வளவுதான் ஆக்ஸிஜன் ஆட்டோ தயார்.

 

எந்த மருத்துவமனையில் தன் தாயாருக்கு சிகிச்சைக்கு அனுமதி கிடைக்கவில்லையோ அதே ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நுழைவாயில் அருகே ஆக்ஸிஜன் ஆட்டோவை நிறுத்தினார் சீதா தேவி. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக தன் ஆட்டோவிலேயே அமர வைத்து ஆக்ஸிஜன் சுவாசத்தை அளித்து வருகிறார். காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த சேவை இரவு 8 மணி வரை நீள்கிறது. இதற்காக யாரிடமும் ஒரு ரூபாய் கூட அவர் பெறுவதில்லை என்பதுதான் வியப்பின் உச்சம்.

 

சக தன்னார்வலர்கள் மோகன்ராஜ், சரத்குமார் ஆகியோரும் இந்தப் பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

 

கொரோனா இரண்டாவது அலை
உச்சத்தில் இருந்தபோது
தினமும் சராசரியாக 30 நோயாளிகள்
இவருடைய ஆட்டோவில்
ஆக்ஸிஜன் சுவாசத்தைப்
பெற்றுள்ளனர்.

 

சீதா தேவியின் சேவை இத்துடன் நின்றுவிடவில்லை. மாதவரம், மத்தூர், கொடுங்கையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோயாளிகளை தன்னுடைய ஆட்டோவிலேயே கட்டணமில்லாமல் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை சுடுகாட்டிற்கும் கொண்டு செல்லும் பணிகளையும் செய்து வருகிறார்.

 

கடந்த மே 6ம் தேதி முதல்
இந்த சேவையை வழங்கி
வரும் சீதா தேவி,
இதுவரை 800க்கும் மேற்பட்ட
கொரோனா நோயாளிகளுக்கு
ஆக்ஸிஜன் சுவாசம் அளித்து,
அவர்களின் உயிரைக்
காப்பாற்றி இருக்கிறார்.

 

சென்னையில் பத்து அரசு
மருத்துவமனைகளில் சானிட்டரி
நாப்கின் டிஸ்பென்சர்களையும்
நிறுவியுள்ளார். சேவையை
விரிவாக்கம் செய்யும் வகையில்,
தற்போது மேலும் இரண்டு
புதிய ஆக்ஸிஜன் ஆட்டோக்களையும்
தன் பயணத்தில் இணைத்துக்
கொண்டிருக்கிறார்.

 

கொரோனா நோய்த்தொற்று,
சாமானிய, கீழ்நடுத்தர வர்க்க
குடும்பங்களை அடியோடு
தடம் புரளச் செய்திருக்கிறது.
அதேநேரம், இந்த நோய்த்தொற்று,
நாம் நன்கறிந்த பல மனிதர்களின்
அழுக்கான பக்கங்களையும்,
முகமறியாத மனிதர்களின்
மனிதநேயத்தையும் அடையாளம்
காட்டியிருக்கிறது.

 

கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் வீடு
அருகே வசிப்போர் பாதிக்கப்பட்டவரை
கண்டாலே வீட்டுக்குள் ஓடிச்சென்று
கதவுகளைச் மூடிக்கொண்டு
ஒளிந்து கொள்வது; உற்ற நண்பன்,
உடன்பிறந்தார் என்றாலும் கூட
தொற்றாளர்களை புறக்கணிப்பது
என கொஞ்சமும் கழிவிரக்கமற்ற
மனிதர்களும் இருக்கவே செய்தனர்.

 

நோய்த்தொற்று காலத்திலும் கூட
உணவுப்பொருள்கள், பழங்கள்,
மருத்துவ உபகரணங்கள்,
ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகளுக்கு
பல மடங்கு விலை வைத்து
விற்பனை செய்த கொள்ளையர்களைய
வெளிச்சம் போட்டுக் காட்டியதும்
இந்த கொரோனாதான்.

 

இதே கொரோனாதான்,
சீதா தேவி போன்ற பல
மனிதநேயமிக்க மானுடர்களையும்
நம்மிடம் கொண்டு வந்து
சேர்த்திருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில்
உறவுகள் கைவிட்ட போதிலும் கூட,
முகமறியாத பலருக்கு
முகமறியாத பலரும் ஓடிஓடி,
தேடித்தேடிச் சென்று உதவிய
வியப்பான நிகழ்வுகளும்
அரங்கேறிக் கொண்டே இருந்தன.

 

சீதா தேவியின்
ஒட்டுமொத்த வயதில்
பாதிக்காலத்தை சமூக
சேவையில்தான் கழித்திருக்கிறார்.
தான் நடத்தி வரும் ஸ்ட்ரீட் விஷன்
டிரஸ்ட் பெயரின் பின்னணியிலும்
வீடற்ற நடைபாதைவாசிகளின்
வலியும் சோகமும்
நிறைந்திருப்பதைச் சொன்னார்.

 

நம்மிடம் சீதா தேவி பேசினார்…

 

”அண்ணா… விளிம்பு நிலை
மக்கள் என்பதற்கு எங்கள்
குடும்பமும் உதாரணம்தான்.
எங்க அப்பா, சென்னை சென்ட்ரலில்
போர்ட்டராக இருந்தார்.
சின்ன வயசிலருந்தே அவருக்கு
அந்த ரயில்வே பிளாட்பாரம்தான் வீடு.

 

அப்பா, அம்மாவுக்கு என்னையும்
சேர்த்து மொத்தம் 6 புள்ளைங்க.
நான் நாலாவது. எல்லாருமே தெருவோர
நடைபாதையில்தான் படுத்துக்குவோம்.
ஒரு முனையில அப்பா, அடுத்த
முனையில அம்மாவும் படுத்துக்குவாங்க.
நாங்க எல்லோரும் நடுவுல படுத்துக்குவோம்.

 

நாங்க வளர்ந்து
ஆளான பிறகும் கூட
டிபன்கிறத ஒண்ணு
சாப்பிட்டதே இல்ல.
அவ்வளவு ஏன்… எங்க வீட்ல
மூணு வேளை சாப்பாடுங்கறதே
எப்போதாவதுதான் இருக்கும்.
அப்பா வேலைக்குப் போயி கூலி
கொண்டு வந்தாதான் அடுப்பெரியும்.

 

பதினோராம் வகுப்பு படிக்கும்போது
280 ரூபாய் ஸ்கூல் பீஸ் கட்ட பணம்
இல்லாததால் மேற்கொண்டு படிக்க
முடியல. அப்புறம் வேலைக்குப் போக
ஆரம்பிச்சிட்டேன். பிறகு நண்பர்கள்
உதவியோட ஓப்பன் யூனிவர்சிட்டி
மூலமாக பி.காம்., படிச்சேன்.

 

எங்க கஷ்டம் எல்லாம்
எங்களோட போகட்டும்.
வீடற்ற தெருவோர பிள்ளைகள்
யாரும் கஷ்டப்படக்கூடாது
என்பதற்காகத்தான் ஸ்ட்ரீட் விஷன்ங்கிற
பேரில் டிரஸ்ட் ஆரம்பிச்சேன்.
ஏன்னா… நானும் அந்த
தெருவோரத்தில் இருந்துதான்
வந்தேன்கிறதால அவங்களோட
வலி எனக்கு நல்லாவே தெரியும்.

 

ஆதரவற்ற நடைபாதைவாசிகளுக்கு
கடந்த சில வருஷங்களா தினமும்
ஒருவேளை உணவு
கொடுத்துட்டு வர்றோம்.
சென்னை சிட்டியில் மட்டும்
மொத்தம் 42610 தெருக்கள் இருக்கு.
இங்கெல்லாம் யாரும்
பிச்சைக்காரர்களே இருக்கக் கூடாது.
அவர்களை அரவணைத்து,
மறுவாழ்வுக்கான வழிகளையும்
செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்,”
எனக்கூறும் சீதா தேவி,
திருமணமே செய்து
கொள்ளவில்லை.

 

ஆதரவற்ற மக்களுக்கு
சேவை செய்வதில்தான்
முழுமையான மகிழ்ச்சியை
உணர்வதாக சொல்வதோடு,
இந்த பிறப்பின் அர்த்தமும்
அதுதான் என்றும் சொல்கிறார்.

 

தற்போது 80 வயதாகும்
அவருடைய தந்தை ராஜூ,
சீதா தேவியுடன்தான் வசிக்கிறார்.
குடும்பத்தினர், நண்பர்கள்,
பொதுநல விரும்பிகள் அவருடைய
டிரஸ்டுக்கு கொடை அளிப்பதன்
மூலம் தங்கு தடையின்றி சேவைகள்
தொடர்வதாகச் சொன்னார்.

 

அண்ணா,
”சென்னைக்கு எப்போது
வந்தாலும் மறக்காமல்
வீட்டுக்கு வாங்க. இங்கேயும்
உங்களுக்கு ஒரு தங்கை
இருக்கிறாள்,” என்று சொன்னபோது
நம்மையும் சொற்களால்
அரவணைத்துக்
கொண்டதாகவே பட்டது.

 

இந்தப் பயணத்தில் சீதா தேவி, முக்கியமானவர் மட்டுமல்ல; உன்னதமானவரும் கூட. சீதா தேவிகளால்தான் இந்த மானுடம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. பூமி, சுழல்வதை நிறுத்திக் கொள்ளாமல் இருக்கிறது.

 

சீதா தேவியை தொடர்பு கொள்ள: 9840038410

 

– பேனாக்காரன்