Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

பிரபல தொழில் சாம்ராஜ்யமான
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்
முகேஷ் அம்பானி, தொடர்ந்து
இந்தியாவின் நம்பர்-1
கோடீஸ்வரராக திகழ்கிறார்.
அவருடைய சொத்து மதிப்பு
6.12 லட்சம் கோடிகளுக்கு
மேல் இருப்பதாக, ஹூரூன்
ஆய்வேடு, மார்ச் 2ம் தேதி
வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்துள்ளது.

 

இப்போதைய நிலையில்,
இந்தியாவில் மட்டும் மொத்தம்
209 பெரும் கோடீஸ்வரர்கள்
இருக்கிறார்கள் என்றும்,
அவர்களில் 177 பேர் இந்தியாவில்
வசிப்பதாகவும் மற்றவர்கள்,
வெளிநாடுகளில் வசிக்கும்
இந்தியர்கள் என்றும் ஹூரூன்
ஆய்வேடு கூறுகிறது.

 

உலகளாவிய கோடீஸ்வரர்கள்
பட்டியலின் பத்தாவது பதிப்பை
பிரபல வணிக இதழான ஹூரூன்
செவ்வாய்க்கிழமை (மார்ச் 2)
அன்று வெளியிட்டது. அதில்தான்
மேற்கண்ட தகவல்
இடம் பெற்றுள்ளது.

 

உலகம் முழுவதும்
மொத்தம் 3228 பெரும்
கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.
மொத்தம் 68 நாடுகளைச் சேர்ந்த
2402 தொழில் நிறுவனங்களின்
நிகர சொத்து மதிப்பின்
அடிப்படையில் கோடீஸ்வரர்கள்
பட்டியல் தயாரிக்கப்பட்டு
உள்ளது.

 

இதில் ஒரு வேடிக்கை
என்னவெனில், கொரோனா
பெருந்தொற்றால் அரசு ஊழியர்கள்
உள்ளிட்ட அமைப்பு ரீதியாக
பணியாற்றி வரும் மாதாந்திர
சம்பளதாரர்கள் தவிர ஏனைய
வர்க்கத்தினர் அனைவருமே தொழில்,
வேலைவாய்ப்பு, வருமானம் இழந்து
கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

 

இப்படியான பாதிப்பு ஒருபுறம்
இருந்த நிலையிலும்கூட,
உலக கோடீஸ்வரர்களின்
சொத்து மதிப்பு 32 சதவீதம் வரை
உயர்ந்துள்ளதாம். அதாவது,
14.7 டிரில்லியன் டாலர் அளவுக்கு
கூடுதலாக சொத்துக்களை
குவித்துள்ளார்கள். அப்படியானால்
பணக்காரர்கள் மேலும் செல்வம்
குவித்துக் கொண்டே இருப்பதும்,
ஏழைகள் மேலும் ஏழைகளாகிக்
கொண்டே போவதும் என்ற
உலக வழக்கம் மீண்டும்
நிரூபிக்கப்பட்டதாக
புரிந்து கொள்ளலாம்.

 

ரிலையன்ஸ் குழுமத்தின்
தலைவரும், இந்திய தொழில்
அதிபர்களின் முகமாகவும்
விளங்குகிற முகேஷ் அம்பானி,
83 பில்லியன் டாலர் சொத்துக்களுடன்
தொடர்ந்து நடப்பு 2021ம் ஆண்டிலும்
இந்திய அளவிலான பெரும்
கோடீஸ்வரர்கள் பட்டியலில்
முதலிடத்தில் நீடிக்கிறார்.
இப்போதைய நிலையில்
ஆசிய அளவிலும் இவர்தான்
பெரும் கோடீஸ்வரர்.

 

கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு
கணக்கீடு என்பது கடந்த
ஜனவரி 15ம் தேதி நிலவரப்படி
கருத்தில் கொண்டு இந்த பட்டியல்
தயாரிக்கப்பட்டு உள்ளது.

 

ஒப்பீட்டளவில்,
உலகளவில் சீனாவில்தான்
1058 பெரும் கோடீஸ்வரர்கள்
இருக்கிறார்கள். அதற்கு அடுத்து,
அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
696 பேர் இருக்கிறார்கள்.
கோடீஸ்வரர்களை உருவாக்குவதில்
இந்தியா மூன்றாவது இடத்தில்
இருக்கிறது. நம் நாட்டில் மட்டும்
இப்போது 177 பெரும் கோடீஸ்வரர்கள்
உள்ளனர். ஐரோப்பிய நாடுகள்
மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளில்
தலா 100 கோடீஸ்வரர்கள்
இருக்கிறார்கள்.

 

இந்திய அளவில்
மும்பை மாநகரம்தான் அதிக
கோடீஸ்வரர்களை உருவாக்குகிறதாம்.
இங்கிருந்து மட்டுமே 60
கோடீஸ்வரர்கள் இந்தியாவுக்கு
கிடைத்திருக்கிறார்கள்.
அதற்குப் பிறகு புது டில்லியில்
இருந்து 40, பெங்களூரு நகரில்
இருந்து 22 கோடீஸ்வரர்களும்
உருவாகி உள்ளனர்.

 

இந்தியாவின் முதல் 10
இடங்களில் உள்ள பெரும்
கோடீஸ்வரர்களின் பெயர்கள்,
சொத்து மதிப்பு, அவர்களின்
தொழில் நிறுவனங்களின்
விவரம்:

10ம் இடம்:

திலீப் சங்வி
12.5 பில்லியன் டாலர்
சன் பார்மா

9ம் இடம்:

ஜெய் சவுத்ரி
13 பில்லியன்
ஸீஸ்கேலார்

8ம் இடம்:

ராதாகிருஷ்ணன் தமானி
14.5 பில்லியன் டாலர்
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்

7ம் இடம்:

உதய் கோடக்
15 பில்லியன்
கோடக் மஹிந்திரா வங்கி

6ம் இடம்:

ஹிந்துஜா சகோதரர்கள்
18 பில்லியன் டாலர்
ஹிந்துஜா குழுமம்

5ம் இடம்:

சைரஸ் புனவாலா
18.5 பில்லியன் டாலர்
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

4ம் இடம்:

லட்சுமி மிட்டல்
19 பில்லியன் டாலர்
ஆர்சிலர் மிட்டல்

3ம் இடம்:

ஷிவ் நாடார்
27 பில்லியன் டாலர்
ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ்

2ம் இடம்:

கவுதம் அதானி
32 பில்லியன் டாலர்
அதானி குழுமம்

 

1ம் இடம்:

முகேஷ் அம்பானி
83 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம்

 

– பேனாக்காரன்