Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

 

முதல்வர் என்பவர் உள்ளூர் புரோக்கர். பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மே 12, 2018) சேலம் வந்திருந்தார். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கன்னங்குறிச்சி மூக்கனேரியை, பியூஷ் மானுஷ் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து சீரமைத்து, பொலிவுறு ஏரியாக மாற்றினர்.

ஏரியின் அழகை, சீமான் பரிசலில் சென்று கண்டு ரசித்தார். பின்னர் ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டார். அதையடுத்து, சேலத்தில் கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடத்தை நேரில் பார்வையிட்டார்.

 

 

சேலம் விமான நிலையத்திற்காக நிலம் கொடுத்த விவசாயி கந்தசாமி சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருடைய வீட்டிற்கு நேரில் சென்ற சீமான், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் எருமாபாளையம் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, சட்டூர் கிராமத்தில் விமான நிலைய விரிவாக்க எதிர்ப்பு இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியது:

உலகில் மூத்த இனம், தமிழ் இனம். தெற்காசியா வரை பரவியிருந்த இனம் நம் இனம். இந்த இனத்தை திட்டமிட்டு வஞ்சகத்தால் வீழ்த்திவிட்டனர். தமிழ் படித்தால் வேலையில்லை என்று கூறி பள்ளியில் இருந்தும், வழக்காடு மன்றத்தில் இருந்தும், கலாச்சாரத்தில் இருந்தும், வழிபாட்டு முறையில் இருந்தும் நம் மொழியை, நம் இனத்தை அழிக்கும் வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இப்போது விளை நிலத்தை கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில் நம்மை நம் நிலத்தை விட்டு வெளியேற்றும் வேலைகளைச் செய்கின்றனர். 100 நாள் வேலை திட்டம் என்ற பெயரில் விவசாயத்தை ஒழித்துவிட்டனர். விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் விளை நிலங்களை விற்றுவிடும் நிலை உள்ளது. விவசாயிகள் தற்கொலை என்பது நாமெல்லாம் சோறின்றி சாகப்போகிறோம் என்பதற்கான எச்சரிக்கை என்பதை உணர வேண்டும்.

 

 

நாம் கேட்டது காவிரியில் இருந்து தண்ணீர். இவர்கள் தருவது ஏர்போர்ட்டா? இதை யார் கேட்பது? ஏற்கனவே சேலம் ஏர்போர்ட் 170 ஏக்கரில் உள்ளது. அதில் ஒரே ஒரு பிளைட் வந்து செல்லும்போது, இப்போது 570 ஏக்கர் நிலத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? யாருடைய தேவைக்காக இந்த நடவடிக்கை? இதற்கெல்லாம் அரசிடம் பதில் இல்லை.

விமான நிலையம் விரிவாக்கத்திற்காக விளை நிலத்தை தொட்டால், தொட்டவனை வெட்டிப் புதைக்கிறது தவிர எனக்கு வேறு வழியில்லை. நீ வானூர்தியில் போகும்போது பசி எடுத்தால், தாகம் எடுத்தால் எதை தின்பாய்? எதை குடிப்பாய்? அவை எல்லாமே இந்த பூமியில் விளைவதுதானே?

அப்படியே விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தே தீர வேண்டும் என்றால், சேலத்தில் சும்மா 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது. அங்கே போய் திட்டத்தை செயல்படுத்துங்கள். எங்கள் விளை நிலத்தை பறித்துக்கொண்டு இழப்பீடு தருவதற்கு நீ யார்?

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை சுற்றிப்பார்த்தேன். எங்கு பார்த்தாலும் கத்தரி, வெண்டை என காய்கறிகள் விளைகிறது. அத்தனையும் பொன் விளையும் பூமி. இந்த நிலத்தைப் பறித்துக்கொண்டு, தமிழர்களை சொந்த நிலத்தில் அகதிகளாக்க வேண்டும் என்பதுதான் அரசின் திட்டமா?

எந்தக் காரணம் கொண்டும் தாய் நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று இன்றே, இப்போதே நீங்கள் சத்தியம் செய்து கொள்ள வேண்டும். இதுவும் ஒரு போர்தான். முன்பு பகை நாட்டினர்தான் போரிட்டு நிலத்தை ஆக்கிரமிப்பார்கள். இப்போது நமது அரசாங்கம் நம்மிடமே போரிட்டு நிலத்தை பறிக்க நினைக்கிறது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிச்சாலை எதற்குப் போட வேண்டும்? யாருக்காக இந்த வசதி? இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம் அல்ல. அதானி, அம்பானிகளுக்கான அரசாங்கம். நான்கு வழிச்சாலையை போட்டது இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை. ஆனால் அதில் சுங்கம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு விட்டுவிட்டனர்.

இன்று ரோட்டை விற்றவர்கள் நாளை நாட்டையே விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?. முதல்வர் என்பவர் உள்ளூர் புரோக்கர். பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர். எந்த நாடு சந்தைப்பொருளாதாரத்தை நம்புகிறதோ அந்த நாட்டின் தலைவன், தரகராகத்தான் இருக்க முடியுமே தவிர, மக்களுக்கான தலைவனாக இருக்க முடியாது.

 

 

எட்டு மலைகளைக் குடைந்து, லட்சக்கணக்கான மரங்களை அழித்து எட்டு வழிச்சாலை அவசியமா? என்பதை உணர வேண்டும். வனத்தை அழித்தால் அருவி அழியும். அருவி இல்லாவிட்டால் ஆறு இருக்காது. ஆறு இல்லாவிட்டால் தண்ணீர் இருக்காது. தண்ணீர் இல்லாவிட்டால் உயிர்கள் இருக்காது. உயிர்கள் இல்லாவிட்டால் இந்த பூமியே இருக்காது.

காடு, மலை என இயற்கையை அழிக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முச்சந்தியில் நிற்க வைத்து விளக்குமாற்றாலேயே அடித்து, அவர்கள் மீது சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும்.

இந்த உலகத்தில் நாம் வாடகைக்குதான் இருக்கிறோம். அதை அப்படியே பத்திரமாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுப் போக வேண்டும்.

இவ்வாறு சீமான் பேசினார்.