Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிட்டப்பட்டதற்கே தேச விரோத வழக்கு பாயுமெனில், அந்த பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்த எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரும் தேச விரோதிகளா? என நமது எம்ஜிஆர் நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஈடு இணையற்ற தலைவர்களா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை சந்திக்குக் கொண்டு வருவதில் இருதரப்புமே சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் அவர்களின் அரசியல் விமர்சனங்கள் உணர்த்துகிறது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே, அப்படி.

சேலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியது தொடர்பாக டிவிடி தினகரன் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தும் நமது எம்ஜிஆர் நாளேடு நேற்று (அக். 15, 2017) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த கட்டுரையின் சுருக்க வடிவம்:

திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, காவல்துறை அனுமதி தர மறுத்தது. பின்னர் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று, அங்கே லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

சேலத்திலே ஏதோ சிலர் எடப்பாடி அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர் என்பதற்காக அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி அரசால் தேசவிரோத வழக்குப் போடப்பட்டது.

துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிடப்பட்டு இருந்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியெனில், அந்த துண்டு பிரசுரத்தில் எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா படங்களும்தான் இருக்கிறது. அப்படியானால் அவர்களும் தேசவிரோதிகளா? இப்படிப்பட்ட இடிஅமீன் ஆட்சியை எங்கேயாவது பார்த்ததுண்டா?

எடப்பாடியே! உம்மை எச்சரிக்கிறோம்! எதற்கும் ஒரு எல்லையுண்டு! அரிமாவாய் அரசியலில் இருந்த அம்மாவின் வழிவந்தவர்கள்!

ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தார்கள் என்பதற்காக பொய்யான காரணத்தைச் சொல்லி, 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்துள்ளார் சபாநாயகர் தனபால். அவரை நாங்கள் சும்மாவிடப்போவதில்லை! அவர் மீதும் வழக்குப் போடுவோம்!

நீதிமன்றத்தினுடைய துணையை நாடி இந்த ஆட்சியின் முகத்திரையை கிழித்தெறிவோம்!,எந்த பாசிச கொள்கை கொண்ட அரசும் நீடித்ததாக வரலாறில்லை. மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாகத்தான் வரலாறாக இருக்கிறது.

பரோலில் வந்தால் கூட பாதிப்பை ஏற்படுத்துவார் என்று பயந்து, எங்கள் பொதுச்செயலாளர் சின்னம்மா மீது தீவிரவாதிகளுக்குக் கூட விதிக்காத நிபந்தனைகளை விதித்தவர்களை காலம் மன்னிக்காது.

வாய்கிழியப் பேசும் எடப்பாடி அரசே, போக்குவரத்து கண்காணிப்புக்காக இருபதாயிரத்திற்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டனவே. அவற்றில் இன்றைக்கு எத்தனை ஒழுங்காக செயல்படுகிறது என்று காவல்துறை ஆய்வு செய்துள்ளதா?

சென்னையில் மட்டும் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 600 சங்கிலி பறிப்புகள், செல்போன் பறிப்புகள் நடந்துள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் 810 குழந்தைகள் கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 15லிருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள் 136 பேர். மற்ற அனைவரும் குழந்தைகள். எத்தனையோ பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.

குழந்தைகள் கொல்லப்படுவதில் இந்தியாவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 குழந்தைகள் தமிழகத்தில் கொல்லப்படுவதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இப்படி தினமும் கொலைகள் நடந்த வண்ணம்தான் இருக்கிறது.

அரசுக்கெதிராக யாரும் எந்தக் கருத்தும் கூறக்கூடாத அளவிற்கு மிரட்டப்படுகிறார்கள்.

நெடுவாசல் போன்ற இடங்களில் தங்களுடைய நிலங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக 150 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடியும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

எந்த போராட்டத்தையும் ஆட்சியிலே இருக்கிற அதிகார திமிரில், காவல் துறையை வைத்து ஒடுக்கி விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களைப் பார்த்தவர்.

பல சிறைக் கொடுமைகளையும் அனுபவித்தவர். 1937க்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த அரசிலேயே மிகவும் மோசமான அரசு இந்த அரசு தான் என்று நல்லக்கண்ணுவே கூறியிருக்கிறார்.

நல்லக்கண்ணுவுக்கு 93 வயது ஆகிறது. அவரையும் அந்த சி.பி.ஐ. கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சி.மகேந்திரன் உட்பட 11 பேர் மீது, விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினர் என்று வழக்குப் பதிவு செய்தது, பாசிஸிட் எடப்பாடி அரசு.

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்த நல்லக்கண்ணு என்ன தீவிரவாதியா? மாற்றாராலும் மதிக்கப்படும் தமிழகத்திலுள்ள முதுபெரும் தலைவர் அவர். அவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ள எடப்பாடி அரசு கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு நமது எம்ஜிஆர் நாளேடு கட்டுரை வெளியிட்டுள்ளது.