Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் விவகாரம்: நேற்று இலை… இன்று சிலை… நாளை தலை…!

தோழர் பெரியார், புரட்சியாளர் லெனின் சிலைகள் கம்பீரமாய் வெட்டவெளியில் நிற்கின்றன. கடவுளர்கள் அச்சத்துடன் கருவறைக்குள் ஒடுங்கிப்போய் கிடக்கின்றனர். அதை வசதியாக மறந்துவிட்டு, ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துகளால் தமிழ்நாடே இன்று கொந்தளித்துக் கிடக்கிறது.

பெரியார் சிலையை உடைப்போம் என்று கொக்கரிக்கும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

பாசிஸ சித்தாந்தங்களில் திளைத்த ஜெயலலிதாகூட தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பெரியாரை சீண்டிவிடாமல் கவனமாகக் கடந்து சென்றார். ஆனால், தமிழக தேர்தல் களத்தில் நோட்டாவைக் கூட வீழ்த்த முடியாத பாஜக, தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும் கொக்கரித்து வருவது அனைத்து தரப்பிலும் கடும் அதிருப்திகளை உருவாக்கி வருகின்றன.

திரிபுராவில் ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த உலகப் புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றி, தன் பாசிஸ வெறியாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது பாஜக. இந்திய தேசியத்தின் பன்மைத்தன்மைக்கு எதிராக செயல்படுவதில் பாஜகவுக்கு அத்தனை ஆனந்தம் ஏனோ?

எதிர்மறை விமர்சனங்களால் வளர்ந்து விடுவதும்கூட அரசியல் களத்தில் ஓர் உத்திதான். அதை அக்கட்சி மிகச்சரியாக பயன்படுத்தி வருகிறது. ஆண்ட கட்சியினர் செய்த குற்றங்களும், எதிரிகள் ஓரணியில் திரள முடியாமல் நிற்பதும், பாஜகவுக்கு தொடர் வெற்றிகளைக் கொடுத்து வருகிறதே தவிர, அதன் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டதால் அல்ல.

மோடி அலைதான் சகல வெற்றிகளுக்கும் காரணம் எனில், நாகாலாந்திலும், மேகாலயாவிலும் பலிக்காமல் போனதன் மர்மத்தை அக்கட்சிதான் விளக்க வேண்டும். ஆனாலும் பக்தாள்கள் தார்மீக அறத்தை மிதித்துவிட்டுப் பயணிப்பதில் வல்லவர்கள் என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

தமிழகத்தில் பாஜகவின் இரு அம்புகள்தான் ஹெச்.ராஜாவும், தமிழிசையும். ஹெச்.ராஜாவின் விதண்டாவாத பேச்சுகளுக்கு எதிராக கிளம்பும் எதிர்வினைகள் மூலமும் கட்சியை வளர்த்தெடுக்க முடியும் என்று நன்றாகவே நம்புகிறது பாஜ. அவருக்கு கடும் கண்டனங்கள் எழும்போது முட்டுக்கொடுக்கும் கேடயமாக வந்து போவார் தமிழிசை.

சுப்ரமணியன் சுவாமிகளும், ஹெச்.ராஜாக்களும் அதீதமாக எல்லை தாண்டும்போது மட்டும் அவர்கள் கூறிய கருத்துகள், அவர்களுடைய சொந்தக் கருத்தாக பாவிக்கப்படும் சூட்சுமங்கள் பாஜகவுக்கு எளிதாக கைவரப் பெற்றிருக்கிறது.

அதனால்தான் ஹெச்.ராஜா, ”லெனின் யார். அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு?. லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை,” என்று ஃபேஸ்புக்கில் துணிச்சலாக பதிவிட முடிகிறது. ‘ஈ.வெ.ரா’ என்பதே சரி. ஆனால், அதைக்கூட ஹெச்.ராஜா சரியாகத் தெரியாமல் ‘ஈ.வே.ரா’ என ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஹெச்.ராஜா, பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்து. கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, இந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.

தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துவது, அதன்மூலம் கலவரத்தை உருவாக்குவது, அதை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே தீர்வு பாஜகதான் என்று நிறுவ முயல்வது. இதுதான் அக்கட்சியின் அஜண்டா.

நேற்று கட்சி தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவரான தீபா, ”பெரியார் மண்ணில் இருந்து கொண்டு பெரியார் சிலையை அகற்ற முடியுமா? வெறும் சிலை அல்ல. சிங்கம் அவர். சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாதவை,” என்று ஹெச்.ராஜாவுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த துணிச்சலைக் கொடுத்தது பெரியார்தான் என்பதை ஹெச்.ராஜா எப்படி மறந்து போனார்?.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜகவினர்.

மதவெறி குறித்து அன்றே பெரியார் இப்படி சொன்னார்: ”கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. மதம், மனதில் நினைத்தாலே கெடுகிறது”.

 

நல்லிணக்கத்திற்கு எதிராகப் பேசியதாக அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொருபுறம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை மடைமாற்றம் செய்வதற்காகவே இவ்வாறான கூத்துகளை பாஜக அரங்கேற்றுகிறது என்ற அய்யமும் பொதுவெளியில் எழுந்துள்ளது.

ரஜினியை பாஜகதான் பின்னின்று இயக்குகிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. நேற்று முன்தினம் அவர், எம்ஜிஆர் கொடுத்தது போன்ற நல்லாட்சியை என்னால் தர முடியும் என்று கூறியிருந்தார்.

அவர் மீதான எதிர்மறை விவமர்சனங்கள் பெரும் விவாதமாக உருவெடுத்து விடமல் தடுப்பதற்காகவும், பெரியார் சிலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இளம் தலைமுறையினருக்கு பெரியார் பற்றிய கருத்துகளைக் கொண்டு சொல்ல ஹெச்.ராஜா ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். ஹெச்.ராஜாக்களின் பேச்சுகள், தெருத்தெருவுக்கு ஒரு பெரியார் சிலை நிறுவப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்.

மீண்டும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், கன்னியாகுமரியில் அய்யன் வள்ளுவர் சிலைக்கு அருகில், உலகிலேயே பிரம்மாண்டமான பெரியார் சிலை நிறுவப்படவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான விதையை ஹெச்.ராஜா இன்று அவரை அறியாமலேயே விதைத்துவிட்டிருக்கிறார்.

சிலைகளை உடைத்துவிடலாம். மனதில் ஊறிப்போன சித்தாந்தங்களை உடைத்துவிட முடியுமா? ஹெச்.ராஜாவின் அபத்தமான புரிதலைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை உடைத்தது பாஜக. பின்னர், இரட்டை இலையை முடக்கினர் சங்கிகள்.

இலையைத் துண்டாடிய அவர்களின் கவனம் இப்போது பெரியார் சிலை மீது திரும்பியிருக்கிறது. வெண்தாடி வேந்தர் பற்றியிருக்கும் கைத்தடிதான் காவி கும்பலை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. அதை சிதைத்துவிட்டால் தமிழர்களின் தலையில் நாளை கைவைத்துவிடலாம் என தப்புக்கணக்குப் போடுகிறது பாஜக.

சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தருணம் அது. அப்போது ஒரு பிரிவினர், ”தர்ப்பைப்புல் தூக்கும் நாங்கள் தடியையும் ஏந்துவோம்” என்றனர். அதற்கு சுயமரியாதை இயக்க முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரி, ”விரல் உரல் ஆகுமென்றால் உரல் என்னடா ஆகும்?” என பதிலடி கொடுத்தார்.

சிலையைத் தொடும்…. தொட்டுப்பாரும்….!

 

– பேனாக்காரன்.