Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழை கொலை செய்யும் ஊடகங்கள்! நாஞ்சில் சம்பத் ‘நறநற!!’

 

தமிழ்நாட்டில் உள்ள எல்லா
காட்சி ஊடகங்களும் திட்டமிட்டு
தமிழ்க்கொலை செய்வதாகவும்,
அதனாலேயே ஊடக விவாதங்களில்
பங்கேற்க விரும்புவதில்லை என்றும்
நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

 

இலக்கிய மேடை, அரசியல் மேடை என இரட்டை குதிரையில் சவாரி செய்து வந்த தரமான சொற்பொழிவாளர்களுள் ஒருவரான நாஞ்சில் சம்பத், அரசியல் களத்தை விட்டு வெறியேறி விட்டதாக கடந்த ஆண்டு கூறினார்.

மதிமுக தலைவர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அக்கட்சியில் இருந்து வெளியேறி, சில காலம் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே துணை கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. சுற்றுப்பயணம் மேற்கொள்ள வசதியாக அவருக்கு ஜெ., புதிதாக இன்னோவா கார் ஒன்றும் பரிசாக வழங்கினார். இன்னோவா காருக்காக அதிமுகவில் சேர்ந்ததாக அப்போது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

 

கடந்த 2016 டிசம்பரில் உடல்நலமின்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதையடுத்து, டிடிவி தினகரன் அணியில் இணைந்து கொண்டார். ஆனால் அவர் புதிதாக தொடங்கிய அமமுக கட்சியில் நாஞ்சில் சம்பத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாததால், அக்கட்சியில் இருந்தும் வெளியேறினார். அதன்பின், இனி ஒருபோதும் அரசியல் மேடை ஏற மாட்டேன், இலக்கிய மேடைகளில் மட்டுமே பயணிப்பேன் என்று அதிரடியாக அறிவித்தார் நாஞ்சில் சம்பத்.

 

அவருடைய நிலைப்பாடுகள் குறித்து காட்சி ஊடகங்கள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தன. அவரை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வெளிவந்தன. இந்நிலையில், ‘கருப்பர் கூட்டம்’ என்ற யுடியூப் சேனலுக்கு அவர் அண்மையில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘முன்புபோல் ஏன் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வதில்லை?’ என்ற கேள்விக்கு அவர் பின்வருமாறு பதில் அளித்து இருந்தார்…

 

”காட்சி ஊடகங்களின் நடவடிக்கைகள்,
அதன் செயல்பாடுகள் மகிழ்ச்சி
கொள்ளும்படியாக இல்லை.
விவாதம் என்ற பெயரில்
உப்புச்சப்பு இல்லாத பொருள்களை
எடுத்துக்கொண்டு, தப்பு தப்பாக
தப்பாட்டம் ஆடுகிறவர்களை
அந்த அரங்கத்திற்குள் அமர
வைத்திருக்கின்றனர்.
அவர்களின் பெயர்களைச் சொல்ல
விரும்பவில்லை. ஊடக
நெறியாளர்கள் ஆங்கிலத்தில்
பேசுகின்றனர். அதற்கு பதில்
அளிப்பவர்களும் ஆங்கிலம்
அறிந்தவர்கள் மாதிரியும்,
ஏதோ லண்டனில் பிறந்தது
மாதிரியும் பேசுகிறார்கள்.

 

தமிழ்நாட்டில் இருக்கும் ஓர் ஊடகம்…
அனைத்து ஊடகங்களுமே திட்டமிட்டு
தமிழ்க்கொலை செய்கின்றன.
அதனாலேயே இந்த
நாஞ்சில் சம்பத் எந்த விவாதங்களிலும்
கலந்து கொள்வதில்லை.
அது மட்டுமில்லாமல்,
எந்தப் பொருளுக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ,
எந்தப் பொருளை
விவாதிக்க வேண்டுமோ
அதிலிருந்து வசதியாக
அவர்கள் ஒளிந்து கொள்வதை
தமிழர்கள் மறந்து விட வேண்டாம்.

 

இன்றைக்கு, உயர்சாதியினருக்கு
10 சதவீத இடஒதுக்கீடு என்று
நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி,
பத்தே நாளில் குடியரசுத் தலைவரின்
ஒப்புதலை பெற்று நடைமுறைக்குக்
கொண்டு வருவதற்கு
பாசிஸ்டுகள் துடிக்கின்றனர்.
அதை தோலுரித்துக் காட்டுவதற்கு
எந்த ஊடகங்களுக்கும்
துணிச்சல் இல்லை.
ஆகவே ஊடகங்கள்
உண்மையை உரக்கச் சொல்லவும்,
உண்மையைச் சொல்வதால்
வரக்கூடிய விளைவுகளை
எதிர்கொள்ளவும் ஊடகங்கள்
தயாராக இல்லை என்பது
கவலைக்குரிய செய்தி.
ஆனால் ஊடகங்கள்
அதைச் செய்வதன் மூலம்தான்
தங்களது உயரத்தை
எட்ட முடியும்
என்று கருதுகிறேன்,” என்றார்.

 

”சினிமாவில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறதே?” என்ற கேள்விக்கு அவர், ”நான் சினிமாவில் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. அதற்கு முயற்சிக்கவும் இல்லை. பொதுவாழ்வை விட்டு வந்தபிறகு நான் எங்கே காணாமல் போய்விடுவேனோ என்ற கவலை மட்டும் எனக்கு இருந்தது. அதனால் ஏதாவது ஒரு வெளியில் நாஞ்சில் சம்பத் வெளிப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

 

இந்த நிலையில்தான் என் ஆருயிர் தம்பி ஆர்.ஜே. பாலாஜி, தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தனக்கு தந்தையாக நடிக்க வேண்டும் என்று என்னைத் தேடி வந்து கேட்டார். அதனால் அவர் நடிக்கும் எல்கேஜி என்ற படத்தில் ஒன்பது நாள்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதேபோல்தான் பிளாக்ஷிப் என்ற ஒரு யூடியூப் சேனலை தம்பிகள் புதிதாக தொடங்கினார்கள்.

 

அவர்கள் வளர துடிக்கும் இளைஞர்கள் என்பதால் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக இரண்டு மூன்று முறை நேர்காணலில் கலந்து கொண்டேன். அப்படித்தான் அவர்கள் எனக்கு பரிச்சயம் ஆனார்கள். அந்தக் குழுவில் இருக்கும் சிலர், இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படத்தை எழுதி, இயக்குகின்றனர். அவர்கள் கேட்டதன் பேரில், ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ என்ற படத்தில் இரண்டு நாள்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். காணாமல் போகவில்லை சம்பத், கவனத்தில் இருக்கிறான் என்பதற்கு இந்தப் பயணம் பயன்படும் என நம்புகிறேன்,” என்றார்.

 

”தமிழ்நாட்டை ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறீர்களே?” என்ற கேள்விக்கு, ”ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் ஸ்டாலின் முந்துகிறார். திராவிட இயக்கத்தினுடைய ஒரு கூர்மையான பார்வையை அவர் எதிரொலிக்கிறார். மோடியின் வீழ்ச்சியில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என நம்பி அதற்கான திட்டங்களை அறிவித்தது மட்டுமல்ல; இந்திய துணைக்கண்டத்தில் நாட்டின் பிரதமரை அடையாளம் காட்டும் தகுதி தென்தமிழகத்திற்கு உண்டு என்று ராகுல் பெயரை அறிவித்ததன் மூலம் ஸ்டாலினுடைய உயரம் இன்றைக்கு கண்ணுக்குத் தெரிகிறது.

 

ஆகவே கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்வதன் மூலம்தான் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற காரணத்தால் அவர்கள் வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

 

இதையடுத்து அரசியல் பிரபலங்கள் சிலரைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் கருத்து சொல்லும்படி நாஞ்சில் சம்பத்திடம் கேட்கப்பட்டது.

 

ஹெச்.ராஜா – வாயில் கூவம் வைத்திருக்கிறவர்

தமிழிசை – தேவையற்ற தொங்கு சதை

பொன்.ராதாகிருஷ்ணன் – அவர் பேசுவது அவருக்கே புரியாது

டிடிவி தினகரன் – துன்பத்திலும் சிரிக்கிறார்

மு.க.ஸ்டாலின் – ஆளப்பிறந்தவர்

சீமான் – குழப்பத்தின் உச்சமும் மிச்சமும் அவர்தான்

மோடி – இந்தியாவின் தேசிய அபாயம்

பினராயி விஜயன் – ஒரு மார்க்சிஸ்டாக இருந்து சமூக சீர்திருத்தங்களில் திராவிட இயக்கத்திற்கே வழிகாட்டுகிறார்

 

இவ்வாறு அரசியல் பிரபலங்களைப் பற்றி நாஞ்சில் சம்பத் ஓரிரு வார்த்தைகளில் கருத்து தெரிவித்தார்.

 

– பேனாக்காரன்