Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

என்றைக்கும் இல்லாத திருநாளாக
டி.எம்.செல்வகணபதி வைத்த ‘மெகா’
கிடா விருந்துதான், சேலம்
மாவட்ட திமுகவில் இப்போதைக்கு
காரசார விவாதப்பொருளாகி
இருக்கிறது.

 

கடந்த பிப்ரவரி 3, 2019ம் தேதி, திமுகவினர் அறிஞர் அண்ணாவின் ஐம்பதாவது ஆண்டு நினைவுதின ஊர்வலம், பேச்சரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்க, அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளரான டி.எம்.செல்வகணபதியோ, ஏற்காட்டில் ஒரு பெருவிருந்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

ஏற்காட்டிலிருந்து குப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சூரக்குடி முனியப்பன் கோயிலில் கிடா வெட்டி வழிபட்டார் டிஎம்எஸ். ‘பிப்ரவரி 3ம் தேதியன்று, பெருவிருந்து காத்திருக்கிறது. எல்லோரும் ஏற்காடு ஏரி அருகே உள்ள திலகம் நெஸ்ட் ஹோட்டலுக்கு மதியம் 12 மணிக்கு வந்துவிடுமாறு’ ஏற்காடு ஒன்றிய திமுகவினர், கட்சியினருக்கு வாட்ஸ்அப்களில் குறுஞ்செய்திகளை தட்டிவிட, கிட்டத்தட்ட 3000 பேர் குவிந்தனர்.

 

ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே, அதாவது காலை 11 மணிக்கெல்லாம் கிடா விருந்துக்கான ஏற்பாடுகளை நிறைவாக செய்து முடித்திருந்தார், டிஎம்எஸ். கிட்டத்தட்ட 24 கிடாக்கள், நாட்டுக்கோழிகள் வெட்டப்பட்டதாக சொல்கின்றனர். ஏற்காட்டை விட, தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த, ஆரம்ப காலங்களில் அவருடன் அதிமுகவில் பயணித்ததுடன், அவருடன் பின்னாளில் திமுகவில் வந்து சேர்ந்தவர்கள் அதிகளவில் விருந்தில் பங்கேற்றனர்.

 

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்டோரும் விருந்தில் கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஏனோ அதில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு அழைப்பு இல்லையா? அல்லது அவரே தவிர்த்துவிட்டாரா? என்பதற்கு உறுதியான தகவல்கள் இல்லை.

டிஎம்.செல்வகணபதி அளித்த பெருவிருந்துதான் சேலம் மாவட்ட திமுகவில் இப்போது காரசார விவாதங்களையும், பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள் சிலர்.

 

”அதிமுக, 1991 முதல் 1996 வரை
ஆட்சியில் இருந்தபோது
டி.எம்.செல்வகணபதி அமைச்சராக
இருந்தார். 1996ல் ஆட்சிக்கு
வந்த திமுக, சுடுகாட்டுக்கூரை
அமைத்ததில் ஊழல் நடந்ததாக
செல்வகணபதி மீது வழக்கு தொடர்ந்தது.
2006 காலக்கட்டத்தில் அதிமுக
தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி
காரணமாக, அக்கட்சியில் இருந்து
ஒதுங்கி இருந்த செல்வகணபதி,
2008ல் திமுகவில் இணைந்தார்.
அவருடன் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட அதிமுகவினரும்
இணைந்தனர்.

 

அந்த சமயத்தில்தான், 2009ல்
பென்னாகரம் தொகுதிக்கு
இடைத்தேர்தல் நடந்தது. அங்கே
தேர்தல் களத்தில் செல்வகணபதி
சிறப்பாக பணியாற்றியதால்,
அவரை அடுத்த ஆண்டே
ராஜ்ய சபா எம்.பி. ஆக்கியது திமுக.
அவருடைய போதாத காலமோ
என்னமோ, 2014ல் அவருக்கு
சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கில்
2 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது.
அதனால் அவர் எம்.பி. பதவியை
இழக்க நேர்ந்தது.

 

இருந்தாலும் செல்வகணபதியை தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமித்து அவருக்குரிய மரியாதையைச் செய்தது திமுக. ஆனாலும், செல்வகணபதி, வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய மும்மூர்த்திகளும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

கடந்த 2017ம் ஆண்டு, மாநகர பகுதியில் செல்வகணபதி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அதனால் அப்போது அவருடைய ஆதரவாளர்களும், வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அன்றைய தினம் இரவு, செல்வகணபதி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். வழக்கறிஞர் ராஜேந்திரன்தான் ஆள்களை ஏவிவிட்டு குண்டு வீசியிருக்க வேண்டும் என்று திட்டமிட்டே பொய்யான செய்திகளை அப்போது பரப்பினர்.

 

ஆனால் காவல்துறை விசாரணையில், செல்வகணபதியின் ஆதரவாளர்களே திட்டமிட்டு அவருடைய காரில் பெட்ரோல் குண்டு வீசி அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சித்திருப்பது வெட்டவெளிச்சமானது. அந்த சம்பவத்தில் டிஎம்எஸ் மீது கட்சி மேலிடத்திற்கு ரொம்பவே அதிருப்தி உருவானது. குறிப்பாக, டிஎம்எஸ்ஸின் செயல்பாட்டை தளபதியார் கொஞ்சமும் ரசிக்கவில்லை.

இப்போது திடீரென்று கட்சிக்காரர்களுக்கு கிடா விருந்து வைத்திருக்கிறார். இரண்டு வருஷத்திற்கு முன்பு, வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு எதிராக களமாடும் திமுக புள்ளி ஒருவர், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்தார். அதே வேண்டுதலோடுதான் டிஎம்எஸ்ஸூம், இப்போது மூன்று கருப்பு கிடாக்கள் முனியப்பன் கோயிலில் வெட்டி வழிபட்டிருக்கிறார். அதுவும் சூரக்குடி முனியப்பன் சாமி ரொம்பவே சக்தி வாய்ந்தது,” என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

விருந்தில் கலந்து கொண்ட பலருக்கும் விருந்தின் நோக்கம் குறித்த கேள்விகள் எழாமல் இல்லை. செல்வகணபதியிடம் சிலர் நேரடியாக கேட்டேவிட்டனர். ஆனால் அவரோ சிரித்துக்கொண்டே மழுப்பலான பதிலைச் சொன்னாராம். அதேநேரம், ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் முனியப்பன் சாமிக்கு ஒரு வேண்டுதல் வைத்திருந்தாராம். அதற்காகத்தான் இப்போது கிடா வெட்டி விருந்து வைக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து நாம் டி.எம்.செல்வகணபதியிடமே கேட்டோம். ”என்னண்ணே நீங்க பாட்டுக்கு கிடா வெட்டிட்டீங்க. ஏன் விருந்து வைச்சாருனு சேலம் திமுகவில் ஒரே பரபரப்பு பேச்சா இருக்கேண்ணே…” என்றோம். வெடிச்சிரிப்புடன் பேச ஆரம்பித்தார்.

 

”சூரக்குடி முனியப்பன கோயில், வெண்ணங்கொடி முனியப்பன், திருச்செங்கோடு முனியப்பன் கோயில்னு ஒரு ரெண்டு மூணு கோயில்ல கிடா வெட்டணும்னு வேண்டுதல் வைச்சிருந்தேன். இது எல்லாத்தையும் ஒரே நாள்ல முடிச்சிட வேண்டியதுதான்னு ஒரேயடியாக அடிச்சி விட்டுட்டேன். காலைல 11 மணிக்கு ஆரம்பிச்ச விருந்து சாயங்காலம் 5 மணிக்குதான் முடிஞ்சது. இது, ஒரே நாளில் முடிவு பண்ணினதுதான். கட்சிக்காரர்களை மட்டும்தான் கூப்பிட்டேன். சொந்தக்காரங்களக்கூட அழைக்கல,” என்றார்.

 

அவரிடம், ”சார்…. சத்ரு சம்ஹார பூஜை மாதிரி இந்த கிடா வெட்டு பின்னணியிலும் ஏதாவது இருக்கிறதா?” என்றோம். அதற்கும் குபீரென சிரித்தவர், ”நமக்கு ஏது சத்ரு…? நம்மளதான் பல பேரு சத்ருவாக பார்க்கிறாங்க. யாரோ ஏதோ சொல்லட்டும். நாமதான் எதைப்பத்தியும் கவலைப்படறதில்லையே…” என்றார்.

 

– பேனாக்காரன்