Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரமரணம் அடைந்து இன்றுடன் (நவம்பர் 2, 2017) பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உலகத்தமிழர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

தமிழ்ச்செல்வன் யார்?

விடுதலைப்புலிகள் இயக்க செயல்பாடுகள் மீது பற்றுகொண்டு, தன்னுடைய 17வது வயதில் இயக்கத்துடன் இணைத்துக் கொண்ட சு.ப.தமிழ்ச்செல்வன், இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். எனினும், இயக்கத்தில் இணைந்த பிறகு, யாழ்ப்பாணமே அவருடய களமானது.

இலங்கை அரச பயங்கரவாதத்தின் சதியால் வான்வெளி ராணுவக் குண்டு வீச்சில் 2.11.2007ம் தேதி காலை 6 மணியளவில் தமிழ்ச்செல்வன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். அவர் மரணிக்கும் வரை கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்காக நெஞ்சுரத்துடன் உழைத்த முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகவே விளங்கினார், தமிழ்ச்செல்வன்.

துவக்கத்தில் படைப்பிரிவிலும், பின்னர் அரசியல் பிரிவிலும் பணியாற்றினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசுக்கு இணையான அரசை கட்டமைத்துச் செயல்பட்டு வந்தது. அந்தச்சூழ்நிலையில், பிரிகேடியர் பொறுப்பில் இருந்த தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த இரண்டு முக்கியத் தாக்குதல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவை.

ஒன்று…மன்னார் சிலாவத்துறை ஸ்ரீலங்கா படை முகாம் மீதான தாக்குதல். இன்னொன்று, ஆகாய கடல்வெளிப் போரில், கடல் வழியிலான படை இறக்கப்படுவதை எதிர்த்து நடந்த போர்.

அப்போது, விடுதலைப்புலிகளிடம் கடல்புலிகள் பிரிவோ, பீரங்கி படையணியோ, மோட்டார் படைகளோ இல்லாத நிலை. அப்படியொரு கையறு நிலையிலும்கூட தமிழ்ச்செல்வன் மிகுந்த நெஞ்சுரத்துடன் போரிட்டு இலங்கை ராணுவத்தை ஓடஓட தெறிக்கவிட்டார்.

அரசியல் பொறுப்பு:

சீரிய செயல்பாடுகள் காரணமாக இளம் வயதிலேயே தமிழ்ச்செல்வன் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். உலக நாடுகளுடன் எப்படி செயல்பட வேண்டும் என்ற நுட்பமான அரசியல் கலைகளை அவர், மூத்த அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கத்திடம் கற்றுக்கொண்டார்.

பலர் கருதுவதுபோல் அரசியல் பொறுப்பாளர் பணி அத்தனை எளிமையானது அல்ல. தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் ஓர் இயக்கம் அல்லது போர் சூழலிலேயே இருந்து வரும் மக்கள். அத்தகைய நிலையில் மக்களிடம் தங்கள் இயக்கத்தின் மீதான ஈர்ப்பும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; நாட்டு விடுதலை உணர்வும் அமுங்கி விடாமல் செயல்பட வேண்டும்.

இவை இரண்டையும் தனக்கே உரிய புன்னகையுடன் திறம்பட கையாண்டார் தமிழ்ச்செல்வன். மக்கள் தளத்தில் இயங்குவதும், ராஜதந்திரத்துடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதிலும் இயல்பாகச் செயல்பட்டார்.

அரசியல் இயக்கத்தின் சிவில் கட்டமைப்புகள் எந்த விதத்திலும் குலையாமல் பார்த்துக் கொண்டார். சுனாமி காலத்தில் தமிழர்களை துரிதகதியில் மீள் நிலைக்குக் கொண்டு வந்ததிலும் அவருடைய பணி மகத்தானது என்கிறார், இலங்கை பத்திரிகையாளர் ஒருவர்.

பேரிடர் நிவாரணம்:

பேரிடர் காலத்தில் யாழில் இருந்து வன்னியை நோக்கி ஒரே இரவில் 5 லட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். சாதாரண மழைக்கே நிவாரணப்பணிகளை திறம்படச் செய்வதில் இப்போதும் தடுமாறி வரும் தமிழக அரசுடன் ஒப்பிடுகையில், 5 லட்சம் பேருக்கான நிவாரணப்பணிகள் என்பது அசாத்தியமானதுதான். ஆனால், அந்த அசாத்திய பணிகளை அனாயசமாக செய்து முடித்தார் தமிழ்ச்செல்வன்.

இதற்கிடையே, அனைத்துலக நாடுகளின் உதவிகள் தமிழர்களுக்குக் கிடைத்துவிடாதபடி பல தகிடுத்தத்தங்களைச் செய்து வந்தது கேடுகெட்ட சிங்கள அரசு. முட்டாள்களுக்கு ஒரு வழி; புத்திசாலிகளுக்கு பல வழிகள் என்பதற்கேற்ப, எட்டக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி தமிழர்களின் துயர் துடைத்தார் தமிழ்ச்செல்வன்.

அவரைப் பொறுத்தவரை, விட்டுக்கொடுத்தல் என்பதும், இணைந்து செயல்படுதல் என்பதும் புனிதம் கெட்ட அரசியல் ராஜதந்திரம். வேறு ஒன்றும் கூறுவார். சமாதானம், அடிமைகளை உருவாக்குகிறதென்றால் அதற்கு சுதந்திரத்தை சாகடிக்கும் வல்லமை இருப்பதானாலேயாகும் என்றும் கூறுவார்.

நார்வே நாட்டு அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட 8ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இப்போது ஜெனீவாவில் ஈழத்தமிழர்கள் அரசியல் விவகாரம் குறித்த பேச்சு நடப்பதற்கும் தமிழ்ச்செல்வன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே காரணம்.

இதற்கு முன்பே, 1994ம் ஆண்டில் சந்திரிகா அரசுடனான அமைதி பேச்சுவார்த்தையிலும் தமிழ்ச்செல்வனின் செயல்பாடுகள் மிகுந்த கவனத்தை ஈர்த்து இருந்தது.

கொலைக்கு காரணம் யார்?:

இலங்கை இறுதி யுத்தத்திற்குப் பின்னர், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவான சிஐஏ-வின் அறிக்கையில் இருந்த சில தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. தமிழ்ச்செல்வன் படுகொலைக்குப் பின்னணி யார் என்பது குறித்த காரணங்களும் சொல்லப்பட்டு இருந்தது.

பிரபாகரனின் முன்னாள் மெய்க்காப்பாளர் ஒருவர் அளித்த தகவலின்படிதான் துல்லியமான வெடிகுண்டு தாக்குதல் மூலம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்று சிஐஏ அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

பிரபாகரன் இரங்கல் குறிப்பு:

தமிழீழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பொட்டு அம்மான் போன்ற முக்கிய தளபதிகளின் வரிசையில் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் முக்கிய இடமுண்டு. அதனால்தான் தமிழ்ச்செல்வன் மறைவு குறித்த இரங்கல் குறிப்பில், ”அவனை என் தம்பியைப் போலவே வளர்த்து வந்தேன்.

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த லட்சிய நெருப்பு,” என்று குறிப்பிட்டு இருந்தார். சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு அடுத்த நாள் (3.11.2007) இந்த இரங்கல் குறிப்பை பிரபாகரன் வெளியிட்டார்.