Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ட்வென்டி – 20 கிரிக்கெட் போட்டியில், அந்த அணியை இந்தியா துவம்சம் செய்து, 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று (நவம்பர் 1, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா இன்றைய போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதை கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர், முதன்முதலாக சர்வதேச ட்வென்டி – 20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கினார்.

தவான் – ரோஹித் அபாரம்:

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தனது அணி முதலில் பந்து வீச அழைத்தார். போல்ட், டிம் சவுத்தீ போன்ற வேகங்கள் இருந்தும், அவர்களின் பந்து வீச்சு ஆட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஷிகர் தவவான், ரோஹித் ஷர்மா ஆகியோரின் ஆட்டத்தில் துவக்கம் முதலே அனல் பறந்தது.

அபாரமாக ஆடிய ஷிகர் தவான், 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மற்றொரு முனையில் அதிரடி காட்டி வந்த ரோஹித் ஷர்மாவும் 55 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவருமே சோதியின் சுழலில் வீழ்ந்தனர். சிக்ஸர் மன்னன £ன ஹர்திக் பாண்ட்யா, டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இறுதிக்கட்டத்தில் கேப்டன் விராட் கோஹ்லி அதிரடியாக ஆடி 26 ரன்கள் எடுத்தார். டோனி 7 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைக் குவித்தது. ரன் ரேட் 10.10.

நியூஸிலாந்து சொதப்பல்:

இதையடுத்து, 203 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடத் தொடங்கிய நியூஸிலாந்து அணி, சீரான இடைவெளியில் வி க்கெட்டுகளை இழந்தது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார் விராட் கோஹ்லி. அந்த உத்தியும் அவருக்குக் கைகொடுத்தது.

மார்டின் குப்தில், கேன் வில்லியம்சன், டாம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ் என ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றிருந்தாலும், இன்றைய போட்டியில் ஒருவர்கூட நிலைத்து நின்று ஆடவில்லை.

அந்த அணியின் மார்டின் குப்தில் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அவரை வெளியேற்றினார். நியூஸிலாந்து தரப்பில் கேப்டன் கேன் வில்லியம்சன் (28 ரன்), டாம் லேதம் (39 ரன்) ஆகியோர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தனர்.

இந்தியா வெற்றி:

20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 149 ரன்களே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 3 ட்வென்டி&20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி தரப்பில் சாஹல், அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 80 ரன்கள் குவித்த ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அபார சாதனை:

இந்தியாவும், நியூஸிலாந்தும் இதுவரை 6 ட்வென்டி-20 போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. அவற்றில் 5 போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அணியின் ஒருங்கிணைந்த முயற்சியால் நியூஸிலாந்தை இந்திய அணி தனது சொந்த மண்ணில் வீழ்த்தி வாகை சூடியது.

ஆஷிஸ் நெஹ்ரா பிரியாவிடை:

இந்திய அணிக்காக கடந்த 19 ஆண்டுகளாக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெற்றார். டெல்லி மண்ணின் மைந்தரான அவரை கவுரவிக்கும் விதமாக இந்தப் போட்டியை, டெல்லியில் நடத்தப்பட்டது. கடைசி போட்டியில் 4 ஓவர்கள் முழுமையாக பந்து வீசினாலும் சிக்கனமாக (எகானமி ரேட் 7.25) ரன்களை விட்டுக்கொடுத்தார். எனினும், விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றவில்லை. போட்டியின் முதல் ஓவரும், கடைசி ஓவரும் அவரே வீ¦சினார்.

மகத்தான வெற்றியுடன் அவருக்கு சக வீரர்கள் வழியனுப்பி வைத்தனர். மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களும் கரவொலி எழுப்பியும், மொபைல் போனில் இருந்து லைட் அடித்துக் காண்பித்தும் வழியனுப்பி வைத்தனர். டெல்லி மண்ணின் மைந்தரான ஷிகர் தவான், கேப்டன் கோஹ்லி ஆகியோர் ஆஷிஸ் நெஹ்ராவை தோளில் தூக்கி சுமந்து மைதானத்தில் வலம் வந்தனர்.

இந்திய அணிக்காக அவர் ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 20 ஓவர் போட்டிகளில் 34 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அவருடைய சிறந்த பந்துவீச்சு 23 ரன்களுக்கு 6 விக்கெட் என்பதாகும்.