Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

மக்களவை தேர்தலில்,
39 ஆண்டுகளுக்குப் பிறகு
சேலம் தொகுதியை வசப்படுத்தி,
வரலாற்று வெற்றியைப் பதிவு
செய்துள்ளது, திமுக.
அக்கட்சியின் வேட்பாளர்
எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக
வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.

 

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர்.

ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, அதிமுக ஹாட்ரிக் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

 

அதேநேரம், எப்போதெல்லாம் திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறதோ அப்போதெல்லாம் சேலம் மக்களவை தொகுதியை கூட்டணியில் இடம்பெறும் முக்கிய கட்சிக்கு ஒதுக்கி வந்தது திமுக. இந்தமுறையும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தபோதும், துணிச்சலாக திமுகவே சேலத்தில் களம் இறங்கியது. கடைசியாக திமுக இந்த தொகுதியில் கடந்த 1980ம் ஆண்டு நேரடியாக போட்டியிட்டு இருந்தது. 39 ஆண்டுகளுக்குப் பிறகு மாங்கனி மாவட்ட தொகுதியில் களம் கண்ட திமுக, கொஞ்சமும் தொய்வின்றி பரப்புரையில் கவனம் செலுத்தியது.

 

சேலம் மக்களவை தொகுதிக்குள் அடங்கியுள்ள ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 16 லட்சத்து 12 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடந்தது. சேலம் தொகுதியில் மொத்தம் 12 லட்சத்து 38 ஆயிரத்து 329 வாக்குகள் பதிவாகின. அதாவது 76.79 சதவீத வாக்குகள் பதிவாகின. கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மையத்தில், மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

 

தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும்போது தேர்தல் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தன் கட்சி முகவர்களுடன் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனும் வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராகி விட்டார். அதிமுக வேட்பாளர் சரவணன், அடுத்தடுத்த சுற்றுகளில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, அந்த மையத்தில் இருந்து வேகமாக வெளியேறிவிட்டார்.

 

தொடர்ந்து ஏறுமுகத்தில்
இருந்த எஸ்.ஆர்.பார்த்திபன்,
7வது சுற்று முடிவின்போது
அதிமுக வேட்பாளரைக் காட்டிலும்
54368 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
26 சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்ட
நிலையில், அவர் 146926 வாக்குகள்
வித்தியாசத்தில் அமோகமாக
வெற்றி பெற்றார்.

 

இந்த வெற்றியின் மூலம்
திமுக பல வரலாற்று சாதனைகளையும்
பதிவு செய்துள்ளது. வழமையான சில
எதிர்பார்ப்புகளையும் தகர்த்தெறிந்துள்ளது.
முதல்வர் மாவட்டம் என்பதோடு,
எடப்பாடி பிறந்த மண்ணான
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியிலேயே
அதிமுகவுக்கு 96485 வாக்குகள் மட்டுமே
கிடைத்து இருந்தன. அதேநேரம்,
திமுகவுக்கு 104573 பேர் வாக்களித்திருந்தனர்.
திமுகவுக்கு நகர்ப்புறத்தில் செல்வாக்கும்,
கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு
வலுவான வாக்கு வங்கியும் இருக்கும்
என்றே நம்பப்பட்டு வந்தது.

இந்த தேர்தலில், கிராமப்புறங்களிலும்
திமுக கணிசமான வாக்குகளை
அறுவடை செய்திருக்கிறது. ஓமலூர்
சட்டப்பேரவை தொகுதியில் 118846
வாக்குகளை திமுக அள்ளியிருந்தது.
அதிமுகவுக்கு அங்கு 85551 வாக்குகளே
கிடைத்து இருந்தன. கிராமங்களை
உள்ளடக்கிய வீரபாண்டி சட்டப்பேரவை
தொகுதியிலும் திமுக 98411 வாக்குகளை
பெற்று இருக்கிறது. அதிமுகவுக்கு
74858 வாக்குகள் பதிவாகி இருந்தன.

 

சேலம் மக்களவை தொகுதியில்
திமுக கடைசியாக 1980ல் நேரடியாக
போட்டியிட்டது. அந்த தேர்தலில்
திமுகவின் சி.பழனியப்பன் வெற்றி
பெற்று எம்பி ஆனார். 39 ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் சேலம் மக்களவையில்
களம் கண்ட திமுக, வரலாற்று
வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

 

திமுக தரப்பில் சேலம் தொகுதியில்
போட்டியிட முதலில் தேர்வு
செய்யப்பட்டவர் தாமரைக்கண்ணன்.
மதிமுகவில் இருந்து ஓராண்டுக்கு
முன்பு, திமுகவில் இணைந்த
தாமரைக்கண்ணன், தேர்தலில் செலவு
செய்யும் அளவுக்கு பொருளாதார
வசதியில்லை என்று வேட்பாளர்
நேர்காணல் நடந்த நாளன்று
திடீரென்று கைவிரித்து விட்டார்.
அதன்பிறகே எஸ்.ஆர்.பார்த்திபனை
அவசர அவசரமாக சேலம்
தொகுதி வேட்பாளராக ‘டிக்’ செய்தார்
அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

எஸ்.ஆர்.பார்த்திபனும் அபாரமாக வென்று, கட்சித் தலைமையிடம் வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்துவிட்டார்.

 

– பேனாக்காரன்