Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு
திமுக, கோட்டையில்
கொடி நாட்டினாலும்,
மாங்கனி மாவட்டமான
சேலத்தில் மட்டும் தொடர்ச்சியாக
மூன்று சட்டப்பேரவைத்
தேர்தல்களில் திமுக கோட்டை
விட்டிருப்பது உடன்பிறப்புகளிடையே
சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அதேநேரம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள
பெரும்பான்மை தொகுதிகளைக்
கைப்பற்றி, மீண்டும் இந்த
மண்ணை அதிமுகவின்
கோட்டை என நிரூபித்திருக்கிறார்
முன்னாள் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி.
உள்ளடி வேலைகள்,
கோஷ்டி பூசல்களால்
திமுகவால் இங்கு ஒரு
தொகுதிக்கு மேல் கைப்பற்ற
முடியாத சோகம் தொடர்கிறது.

கடந்த 2011ல் நடந்த
சட்டமன்றத் தேர்தலில்
அதிமுக – தேமுதிக கூட்டணி,
சேலம் மாவட்டத்தில் உள்ள
11 தொகுதிகளையும் கைப்பற்றியது.
2016 தேர்தலில் அதிமுக
தனித்து 10 தொகுதிகளில்
வெற்றி பெற்றிருந்த நிலையில்,
சேலம் வடக்கில் மட்டும்
சூரியன் உதித்து இருந்தது.

 

கடந்த 2019ல் நடந்த
மக்களவை தேர்தலில்
திமுக எம்.பி., எஸ்ஆர். பார்த்திபன்,
அதிமுகவை விட 146926
வாக்குகள் கூடுதலாகப்
பெற்று வெற்றி அடைந்தார்.

 

இந்நிலையில்,
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக
ஆட்சியில் இருக்கும் அதிமுக
மீதான அதிருப்தி,
உள்கட்சி பூசல்கள்,
ஜெயலலிதா மறைவு உள்ளிட்ட
காரணங்களால், 2021
சட்டமன்றத் தேர்தலில்
சேலம் மாவட்டத்தில்
அதிமுகவின் தொடர்
வெற்றிக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட முடியும் என
திமுக அழுத்தமாக நம்பியது.

 

ஆனால் அண்மையில்
நடந்து முடிந்த சட்டமன்றத்
தேர்தலில், சேலம் மாவட்டத்தில்
திமுக எதிர்பார்த்த மாயாஜாலங்கள்
நிகழவில்லை. கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின், கனிமொழி,
தயாநிதி மாறன், உதயநிதி
ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள்
தலைவர் ராகுல்காந்தி என
பெருந்தலைகள் எல்லோரின்
நேரடி கவனமும் சேலத்தின்
மீது இருந்தும் கூட, இங்கே
திமுக கூட்டணியால் எதிபார்த்த
அறுவடையைப் பெற இயலவில்லை.

 

சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள்,
பட்டியல் சமூகத்தினர் வாக்குகளால்,
சேலம் வடக்கு தொகுதியில்
சிட்டிங் எம்எல்ஏ ராஜேந்திரன்
கடும் சிரமத்திற்கிடையே
இரண்டாவது முறையாக
வெற்றி பெற்றார். எஞ்சிய
10 தொகுதிகளையும் அதிமுக
கூட்டணி வசப்படுத்தியது.

 

அதிமுக, ஒட்டுமொத்தமாக
ஆட்சியை இழந்திருந்தாலும் கூட,
சேலம் மாவட்டத்தில் மட்டும்
அக்கட்சியால் எப்படி பெரு
வெற்றி பெற முடிந்தது என
முன்னாள் எம்எல்ஏ
செம்மலையிடம் கேட்டோம்.

”எம்ஜிஆர் காலத்தில்
இருந்தே சேலம் மாவட்டம்
அதிமுகவின் கோட்டைதான்.
அதேநேரம், ஓர் அமைச்சராகவும்,
முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி
இந்த மாவட்டத்தில் ஏராளமான
வளர்ச்சித் திட்டங்களை
நிறைவேற்றியுள்ளார்.

 

மேம்பாலங்கள்,
கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா,
மேட்டூர் அணை உபரி நீரை
103 ஏரிகளில் நிரப்பும் திட்டம்,
தரமான சாலைகள், குடிநீர் வசதி
என எல்லாமே மக்களிடம்
சென்றடைந்துள்ளன.
எட்டுவழிச்சாலை எதிர்ப்பு
பிரச்சாரங்கள்கூட எடுபடாமல்
போனது. அதனால்தான்
சேலம் மாவட்டத்தில் மீண்டும்
எங்களுக்கு பெரும்பான்மை
வெற்றி கிடைத்திருக்கிறது.

 

அதேநேரம்,
ஆட்சியை இழந்ததற்கு
வேறு சில காரணங்களும்
இருக்கின்றன. எங்களை விடவும்
திமுக கூட்டணி மிக வலுவாக
இருந்தது. நாங்கள் பாஜக,
பாமக என நீரில் நனைந்த
பஞ்சு மூட்டைகளை சுமந்து
கொண்டிருந்தோம்.

 

வன்னியர்களுக்கு
10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு
என்பது நல்ல திட்டம்தான்.
ஆனால் அதை முக்குலத்தோருக்கு
எதிராக திமுகவினர் திசை
திருப்பிவிட்டனர். ஆதித்தமிழர்
பேரவையை கூட்டணிக்குள்
கொண்டு வந்து, தெலுங்கு பேசும்
அருந்ததி சமூகத்தினர்
வாக்குகளை அள்ளினர்.
பாஜகவை, மதவாத
கட்சியாகவே பிரச்சாரம்
செய்தனர்.

 

இப்படி
மொழி சிறுபான்மையினர்,
மதச்சிறுபான்மையினர் வாக்குகளை
குறி வைத்து திமுக கூட்டணி
கட்சிகள் செக்ஷன் செக்ஷன் ஆக
பிரித்து வேலை செய்தது
அவர்களுக்கு கைகொடுத்தது.
அமமுக, தேமுதிகவால் சில
இடங்களில் எங்களுக்கு
வெற்றி வாய்ப்பு போனாலும்,
அவர்கள் எங்களுக்கு
பெரிய அளவில் ஸ்பாய்லர்
இல்லை,” என்கிறார் செம்மலை.

 

சேலம் மாவட்டத்தைப்
பொறுத்தவரை ஒவ்வொரு
தொகுதியிலும் இந்தமுறை
திமுக, அதிமுக ஆகிய
இரு கட்சிகளுமே 15 கோடி முதல்
40 கோடி ரூபாய் வரை செலவு
செய்திருந்தன. எடப்பாடி
தொகுதியில் முன்னாள் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி,
75 கோடியை வாரி
இறைத்ததால்தான் 93 ஆயிரம்
வாக்குகள் முன்னிலையில்
வெற்றி பெற முடிந்தது.

 

இன்றைய நிலையில்
பெரிய வாக்கு வங்கி
உள்ள கட்சி, தாராள
பணப்பட்டுவாடா என்பதை
எல்லாம் தாண்டியும்,
திமுகவின் தோல்விக்கு
வேறு பல காரணங்களையும்
சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

திமுகவின் புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

 

”வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்ட நிமிடத்தில்
இருந்தே அதிமுகவினர் அவர்களை
தலையில் தூக்கி சுமந்து கொண்டு
வேலைகளைச் செய்யத்
தொடங்கினர். அதுபோன்ற
அர்ப்பணிப்பு திமுகவில் இல்லை.
எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளர்கள்
அறிவிக்கப்படாததால் மூத்த
நிர்வாகிகள் பலரும்
நவக்கிரகங்களைப் போல
ஆளுக்கொரு திசையில்
முறுக்கிக் கொண்டு நின்றனர்.

சேலம் மேற்கு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தால் நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் யாருமே அந்த மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அவர்கள் எல்லோருமே இப்போதும் வீரபாண்டி ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, தனியாக ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு தனி ஆவர்த்தனமாக செயல்பட்டார். கோஷ்டி பூசல் மற்றும் அதிமுகவின் பணபலத்தால் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி கைநழுவிப் போனது.

 

மேற்கு மாவட்ட
பொறுப்பாளர் டிஎம்எஸ்,
எடப்பாடியில் சுற்றிச்சுற்றி
வந்தாரே தவிர, சங்ககிரி, மேட்டூர்
தொகுதிகளில் கவனம்
செலுத்தவில்லை.
எடப்பாடி பழனிசாமி
பணமழையில் தொகுதி
மக்களை குளிர்வித்த நிலையில்
திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு
தலா 500 ரூபாய் மட்டுமே
தரப்பட்டது. அதுவும்
முழுமையாகப்
போய்ச்சேரவில்லை.

 

உள்ளாட்சித் தேர்தலின்போதே எடப்பாடி, கொங்கணாபுரம் வட்டாரங்களில் திமுக பலத்த தோல்வி கண்டிருந்தது. அப்போதே திமுக பிரமுகர்கள் பலர் அதிமுகவுக்கு தாவினர். மேற்கு மாவட்டத்தில் கட்சித் தலைமை களையெடுப்பு செய்திருக்க வேண்டும். அப்போது கோட்டை விட்டதால் இப்போது மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளை இழக்க நேர்ந்தது. வலுவான எடப்பாடிக்கு எதிராக புதுமுகமான, பெரிய அறிமுகம் இல்லாத சம்பத்குமாரை வேட்பாளராக டிஎம்எஸ் ஏன் பரிந்துரை செய்தார் என்பதிலேயே மூத்த நிர்வாகிகள் பலருக்கு பலத்த சந்தேகம் இருக்கிறது.

 

சேலம் கிழக்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை வீரபாண்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்பாளர் தேர்விலேயே திமுக இடறி விட்டது. என்னதான் ஐபேக் டீம் மூலம் திமுக கள ஆய்வு செய்தாலும்கூட, வேட்பாளர் தேர்வில் பணம் கைம்மாறியதும் உண்மை. ஏற்கனவே இரண்டுமுறை தோற்றுப்போன தமிழ்ச்செல்வனுக்கு ஏற்காட்டில் சீட் தர வேண்டிய கட்டாயம் என்ன?

 

ஏற்காடு மலையை விட சமவெளிப்பகுதியில்தான் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன்கள் தரப்பட்ட நிலையில், திமுகவோ வெறும் 300 ரூபாயை கொடுத்து ஒப்பேற்றியது. அதுவும் முழுமையாக போய்ச்சேரவில்லை. அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் விஜயகுமார் போன்ற ஒருசிலரின் மெனக்கெடலால்தான் திமுகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. இல்லாவிட்டால் தமிழ்ச்செல்வன் இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருப்பார்.

ஆதிதிராவிடர் பெரும்பான்மையாக உள்ள கெங்கவல்லியில் சேலத்தில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷினிக்கு வாய்ப்பு வழங்கியதும் தோல்விக்கு முக்கிய காரணம். அதேநேரம், அவர் வெற்றி பெற்றால் எங்கே அமைச்சராகி விடுவாரோ என்ற பொறாமையால், உடன்பிறப்புகளே ரேகாவுக்கு எதிரான உள்ளடிகளில் இறங்கினர்.

 

அதேபோலதான்,
வீரபாண்டியில் போட்டியிட்ட
டாக்டர் தருண் தனிப்பட்ட
முறையில் கிளீன் இமேஜ்
உள்ளவர். ஆனாலும்,
6 பேர் கொலை வழக்கில்
பெயரைக் கெடுத்துக்கொண்ட
பாரப்பட்டி சுரேஷ்குமாரை
அருகில் வைத்துக்கொண்டு
பரப்புரைக்குப் போனதை
மக்கள் கொஞ்சமும்
ரசிக்கவில்லை.

 

அதுமட்டுமின்றி,
தருண் வெற்றி பெற்றால்,
இனி ஒருபோதும் அந்த
தொகுதியை வீரபாண்டியார்
குடும்பம் கைப்பற்ற முடியாமல்
போய்விடும். அதனால்
வீரபாண்டியார் குடும்பத்தினர்
அமமுக, அதிமுகவுக்கு
வாக்காளர்களை திசை
திருப்பிய சம்பவம் எல்லாம்
நடந்தது. வேட்பாளர் அறிவிப்புக்கு
முன்பு எதிரும் புதிருமாக இருந்த
பாரப்பட்டி சுரேஷ்குமார்,
வீரபாண்டி ராஜா, வீரபாண்டி பிரபு,
வெண்ணிலா சேகர் ஆகியோர்,
டாக்டர் தருண்தான்
வேட்பாளர் என்றதும்
எதிரிக்கு எதிரி நண்பன்
என்ற ரீதியில் எல்லோருமே
தருணை வீழ்த்த ஒரே புள்ளியில்
இணைந்துவிட்டனர்.
பாரப்பட்டி சுரேஷ்குமார்,
தருணுக்கு ஆதரவாக சுவர்
எழுதக்கூடாது என்றுகூட
முட்டுக்கட்டை போட்டார்.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்
எஸ்.ஆர்.சிவலிங்கம் இப்போதும்
வீரபாண்டி ராஜாவுடன்
நெருக்கமாக இருப்பதை
கட்சி நிர்வாகிகள் பலரும்
விரும்பவில்லை. அதனால்
பல நிர்வாகிகள் தேர்தல்
வேலைகளில் இருந்து
ஒதுங்கி இருந்தனர்.
எஸ்ஆர்எஸ், கிழக்கு மாவட்ட
நிர்வாகிகளை சரியாக
ஒருங்கிணைக்காததும் கிழக்கு
மாவட்டத்திற்கு உட்பட்ட
தொகுதிகளில் வீழ்ச்சி
அடைய முக்கிய காரணம்.

சேலம் மத்திய மாவட்டத்தைப் பொறுத்தவரை சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர் ஆகிய தொகுதிகள் வருகின்றன. அம்மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மட்டும் சேலம் வடக்கில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மூங்கில்பாடி சாமிநாதன், மாஜி துணை மேயர் பன்னீர்செல்வம், காடையாம்பட்டி ராஜேந்திரன், கிச்சிப்பாளையம் குணசேகரன் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்திய மாவட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை மட்டுமின்றி, எஸ்ஆர்.பார்த்திபன் எம்.பி.,யைக் கூட வேட்பாளர்கள் சந்திக்கக் கூடாது என்று ராஜேந்திரன் தனியொரு வளையத்தை போட்டு வைத்தார். அதனால் மூத்த நிர்வாகிகள், எம்.பி.,யின் ஆதரவாளர்கள் கட்சிக்கு வேலை செய்யாமல் ஒதுங்கி விட்டனர்.

சேலம் மேற்கில் வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டதும் கூட அங்கு தோல்விக்கு காரணம். ராஜேந்திரனின் ஆதரவாளரான குபேந்திரனுக்கு சீட் இல்லை என்ற தகவல் கசிந்ததால், ஓமலூர் தொகுதியை காங்கிரஸூக்கு விட்டுக் கொடுத்தார். அதேநேரம், வழக்கறிஞர் ராஜேந்திரன் ஜெயித்தால் மந்திரி ஆகிவிடுவார் என்பதால் அவரை தோற்கடிப்பதற்கான எல்லா வகையிலும் உள்ளடி வேலைகள் நடந்தன,” என பட்டியலிட்டார்கள் மூத்த உடன்பிறப்புகள்.

 

மற்றொரு மூத்த திமுக
நிர்வாகியோ,
”சேலம் மாவட்டத்தில்
கட்சிக்குள் ஒட்டுமொத்தமாகவே
ஒருங்கிணைப்பு சரியாக இல்லை.
அதனால்தான் இங்கு கழகம்
படுதோல்வி அடைந்தது.

திமுக வேட்பாளர்களாக
அறிவிக்கப்பட்டவர்களில்
பலர் மக்களிடம் அடையாளம்
தெரியாதவர்கள். என்றாலும்,
அவர்களை தலையில்
தூக்கி வைத்து தேர்தல்
வேலைகளைச் செய்யாமல்,
அவர்களை காலில் உதைத்து
பந்தாடிவிட்டனர். வீரபாண்டி
தொகுதியில் திமுகவினர் உள்ளடி
வேலைகளை செய்ததால்தான்
ஜெயிக்க வேண்டிய வேட்பாளர்
தோல்வி அடைய நேர்ந்தது.

ஏற்கனவே உள்ளாட்சித்
தேர்தலின்போது அத்தொகுதியில்
உள்ள திமுக முக்கிய பிரமுகர்கள்
அதிமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு
அக்கட்சிக்கு வேலை செய்தனர்.
இதுகுறித்து மேலிடத்திற்கு
அறிக்கை அளித்தும் இப்போது
வரை சம்பந்தப்பட்டவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவில்லை.

 

உடனடியாக கட்சியின்
தலைவர் தளபதி, சேலம்
மாவட்டத்தில் கட்சி சீரமைப்பு
வேலைகளைச் செய்யாவிட்டால்,
2026 சட்டமன்ற தேர்தலிலும்
இங்கு தோல்விதான் மிஞ்சும்.
சேலம் மாவட்டத்தில்
திமுக வலுவடைந்தால்தான்
பக்கத்து மாவட்டங்களிலும்
அதன் தாக்கத்தை
ஏற்படுத்த முடியும்,” என்றார்.

 

திராவிட இயக்கங்களின்
வளர்ச்சிக்கு வித்திட்ட
பெருமை சேலம் மண்ணுக்கு
உண்டு. இந்நிலையில்
தொடர்ச்சியாக மூன்று
சட்டப்பேரவைத் தேர்தல்களில்
சேலம் மாவட்டத்தில் திமுக
பெரிய அளவில் பின்னடைவைச்
சந்தித்து வருவது,
அக்கட்சியின் நீண்ட
பாரம்பரியத்தின் மீது
கேள்வி எழுப்புகிறது.

 

இந்த மாவட்டத்தில்
உடனடியாக திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் களையெடுப்பு
நடவடிக்கைளை மேற்கொள்ள
வேண்டும் என்கிறார்கள்
உடன்பிறப்புகள்.

 

– பேனாக்காரன்