Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கொடிவீரன் – சினிமா விமர்சனம்

குட்டிப்புலி, கொம்பன், மருது வரிசையில் இயக்குநர் முத்தையாவின் டெம்பிளேட்டில் தடம் மாறாமல் இன்று (டிசம்பர் 8, 2017) வெளியாகி இருக்கிறது கொடிவீரன்.

குட்டிப்புலி படத்தில் மகனுக்கும் தாய்க்குமான பாசத்தையும், கொம்பன் படத்தில் மாமனாருக்கும் மருமகனுக்குமான பாசத்தையும், மருது படத்தில் பேரனுக்கும், பாட்டிக்குமான பாசத்தையும் சொன்ன முத்தையா, கொடிவீரன் படத்தில் அண்ணன்&தங்கை பாசத்தை பந்தி வைத்திருக்கிறார்.

ஒரு ஊர். மூன்று வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த அண்ணன்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கை. தங்களது தங்கைகளு க்காக எதையும் செய்யத் துணியும் அண்ணன்கள்; அவர்களுக்காக எதையும் சகித்துக்கொண்டு பாச மழை பொழியும் தங்கைகள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் அன்பு, காதல், துயரம், துரோகம் ஆகியவற்றை ரத்தம் சொட்டச்சொட்ட சொல்கிறது கொடிவீரன்.

நடிகர்கள்: சசிக்குமார், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பசுபதி, விதார்த், இந்தர்குமார், விக்ரம் சுகுமாரன், பால சரவணன்; இசை: என்ஆர் ரகுநந்தன்; ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர்; தயாரிப்பு: கம்பெனி புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: முத்தையா.

சிவகங்கை, நத்தம், மேலூர் உள்ளிட்ட பகுதிகள்தான் இப்படத்தின் முக்கிய கதைக்களங்கள். படத்தின் நாயகன் கொடிவீரன் (சசிக்குமார்) ஊருக்கே நல்லது கெட்டதை குறி சொல்லும் சாமியாடியாக வருகிறார். தாய் தந்தை இழந்த அவருடைய தங்கை பார்வதி (சனுஷா) மீது டன் கணக்கில் பாசமழை பொழிகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைக்காரன் (பசுபதி), அவருடைய தங்கையின் (பூர்ணா) கணவர் அதிகாரம் (இந்தர்குமார்) ஆகியோருக்கு யாரையாவது போட்டுத்தள்ளுவதும், அடித்து துவைப்பதும்தான் முழுநேர வேலை. அவர்கள் இருவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறார் நேர்மையான கோட்டாட்சியரான விதார்த்.

அதனால் விதார்த்தையும், அவருக்கு உதவியாக இருக்கும் அரசு வழக்கறிஞரையும் தீர்த்துக்கட்டிவிட துடிக்கின்றனர் பசுபதியும் அவருடைய மச்சானும்.

இதற்கிடையே விதார்த்தின் தங்கையான மஹிமா நம்பியாருக்கும், கொடிவீரனுக்கும் காதல் மலர்கிறது. மஹிமா நம்பியாரோ, சனுஷாவிடம் தன் அண்ணனை திருமணம் செய்து கொண்டால் நானும் உங்கள் அண்ணனை திருமணம் செய்து கொள்வேன் என்றுகூறி, இருவரும் பரஸ்பரம் தீர்மானிக்கின்றனர்.

அதன்படி சனுஷாவுக்கும் விதார்த்துக்கும் திட்டமிட்டபடி திருமணம் முடிகிறது. அதேநேரம் பசுபதி தரப்பினரிடம் இருந்து விதார்த்தை எதையும் செய்ய வேண்டாம் என்று சசிக்குமார் முறையிடுகிறார். பசுபதி தரப்பு அதற்கு முறைப்பு காட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, ஒரு மோதலில் பசுபதியின் மச்சான் திடீரென்று கொல்லப்படுகிறார்.

இதனால் இன்னும் ஆத்திரம் அடையும் பசுபதி, விதார்த், அவருடைய மனைவி, சசிக்குமார் ஆகியோரை தடம் தெரியாமல் அழித்துவிட தீர்மானிக்கிறார். சசிக்குமாருக்கும் பசுபதிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் யார் வெற்றி பெற்றனர்? சசிக்குமார் வில்லன் ஆட்களிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? வில்லனின் முடிவு என்ன ஆனது? என்பதை மசாலா நெடி மணக்கும் திரைக்கதையுடன் சொல்கிறது கொடிவீரன்.

படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும் எல்லோருமே வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்கள். எனினும், பெரிய அளவில் ஸ்கோர் செய்வது, சனுஷாதான். அடடா இப்படி ஒரு பாசமான தங்கச்சியா? எனக்கேட்கும் அளவுக்கு எல்லோர் மனதிலும் டாட்டூ போல ஒட்டிக்கொள்கிறார்.

இந்தப் படத்திற்காக பூர்ணா, நிஜமாகவே மொட்டை அடித்துக்கொண்டுள்ளார். கதைக்கும் அது தேவைப்படுகிறது. அண்ணன் பசுபதி மீது பாசம் காட்டுவதில் இருந்து கணவருக்காக மறுகுவது வரை தேர்ந்த நடிப்பு. கணவரை பறிகொடுத்த விரக்தியிலும், ஆத்திரத்திலும் அவர் தன் பசுபதியிடம், பழிக்குப்பழியாக தலையை வெட்டிவரச் சொல்லும் காட்சியில் மிரட்டுகிறார்.

பசுபதியைப் பொருத்தவரை வழக்கமான உறுமல். சசிக்குமாரு…..இதே நடிப்பை இன்னும் எத்தனை வருஷத்துக்கு…? ரசிகர்களும் பாவமில்லையா? என புலம்ப வைக்கிறார். ஆனாலும், கதையுடன் பொருந்திப் போகிறது அவருடைய நடிப்பு. விதார்த், மஹிமா ஆகியோரும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

மேலூர் கிராமத்தின் எழிலையும், சண்டைக் காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறது கதிரின் கேமரா. மீன்பிடித்திருவிழாவில் ஏற்படும் சண்டைக்காட்சியும்கூட அற்புதமாக வந்திருக்கிறது. திலீப் சுப்பராயன் அப்பாவின் பெயரை நிலைநிறுத்துகிறார்.

இந்தப்படத்தின் தொடக்கக் காட்சியே, பார்வையாளர்களை ஒரு கணம் அதிர வைக்கிறது. கணவரின் தவறான நடத்தையால் ஒரு நிறைமாத கர்ப்பிணி தூக்கில் தொங்குகிறாள். அந்த நேரம் பார்த்து அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இந்தக்காட்சி படு யதார்த்தமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் காட்சியில் இருந்துதான் படமே துவங்குகிறது. இப்படி ஒரு துவக்கக் காட்சியை, தமிழில் அண்மைக்காலமாக எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது.

கோயில் திருவிழா, திருமணம், கணவரை இழந்த பெண்ணுக்கு நடைபெறும் சடங்குகள் என ஆங்காங்கே தென்மாவட்ட மரபுகள் விவரணைகள் தரப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்து இருந்தால், முதல் பாதி சுவாரஸ்யம் இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருக்கும்.

கிராமத்துக் கதைகளிலேயே பயணிக்கும் இயக்குநர் முத்தையா, டெம்பிளேட் கதையாக்கத்தை விட்டு வெளிவருவதுதான் அவருடைய நீண்டகால போக்கிற்கு உகந்தது. தனது எல்லா படங்களிலும் குறிப்பிட்ட ஒரு சாதியினரை உயர்த்திப் பிடிப்பது அல்லது அவர்களது வாழ்வியலை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதும் ஏனென்று புரியவில்லை. அப்படியே அந்த வன்முறைக் காட்சிகளையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இப்போதெல்லாம் ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசினாலே கிண்டல் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது காட்சிக்குக் காட்சி சசிக்குமாருக்கு அத்தனை ‘பஞ்ச்’ தேவையா?. ”அவன் கொடிவீரன் இல்ல. இந்த குலத்துக்கே வீரன்”, ”இந்த ஊரு எங்க அண்ணன் ஆடிப்பாத்திருக்கு. அடிச்சுத் பாத்ததில்லையே..”, ”தப்புப் பண்ணினா கண்ணன் வருவானோ இல்லையோ எங்க அண்ணன் வரும்”, ”எங்க அண்ணன் எவன் எதுக்கயும் வர்றவன் இல்ல. எவனையும் எதுக்க வந்தவன்,” என்று சசிக்குமாரைப் பற்றி ஒன்று ஊர் பேசுகிறது அல்லது அவனது தங்கை பேசுகிறாள்.

போதாக்குறைக்கு வில்லன் பசுபதிகூட, ”நீங்க நினைச்ச உடனே செய்ய அவன் ஆயிரத்துல ஒருத்தன் இல்ல. ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்,” என்று புகழ் பாடுகிறார்.

அரசு வழக்கறிஞர் ஒருவர் நடு ரோட்டில் படுகொலை செய்யப்படுகிறார். அப்போதும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. ஊடகம் என்ற ஒன்று இல்லவே இல்லை. கோட்டாட்சியர் அந்தஸ்திலான அரசு அதிகாரி மீது பலமுறை கொலைமுயற்சி நடக்கிறது. அதற்கும் காவல்துறையோ, அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி பல லாஜிக் மீறல்கள் கூட உண்டு.

சில குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க வைக்கிறான் கொடிவீரன்.

– வெண்திரையான்.