Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

லவ் ஜிஹாத் பெயரில் இளைஞரை உயிருடன் எரித்து கொல்லும் சங்பரிவார் காட்டுமிராண்டி!; பின்னோக்கிச் செல்லும் இந்தியா!!

லவ் ஜிஹாத் பெயரில் ராஜஸ்தானில் ஓர் இளைஞரை ஹிந்து தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் எரித்துக்கொல்லும் வீடியோ காட்சி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

பாஜக ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்வு அது. எந்த இடம் என்று குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளங்களில் ரொம்பவே வைரல் ஆகி வருகிறது. ஓர் இளைஞரை, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாக கோடாரியால் தாக்குகிறார். கீழே விழுந்த அந்த இளைஞர் கொல்லாதே….காப்பாத்துங்க….என்று கூக்குரலிடுகிறார். கெஞ்சுகிறார்.

இந்த அபயக்குரல் எதுவுமே அந்த ஹிந்து தீவிரவாத நபரிடம் எடுபடவில்லை. அப்போதும் ஆத்திரம் அடங்காதவராக அவர் ஓர் அரிவாளை எடுத்து வந்து, தரையில் குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் அந்த இளைஞரை மேலும் வெட்டுகிறார். அடுத்த சில நொடிகளில் அந்த இளைஞரின் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறது.

இதையடுத்து உடனடியாக அந்த காட்டுமிராண்டி நபர், தான் பிளாஸ்டிக் கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அந்த இளைஞர் மீது ஊற்றி உயிருடன் தீ வைத்துக் கொளுத்துகிறார். பிறகு அவர், ‘ஒரு சிறுமியை இவனிடம் இருந்து காப்பாற்றவே இப்படி செய்தேன்,’ என்று தன் செயலுக்கு நியாயம் கூறிவிட்டு தப்பிச்சென்று விடுகிறார்.

இப்படி ஒரு வீடியோ அனைத்து வகையான சமூக வலைத்தளங்களிலும் உலா வந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த வீடியோ பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வீடியோவில் பலியான இளைஞர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முஹமது அப்ரசூல் என்பது தெரியவந்துள்ளது. அவர் பிழைப்பு தேடி ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ளார். கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார். ராஜ்சாமாந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஹிந்து பெண்ணை காதலித்துள்ளார்.

அது ஒருதலைக்காதலா அல்லது இருவரும் விரும்பினார்களா என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், தகவல் அறிந்த சங்பரிவார் அமைப்பினர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். கொலையுண்ட நபர் முஸ்லிம் என்பதால் அவர் லவ் ஜிஹாத் என்ற பெயரில் பெண்ணை மதமாற்¢றம் செய்ய திட்டமிட்டு காதலித்திருக்கக்கூடும் என்கிறது ராஜஸ்தான் காவல்துறை.

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி இச்சம்பவம் குறித்து கடுமையான கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ”எப்படி ஈவு இரக்கமின்றி மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?” என்று வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பிருந்தா கரத்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, கொலையாளியை கைது செய்துவிட்டதாக ராஜஸ்தான் காவல்துறை ஐஜி ஆனந்த் ஸ்ரீவத்சவ் கூறியுள்ளார். எனினும் கொலையாளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை.

காதலர் தினத்தை எதிர்க்கும் காவிப்படைகள், லவ் ஜிஹாதிகளை ஈவு இரக்கமின்றி வதைக்கும் கொடூரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். முன்னோக்கிச்செல்ல வேண்டிய இந்தியாவை, பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் மதத்தின் பெயரால் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.