Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இன்று (டிசம்பர் 9, 2017) நடந்த முதல்கட்ட தேர்தலில் 68% பேர் வாக்களித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநில முதலமைச்சர் விஜய்ருபானி உள்பட 977 வேட்பாளர்கள் இன்றைய வாக்குப்பதிவை சந்தித்தனர். இவர்களில் 57 பேர் பெண் வேட்பாளர்கள்.

சூரத் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் எழுந்தாலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது.

பகரூச் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மண மேடையில் முகூர்த்தம் முடிந்து திருமண கோலத்தில் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து தம்பதியர் ஓட்டுப்போட்டனர். உல்லேடா பகுதியில் 126 வயதான முதியவர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.

இதுபோன்ற சுவாரஸ்யங்களுக்கிடையே, சாதனை படைக்கும் வகையில் மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத் மக்கள் வாக்களித்து, ஜனநாயக திருவிழாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இன்று மாலை 4 மணி வரை நிலவரப்படி மொத்தம் 60 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்த 5 மணி நிலவரப்படி வெளியான முதல்கட்ட தகவலின்படி முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 68 சதவீதம் வாக்குப்பதிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 2.7% சரிவு.

மோர்பி தொகுதியில் அதிகபட்சமாக 75 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ராஜிவ் (70%), சோம்நாத் (70%), நார்மண்டா (73%), சூரத் 970%), டாங் (70%), பாருச் (71%) ஆகிய தொகுதிகளில் 70 சதவீதம் மற்¢றும் அதற்கு மேலும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14ம் தேதி, எஞ்சியுள்ள 93 தொகுதிகளுக்கு நடக்கிறது. குஜராத் மாநில தேர்தல் முடிவுகளும், ஹிமாச்சல் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும் ஒன்றாக வரும் 18ம் தேதி வெளியிடப்படுகின்றன.

இந்த தேர்தலிலும் வென்று பாஜக தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது, நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு குஜராத்தில் நிலவுகிறது.