Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

 

திமுக தலைவர் கருணாநிதி விரும்பியபடியே, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவருடைய உடல் இன்று (ஆகஸ்ட் 8, 2018) மாலை 6.50 மணியளவில் சந்தனப் பேழைக்குள் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு அவ்வப்போது மருத்துவமனையிலும், வீட்டிலும் மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

 

இந்த நிலையில்தான் கடந்த 11 நாள்களாக காவேரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வர், தொடர்ச்சியாக 13 முறை சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியே காணாத எம்எல்ஏ என ஓய்வின்றி மக்களுக்கு உழைத்த கருணாநிதியின் நினைவுகள் தப்பின. சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் இறந்தார்.

தான் மறைந்த பிறகு, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தனக்கும் ஓர் இடம் வேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பமாக இருந்தது. ஆனால் பல்வேறு அரசியல் உள்ளடிகளால் அவருக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுக்கவே, இரவோடு இரவாக உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

 

இரவே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று காலையிலும் வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்தது.

இது ஒருபுறம் இருக்க கருணாநிதியின் உடல் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

 

காலை 10.45 மணியளவில் கருணாநிதியை அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

இந்த தீர்ப்பின் தகவலைக் கேட்டதும் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்கினார். துயரத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கேட்டதில் அருகில் இருந்த துரைமுருகன் தோளில் சாய்ந்தபடியே கண்ணீர் சிந்தினார். இதையடுத்து அண்ணா சமாதி அருகே, அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டன.

கருணாநிதிக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. மேலும், ஒரு வார காலத்திற்கு அரசு நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. நாட்டிலேயே முதல்முதலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பியாகவோ முன்னாள் எம்பியாகவோ இல்லாத கருணாநிதிக்காக இன்று ஒரு நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

 

மாலை 4.05 மணியளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் கருணாநிதியின் சடலம் ஏற்றப்பட்டது. அவருக்காக தயாரிக்கப்பட்ட சந்தனப்பேழையில் உடல் வைக்கப்பட்டது. அந்த சந்தனப் பேழையின் மீது, ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்,’ என்று பொறிக்கப்பட்டு இருந்தது.

பல லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாலை 6.50 மணியளவில் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே, சந்தனப்பேழைக்குள் உடல் வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

அடக்கம் செய்வதற்கு முன்பாக சடலத்தின் மீது உப்பு போடப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கருணாநிதியின் மகள் செல்வி ஆகியோர் கண்ணீரை அடக்க முடியாமல் வாய்விட்டு அழுதனர். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய உடலுக்கு மலர் தூவினர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அவரை ஸ்டாலின் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

உடல் குழிக்குள் கிடத்தப்படுவதற்கு சில நொடிகள் முன்பு கனிமொழி தந்தையின் உடல் அருகே வந்து அவருடைய முகத்தை கையால் கடைசியாக ஒருமுறை தொட்டுப்பார்த்தார். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

அரசியல் உலகில் எப்போதும் எதிர் நீச்சல் போட்டே வெற்றி பெற்று வந்த கருணாநிதி, அண்ணா சமாதி அருகே தனக்கான இடம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தியே வென்றிருக்கிறார்.