Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

சேலம் பெரியார் பல்கலையில் புதிதாக தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான நியமன வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த முறையாவது வெளிப்படைத்தன்மையுடன் இப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பேராசிரியர்கள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

சேலம் பெரியார் பல்கலைக்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் அத்தனை நெருங்கிய தொடர்போ என்னவோ…. நிர்வாகம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையிலும் வில்லங்கமும் சேர்ந்தே இணைந்து கொள்கிறது. அண்மைக்காலமாக ஊழலுடன் சாதிய பற்றும் சேர்ந்து கொண்டுள்ளது.

 

தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான அறிவிப்புதான் லேட்டஸ்ட் வில்லங்கம். இந்தப் பல்கலையில் தேர்வாணையராக பணியாற்றி வந்த பேராசிரியர் லீலா, 2018, பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்றார்.

லீலா

அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் முன்பே அதாவது கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே, புதிய தேர்வாணையரை நியமிப்பதற்கான அறிவிப்பு பல்கலை சார்பில் வெளியிடப்பட்டது. அப்போது 9 பேர் இந்தப் பதவிக்காக விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அந்த விண்ணப்பங்கள் என்ன காரணத்தாலோ ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டன.

 

இதன் பின்னணியில் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் வரை பலருடைய பெயர்கள் அடிபடுவதாகச் சொல்கின்றனர் பேராசிரியர்கள்.

 

இது தொடர்பாக பெரியார் பல்கலை பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசினர்.

 

”தேர்வாணையர் லீலா பணி நிறைவு பெற்ற பிறகு, அந்த பதவியில் பெரியார் பல்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர் தங்கவேலை நியமிக்க வேண்டும் என்று ஒரு குழு முயற்சித்தது. துணை வேந்தர் பதவி காலியாக இருந்தபோது அவர்தான் கன்வீனர் பொறுப்பில் இருந்தார்.

சுனில்பாலிவால்

அதேநேரம் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால், வேறு ஒரு பேராசிரியரை தேர்வாணையர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இந்த விவரங்கள் எல்லாம் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் காதுக்கு எட்டிய பிறகு, இப்போதைக்கு தேர்வாணையர் பதவிக்கு யாரையும் நியமிக்க வேண்டாம். இந்தப் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளை உடனடியாக நிறுத்தி விடுங்கள் என தடாலடியாக கூறிவிட்டார்.

 

தேர்வாணையர், பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர்கள், அவர்கள் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், அடிப்படை கல்வித்தகுதி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை நகல் எடுத்து, அதை ஒரு புத்தகமாக வடிவமைத்து விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

 

ஒவ்வொன்றிலும் தலா எட்டு பிரதிகள் அவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும். இவை இல்லாமல், விண்ணப்பக்கட்டணமும் உண்டு. இவற்றுக்கே கிட்டத்தட்ட 3 ஆயிரம் ரூபாய் செலவாகிவிடும். கடந்த ஆண்டு தேர்வாணையர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்களை நிபுணர்குழு ஆய்வு செய்தது. அதற்காக அந்த குழுவினருக்கு சிறப்பு ஊதியமும் வழங்கப்பட்டது.

 

விண்ணப்பங்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, எந்தவித வெளிப்படையான காரணங்களும் சொல்லாமலேயே அப்போது தேர்வாணையர் பணிக்கான நியமன வேலைகள் முடக்கி வைக்கப்பட்டது. பிறகுதான் இதில் உயர்கல்வித்துறை செயலாளர் வரை தலையீடு இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாயின,” என்கிறார்கள் பேராசிரியர்கள்.

மணிவண்ணன்

இவ்விரு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பல்கலை இணையதளத்தில் ஆகஸ்ட் 6ம் தேதியே வெளியிடப்பட்டு உள்ளது. 9ம் தேதி பத்திரிகைகளிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

 

தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு 31.8.2018ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித்தகுதிகள், பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பல்கலை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போதைய பதிவாளர் மணிவண்ணன் நடப்பு ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இனியாவது தேர்வாணையர், பதிவாளர் போன்ற பதவிகளை நேர்மையாக எவ்வித ஊழலுக்கும் இடமளிக்காத வகையில் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த பெரியார் பல்கலை பேராசிரியர்களின் ஒரே நோக்கமாக உள்ளது.

 

– ஞானவெட்டியான்.