Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

தமிழகத்தில் பாஜக தங்கள் இருப்பை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தவிடுபொடியாகிக் கொண்டே போவதை கிண்டலடித்து, சமூகவலைத்தளங்களில் பலர் கேலியான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் ‘பக்கோடா’ முதல் ஜீயர் உண்ணாவிரதம் வரை ஒவ்வொன்றையும் முடிச்சுப்போட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

 

மத்தியில் அசுர பலத்தில் இருக்கும்போதே, தமிழகத்திலும் முக்கிய கட்சிகளின் வரிசையில் வந்துவிட வேண்டும் என்றுதான் பாஜக ரொம்பவே மெனக்கெடுகிறது.

ஆனால், அதன் ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விடுகிறது. சாரணர் தேர்தல் முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றது வரை பாஜகவின் பலம் என்ன என்பதை தமிழ்நாடே அறியும்.

அவர்கள் வெற்றி என்பதெல்லாம் இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலை வளைத்துப் போட்டது மட்டுமே. மங்குனி அமைச்சர்களுக்கும் விழுந்து வணங்குவதற்கு பாதங்கள் தேவை என்ற வெற்றிடம் இயல்பாகவே ஏற்பட்டிருந்த நிலையில், அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்பியது.

அதைக்கூட தங்களின் வெற்றி என்று பாஜக பட்டவர்த்தனமாக கூறிக்கொள்ள முடியாது. குருமூர்த்திகள் மூலமாக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

டெல்லி மேலிடத்தில் இருந்து தமிழக அரசியலில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முக்கிய நகர்வுகளையும், இங்குள்ள அதன் தலைமைக்கு முன்கூட்டியே சொல்வதில்லை. அந்தளவுக்குதான் மாநிலத் தலைமையை கட்சி மேலிடம் மதிக்கிறது.

ஆனாலும், அடிவாங்குவதற்கு ஆள் இல்லாத குறைகளை தமிழிசை, ஹெச்.ராஜாக்களை வைத்துதானே தீர்த்துக்கொள்ள வேண்டும்? அவர்களும் அதற்காகவே அளவெடுத்து தைத்ததுபோல்தானே இருக்கிறார்கள்!.

இப்போதும் தங்களது பந்து வீச்சில் ஏதேனும் விக்கெட் வீழாதா என்றுதான் காத்திருக்கிறார்கள் சங்க பரிவாரங்கள். அதன £ல்தான் ஆறிப்போன ஆண்டாள் விவகாரத்தை ஜீயர் மூலமாக மீண்டும் ஊதிப்பெரிதாக்க முனைந்தார்கள்.

சும்மா வருவாளா சுகுமாரி? (உபயம்: பம்மல் கே சம்பந்தம்) என்ற பழமொழியாக (?!), ‘நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்’ என்றெல்லாம் சடகோப ராமானுஜர் ஜீயர் உதார் விட்டுப்பார்த்தார்.

அவருடைய உருட்டல் எல்லாம், ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ படத்தில், கர்ப்பிணி பெண்கள், சின்னக் குழந்தைகள் இந்த சண்டைய பாக்காதீங்க என்று உதார் விட்டு, விஜய் சேதுபதியிடம் செமத்தியாக அடிவாங்கம் கதாபாத்திரம்போல் ஆகிவிட்டதுதான் எதிர்பாராத திருப்பம்.

கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என்று ஏற்கனவே ஒருமுறை அறிவித்து, பலர் சொன்னதால் அதைக் கைவிட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், மீண்டும் கடந்த 8ம் தேதி காலையில் திடீரென்று அதே கோரிக்கையை முன்வைத்து மீண்டும் உண்ணாவிரதத்தை அறிவித்தார்.

உலக வரலாற்றிலேயே திருமண மண்டபத்துக்குள் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்ட ஒரே நபர், நம்ம ஜீயர்தான். மது க்கடையை திறக்கச்சொல்லி போராடும் நபர்களுக்குக்கூட ஒத்தாசையாக கும்பல் கூடுகிறது.

பாவம் ஜீயர். திருமண மண்டபத்தில் ஒற்றை ஆளாக களமாட புறப்பட்டார். ஆண்டாளுக்காக ஒருவர் கூட அவருடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள முன்வரவில்லை. அப்போதே ஆண்டாளின் சக்தியை அவர் உணர்ந்திருக்க வேண்டாமா?

போராட்டம் ஆரம்பித்து 48 மணி நேரம்கூட ஆகவில்லை. எஸ்.வி சேகர், ஹெச்.ராஜா போன்ற பக்தாள்கள் நேரில் அவரை சந்தித்தனர்.

 

அதற்கடுத்த சில மணி நேரத்தில், உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார் ஜீயர். அதற்காக அவர் சொன்ன காரணம்தான் நகைப்புக்குரியது.

ஜீயருக்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய உண்ணும் போராட்டம்.

”ஜீயர்கள் உண்ணாவிரதம் இருப்பது நாட்டு மக்களுக்குக் கேடாக முடியும். மக்கள் பிரார்த்தனை செய்தால்தான் வைரமுத்து மன்னிப்பு கேட்பார்,” என்றார் சடகோப ராமானூஜர் ஜீயர்.

ஆண்டாளை 24 மணி நேரமும் ஷேவிக்கும் ஜீயருக்கு இரங்காத ஆண்டாள், மக்களின் குரலுக்கு செவி மடுப்பார் என்று அவர் நம்புகிறார் போலும்.

ஜீயருக்கு போட்டியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்ணும் போராட்டத்தை அறிவித்தனர். பிரியாணி, இனிப்பு, கார வகைகள் என பல்வேறு உணவுப் பொருள்களை வெளுத்துக் கட்டினர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஜீயர் பாட்டுக்கு சிவனே என்று இருந்தவரை, நடுத்தெருக்கு அழைத்து வந்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என ஹெச்.ராஜா, எஸ்வி.சேகர் மீது வைணவ சமூகத்தினர் ஏகத்துக்கும் கடுப்பில் இருப்பதாகவும் ஒரு செய்தி காற்றுவாக்கில் உலா வந்தது. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

நினைத்து நினைத்து ஜீயர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதும், அதை திரும்பப் பெறுவதும் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே கேலிக்குரியதாகி வருகிறது. பலர், ஜீயர், பாஜக, ஹெச்.ராஜா ஆகியோரை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிட் டுள்ளனர்.

அண்மையில் பிரதமர் நரேந்திமோடி, பக்கோடா விற்பவர்கள்கூட தொழில்முனைவோர்தான் என்றார். அதைக் குறிப்பிடும் வகையில், பக்கோடா சாப்பிட்டு உண்ணாவிரதத்தை ஜீயர் கைவிட்டார் என்றும் சிலர் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சமூகத்தை ரொம்பவே நோகடிக்கும் வகையிலான மீம்ஸ்கள், கருத்துகள் மீது ‘புதிய அகராதி’க்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை. ஆனாலும், ட்விட்டர் தளத்தில் உள்ள சில பதிவுகளை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

பாஜகவின் முன்னெடுப்புகள் தெர்மாகோல் விஞ்ஞானிகளிடமும், மங்குனிகளிடமும் மட்டுமே எடுபடும்.

‘ஆபரேஷன் ஆண்டாள்’, ‘ஆபரேஷன் ஜீயர்’ என்ற விபரீத விளையாட்டுகளில் அக்கட்சி ஈடுபட்டால், ஆங்காங்கே இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையாளர்களையும் இழந்து விடும்.

 

– பேனாக்காரன்.