Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…; ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று (பிப்ரவரி 10, 2018) நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் ஷிகர் தவானின் சதம் வீணானது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியது.

பிங்க் நிற சீருடை:

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் பிங்க் நிற உடை அணிந்து வந்திருந்தனர்.

இந்திய அணி வீரர்கள் தங்களது வழக்கான ப்ளூ நிற சீருடையில் களமிறங்கினர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியதை அடுத்து, முந்தைய போட்டியில் இடம்பெற்றிருந்த சோன்டோவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு, மோர்னே மோர்கலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டிருந்தார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அணியில், தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 5 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் ஷர்மா, நேற்றும் ஏமாற்றம் அளித்தார்.

நடப்பு தொடரில் சீரான ஆட்டத்தை தொடர்ந்து வரும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், தனது 26வது ஒருநாள் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது 100 வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கேப்டன் விராட் கோலியும் அரை சதம் அடித்தார்.

கடந்த போட்டியைப் போலவே இன்றைய ஆட்டத்திலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, எதிர்பாராத விதமாக கிறிஸ் மோரீஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 83 ப ந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சரும் அடங்கும்.

ஷிகர் தவான் சதம்:

விராட் கோலி, ஷிகர் தவான் இணை 158 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு வலுவான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன் ரேட் விகிதமும் குறைந்தது. ஆனாலும், அபாரமாக ஆடிய ஷிகர் தவான் ஒரு நாள் அரங்கில் தனது 13வது சதத்தை அடித்து அசத்தினார். 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் வரிசையில் ஷிகர் தவான், 9வது வீரராக இணைந்தார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன்பு கிரீனிட்ஜ் (இங்கிலாந்து), கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து), முகமது யூசுப் (பாகிஸ்தான்), கெயில் (வெஸ்ட் இண்டீஸ்), சங்ககாரா (ஸ்ரீ லங்கா), டிரெஸ்கோதிக் (இங்கிலாந்து), சர்வான் (வெஸ்ட் இண்டீஸ்), வார்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் தங்களுடைய 100வது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் ஆவர். இன்றைய போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோர்ன் மோர்கல் பந்து வீச்சில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அவர் 105 பந்துகளில் 109 ரன்களை குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

அடுத்து வந்த ரஹானே (8 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (18 ரன்), ஹர்டிக் பாண்ட்யா (9) புவனேஸ்வர் குமார் (5 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ரன் விகிதம் மந்தமானது. விக்கெட் கீப்பர் தோனி மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து, 43 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 42 ரன்களைக் குவித்தார்.

தோனி 42 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் ஏதுமின்றியும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் லுங்கி நிகிடி, ரபாடா தலா 2 வி க்கெட்களை வீ-ழ்த்தினர்.

வெளிச்சமின்மையால் ஆட்டம் பாதிப்பு:

முன்னதாக, வாண்டரர்ஸ் மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் இந்திய நேரப்படி இரவு 7.06 மணி முதல் 7.53 மணி வரை 47 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனாலும் இந்திய அணியின் ரன் குவிப்பு விகிதம் கணிசமாக குறைந்தது.

இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. கேட்பன் மார்க்ராம், ஹஷிம் ஆம்லா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய வேகங்கள் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மாறி மாறி தாக்குதல் தொடுத்தனர். 7 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

ஆட்டத்தின் 8வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசினார். அந்த ஓவரில் 2வது பந்தில் மார்க்ராம் எல்பிடபுள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆம்லாவுடன், ஜே.பி.டுமினி ஜோடி சேர்ந்தார்.

மழையால் ஓவர்கள் குறைப்பு:

அப்போது, லேசான மழைத்தூறல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் தடைப்பட்டது. இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி போட்டி 28 ஓவர்களாக குறை க்கப்பட்டு, 202 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

‘சைனாமேன்’ சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 13வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஜே.பி.டுமினியை (10 ரன்) அவர் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதையடுத்து, அபாயகரமான ஆட்டக்காரரான ஏபி டி வில்லியர்ஸ் களம் புகுந்தார். 15வது ஓவரை வீசிய குல்தீப் யாதவின் அட்டகாசமான சுழலில் இந்த முறை ஆம்லா வீழ்ந்தார். அவர் 40 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

மற்றொரு சுழல் பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலின் 16வது ஓவரை எதிர்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ், அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டு அச்சுறுத்தினார். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் அவர் விட்டுக்கொடுக்க நேர்ந்தது.

ஆனால் ஏபி டி வில்லியர்ஸின் அச்சுறுத்தல் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 17வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட டி வில்லியர்ஸ், பந்தை தூக்கியடித்தபோது அது ரோஹித் ஷர்மாவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. டி வில்லியர்ஸ் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 26 ரன்களில் வெளியேறினார்.

அந்த அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. அது வரை மட்டுமே ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது எனலாம்.

பந்து வீச்சு படுத்தது:

அதன்பின் ‘கில்லர்’ மில்லரும், ஹென்ரிக் கிளாஸனும் இணைந்து இந்திய பந்து வீச்சை கன்னாபின்னாவென்று சிதறடித்தனர். குறிப்பாக, சுழல் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அவர்கள் இருவரும் டி-20 கிரிக்கெட் போட்டி போல விளையாடினர்.

குல்தீப் யாதவ் வீசிய 21வது ஓவரில் மில்லர் ஒரு சிக்ஸரும், கிளாஸன் ஒரு பவுண்டரியும் உள்பட 16 ரன்கள் திரட்டினர். அடுத்த ஓவரை வீசிய யுஸ்வேந்திர சாஹல் தன் பங்குக்கு ‘நோ பால்’, வைடு, ஃப்ரீ ஹிட் என 15 ரன்களை வாரி வழங்கினார்.

வாண வேடிக்கை காட்டிய மில்லர், ஒருவழியாக யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ ஆகி, பெவிலியன் திரும்பினார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டகள், 2 சிக்ஸர்கள் உள்பட 39 ரன்களை குவித்தார்.

தென்னாப்பிரிக்கா வெற்றி:

அதற்கு அடுத்து கிளாஸனுடன் புளூக்வாயோ ஜோடி சேர்ந்தார். இந்த இணை, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 25.3 ஓவர்களில் அந்த அணி, 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. ஹென்ரிக் கிளாஸன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணியின் தோல்வியால் ஷிகர் தவான் சதம் அடித்தும் வீணானது. 5வது ஒருநாள் போட்டி வரும் 13ம் தேதி போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது. இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் இ ந்திய அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் பிங்க் சென்டிமென்ட்:

தென்னாப்பிரிக்கா அணி வாண்டரர்ஸ் மைதானத்தில் பிங்க் நிற சீருடை அணிந்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த சென்டிமென்ட் நடப்பு ஒரு நாள் தொடரிலும் தொடர்கிறது.

இதற்கு முன்பு பாகிஸ்தான் 34 ரன்கள் (2013) வித்தியாசத்திலும், இந்தியாவை 141 ரன்கள் வித்தியாசத்திலும் (2013), மேற்கு இந்திய தீவுகள் அணியை 148 ரன்கள் (2015) வித்திய £சத்திலும், இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் (2016) வித்தியாசத்திலும், ஸ்ரீலங்காவை 7 விக்கெட் (2017) வித்தியாசத்திலும் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி இருக்கிறது. தற்போதைய போட்டியில் இந்தியாவை அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது.

இந்திய சுழல் கூட்டணிக்கு என்னாச்சு?

6 போட்டிகள் கொண்ட நடப்பு ஒரு நாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் சராசரியாக 4 ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுத்து, அணிக்கு தொடர்ச்சியாக வெற்றி தேடிக்கொடுத்துள்ளனர். நேற்றைய போட்டியில் இந்த இணை 11.3 ஓவர்கள் பந்துகள் வீசி அதிகபட்சமாக 119 ரன்களை வாரி வழங்கியிருக்கின்றனர்.

நான்காவது போட்டியில் இருவரும் சேர்ந்து 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினர். எனினும், நடப்பு தொடரில் நான்கு போட்டிகளிலும் சேர்த்து இவர்கள் இருவரும் மொத்தம் 24 விக்கெட் டுகளை அள்ளி இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம்.

 

– இளையராஜா சுப்ரமணியம்.