Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

நளன் – தமயந்தி
இணையரின் காதல்
வாழ்வு பற்றிய பாடல்
தொகுப்புதான் நளவெண்பா.
என்றாலும், தேனினும்
இனிய உவமைகளும்,
உவமேயங்களும்
கொட்டிக்கிடக்கும் சிறப்பு
நளவெண்பாவுக்கு உண்டு.
புகழேந்தி புலவரின்
கற்பனையின் ஆழத்தை
ஒவ்வொரு பாடலிலும்
உணர்ந்து கொள்ள முடியும்.

நளவெண்பாவின்
கலித்தொடர் காண்டத்தில்
கானகத்தில் இயல்பாய்
நிகழ்ந்த காட்சியொன்றை
தன் கற்பனைத் திறத்தால்
சாகாவரம் பெற்ற பாடலாக்கி
இருக்கிறான் புகழேந்தி புலவன்.
அந்தப் பாடல்…

 

”மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தை
பங்கயம் என்றெண்ணிப் படிவண்டை – செங்கையால்
காத்தாளக் கைம்மலரை காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து” (184)

 

என்கிறான்
புகழேந்தி புலவன்.

 

கானகத்தில் அழகான,
ஒளி வீசக்கூடிய
முகம்கொண்ட
பெண்ணொருவள்,
மலர்களைப் பறித்துக்
கொண்டிருக்கிறாள். அப்போது,
மற்ற பூக்களிலே அமர்ந்து
தேன் சேகரித்துக்
கொண்டிருந்த வண்டுகள்,
மலர் பறித்துக் கொண்டிருந்த
பெண்ணின் முகத்தைப்
பார்க்கின்றன.

 

”அடடா…
அன்றலர்ந்த தாமரை
இங்கிருக்கும்போது
சிறு சிறு மலர்களில்
நாம் தேன் சேகரிக்கிறோமே…
இது தாமரையா?
கால் முளைத்த நந்தவனமா?
அல்லது பூக்களின்
மொத்த உருவமா?,”
என்று குழம்பிய வண்டுகள்,
அவளது முகத்தை
மொய்க்கத் தொடங்கின.

 

”என்ன இது பெரும்
சோதனை?” என்று
பதறுகிறாள் அந்தப்
பருவ மங்கை.
‘பலாப்பழத்தை ஈக்கள்
மொய்ப்பது போல’ என்பார்களே…
அதுபோல, தாமரை போன்ற
அவள் முகத்தை தும்பிகள்
மொய்க்கின்றன.

 

அச்சம் கொண்ட அவளோ,
வண்டுகளிடம் இருந்து
தப்பிக்க எண்ணி, தனது
அழகான சிவந்த கைகளால்
முகத்தை மூடிக்கொள்கிறாள்.
அப்போதும் வண்டுகள்
விடவில்லை. அவளது
கைகளையும் விரல்களையும்
செங்காந்தள் மலர்களாக எண்ணி,
அவற்றையும் மொய்க்கத்
தொடங்கின.

”அய்யகோ… பூப்பறிக்க
வந்த இடத்தில் இத்தனை
அக்கப்போரா?” என அவள்
முகமெல்லாம் வியர்த்து
விறுவிறுத்துப் போனாளாம்.
அவளை நீ பார்த்தாயா? என
நளன் கேட்பதாக இந்தப்
பாடலை பாடியிருப்பார்
புகழேந்தி புலவர்.

 

அருஞ்சொற்பொருள்:

 

மங்கை – பெண்
கொய்தாள் – பறித்தாள்
வாண்முகம் – ஒளி வீசும் முகம்
பங்கயம் – தாமரை
செங்கை – சிவந்த கை

 

இந்தப் பாடலின் உட்கருத்தை, இப்போதும்கூட திரைப்பட கவிஞர்கள் எடுத்தாண்டு வருகின்றனர். நாம் கூட எழுதியதுண்டு… ”பூங்காவனத்திற்குள் / சென்று விடாதே / தும்பிகள் / குழம்பி விடும்” என்று எழுதியிருக்கிறோம் என்பதே காலம் கடந்தும் நளவெண்பாவின் கவிநுட்பம் நிற்கிறது என்றுதானே பொருள்.

 

நம்முடைய கற்பனை
இருக்கட்டும்.
இளங்கம்பன் கண்ணதாசன்
அவர்கள்கூட, ‘இரு வல்லவர்கள்’
என்ற படத்தில் தன்
பாடலினூடாக மேலே
சொன்ன நளவெண்பா
பாடல் வரிகளை
பயன்படுத்தி இருப்பார்.

 

ஜெய்சங்கர், எல். விஜயலட்சுமி நடிப்பில் 1966ல் வெளியான அந்தப் படத்தில் இடம் பெற்ற, ‘நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்’ என்ற பாடலை, இப்போதும் புதிதாக காதலைத் தொடங்குவோர் பாடலாம். எல்லா காலத்திற்கும் ஏற்ற பாடல் அது.

 

அந்தப் பாடலில் ஓரிடத்தில்,

 

”பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…”

 

என்று எழுதியிருப்பார் கண்ணதாசன்.

 

பெண்ணின் முகத்தை
மலராக பாவிக்கிறார்
கண்ணதாசன். ஆனால்
புகழேந்தி புலவனோ,
பெண்ணின் முகத்தை
தாமரை மலராக மட்டுமின்றி,
அவளுடைய கைகளை
காந்தள் மலருடனும்
ஒப்பிட்டுப் பாடுகிறான்.
அந்த நுட்பம்தான்
நளவெண்பா பாடலை
இன்றளவும் செழுமை
உடையதாக வைத்திருக்கிறது.

 

வாசகர்களின் சுவைக்காக
நாம் கொஞ்சம் மிகைப்படுத்தி
இருக்கலாமே தவிர,
நளவெண்பா பாடலின்
அடிப்படை பொருளை
சிதைக்கவில்லை என்பதையும்
இங்கே குறிப்பிடுகிறோம்.

 

அது சரி…

 

இந்தப் பாடலைப் பற்றி தமிழ் ஆர்வலர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். பெண்களை மட்டும் மலரென்கிறார்கள்; மயில் என்கிறார்கள்; மான் என்கிறார்கள்… தேன் என்கிறார்கள்… முக்கனியும் சர்க்கைரையும் என்றும் கூட வர்ணிக்கிறார்கள். எந்தக் கவிஞனும் ஏன் ஆண்களை இப்படி வர்ணிப்பதில்லை என்று கேட்டார்.

 

நான் சொன்னேன்….

 

நீங்களே யோசித்துப் பாருங்கள்…. உங்கள் கணவரின் கண்களைப் பார்த்து, ‘விழிகளா? அவை திராட்சைப் பழங்களா’ என்றோ, அவரின் குரல் குயில் போல இருக்கிறது என்றோ வர்ணிக்க முடியுமா? என்றேன். அவருக்கே சிரிப்பு வந்தது. ஆண்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

 

(பேசுவோம்).

 

– செங்கழுநீர்

Leave a Reply