Thursday, May 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டது உறுதி என்றால் அவருடைய உடலை ஏன் மரபணு சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும், மரண சான்றிதழ் வழங்காதது ஏன் என்றும் கேட்டுள்ளதன் மூலம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார், இலங்கை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

எம்.கே.சிவாஜிலிங்கம்.

கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிப் போரின்போது, மே 17ம் தேதி, சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலில் வி டுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சிங்கள பேரினவாத அரசு, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக் குண்டுகள் வீசி படுகொலை செய்தது.

முள்ளிவாய்க்கால் கடல் பகுதியில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தரப்பில் சொல்லப்பட்டது. எனினும் அவருடைய இறப்பு குறித்து இன்றும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பிரபாகரன் மரணம் குறித்த சந்தேகங்கள் ஆரம்பம் முதலே இருந்து வருகின்றன. இதற்கு சிங்கள அரசின் முந்தைய சில செயல்பாடுகளும்கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் ஈழ இறுதிப்போருக்கு முன்பே, ஐந்து முறை பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டதாக, அவரை கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் பூச்சுற்றி வந்தது.

ஒருமுறை, மாத்தையாவுடன் ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் கிடத்தப்பட்டு உள்ளதாகவும்கூட சிங்கள ராணுவம் தரப்பில் செய்திகள் வெளியானது. பிரிதொருமுறை, சுனாமியில் பிரபாகரன் அடித்துச் செல்லப்பட்டதாகக்கூட அந்நாட்டு அரசுத் தரப்பு செய்தி பரப்பியது.

சிங்கள பேரினவாத அரசின் இதுபோன்ற கட்டுக்கதைகளால், இப்போதும் பிரபாகரன் மரணம் குறித்த செய்தியின் மீது போதிய நம்பகத்தன்மை பொதுவெளியில் இன்னும் ஏற்படவில்லை. அதற்கு ஏற்றால்போல் தர்க்க ரீதியாக பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.

இந்த சந்தேகங்கள் குறித்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் கேள்வி எழுப்பி இருந்தார். அவர் முன்வைக்கும் சந்தேகங்கள் இவைதான்…

ஈழ இறுதிப்போரின்போது பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டது உறுதி எனில், சர்வதேச ஊடகங்கள் முன் பிரபாகரனின் உடலை காட்டாதது ஏன்?

ராஜிவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பிரபாகரன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பொதுவாக குற்றாச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மரண சான்றிதழ் பெறப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், சிங்கள அரசு இன்னும் பிரபாகரன் இறப்பு சான்றிதழ் வழங்காதது ஏன்?

பழ.நெடுமாறன்

பிரபாகரன் உடலுக்கு மரபணு சோதனை (டிஎன்ஏ டெஸ்ட்) நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்றால், பிரபாகரனுடைய பெற்றோர் அல்லது பிள்ளைகளின் ரத்த மாதிரி சேகரித்து அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் சோதனை நடத்த முடியும். இறுதிப்போர் நடந்த காலக்கட்டத்தில் பிரபாகரனின் பெற்றோரும் இலங்கையில்தான் இருந்தனர். ஆனால் அவர்களிடம் இதுவரை ரத்த மாதிரிகள் எடுக்கவே இல்லை.

ஏற்கனவே தாணு உடலை மரபணு சோதனை செய்த மருத்துவர் சந்திரசேகரன், இலங்கையில் மரபணு பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இல்லை என்றும், அதுபோன்ற சோதனைக்கு அவர்கள் சென்னைக்குதான் வர வேண்டும் என்றும் சொல்கிறார். மேலும், ஒரே நாளில் மரபணு சோதனை நடத்திவிட முடியாது. அதற்கு குறைந்தபட்சம் 10 நாள்களாவது ஆகும்.

பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்காக இலங்கை ராணுவத்தில் 3 லட்சம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லி பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்போது புதிதாக ஒரு லட்சம் வீரர்கள் அந்நாட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய அரசு பயிற்சி அளித்தது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார் பழ.நெடுமாறன். இக்கருத்தை அவர் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார்.

இதற்கிடையே, பிரபாகரன் ரகசிய இடத்தில் பத்திரமாக இருப்பதாகவும், தனி ஈழத்திற்கான ஐந்தாம் கட்டப் போரை அடுத்த ஆண்டு (2018) நடத்த தயாராகி விட்டதாகவும், அதற்காக 14 நாடுகளிடம் உதவிகள் கோரியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுபோன்ற தகவல்களில் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

அதேநேரம், இலங்கையின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பிரபாகரன் குறித்த சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.

அவர் இலங்கையில் உள்ள ஒரு தனியார் ஊடகத்திற்கு அண்மையில் அளித்த பேட்டியில், ”இலங்கை யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக அரசாங்க தரப்பினரால் காட்டப்பட்ட உடலம், தலைவர் பிரபாகரனுடையது இல்லை என்று பலமுறை பகிரங்கமாக கூறியிருந்தேன். இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

குறித்த விடயம் தொடர்பில் இதுவரை ஏன் மரபணு சோதனை நடத்தவில்லை என கோரியிருந்தேன். உடனடியாக செய்வதாக கூறி இருந்தார்கள். ஆனாலும் இதுவரை மரபணு சோதனை நடத்தப்படவில்லை. அத்துடன், மரணச் சான்றிதழ்கூட இன்று வரையிலும் வழங்கப்படவில்லை.

இன்று கேட்டால், தலைவர் பிரபாகரனுடைய உடல் கடலில் வீசப்பட்டுவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆகையால் அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரப்பூர்வமான தகவல் ஏதும் அரசாங்கத் தரப்பிடம் இல்லை,” என்று கூறியிருந்தார்.

இதன்போது, ”விடுதலைப்புலிகள் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்றால் அதுகுறித்து சிவாஜிலிங்கத்திற்கு தெரிந்து இருக்கக்கூடும் என்று அர்த்தம் கொள்ளலாமா? என்று அந்த ஊடகம் அவரிடம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதில் அளித்த அவர், ”விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஏன் எனக்கு சொல்லாமலே அவர் உயிருடன் இருக்கக் கூடாது. அவர் எனக்கு சொல்ல வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

சிங்கள மக்களை பொறுத்தவரையில் பிரபாகரன் ஒரு குற்றவாளி. அவருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதி க்கப்பட்டு உள்ளது. நீங்கள் நினைத்து இருந்தால் அவரின் உடலை கொழும்பில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருக்க முடியும். ஆனாலும் ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்றும் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் இந்த பேட்டி, இலங்கை ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் வைரல் ஆகியுள்ளது.