Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”நம்புங்கள் பிரதமரே! முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

பணமதிப்பிழப்பு  (Demonetisation) நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பலர் கேலி, கிண்டலாக மீம்ஸ்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.

இரவு நேரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வயதிலும் அப்படி என்னதான் பற்றுதலோ தெரியவில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டைல் போலத் தோன்றினாலும் யாரும் அனர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர் நாட்டை உலுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் இரவில்தான் அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே இரவில்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுவது குறித்து எனக்குக்கூட தெரியாது என அப்பாவியாகச் சொன்னார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ரிசர்வர் வங்கி ஆளுநருக்கே கூட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் தெரிந்ததாம். இந்தியா முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்த இந்திரா காந்தியின் நிலைக்கு ஒத்தது நரேந்திர மோடியின் இந்த முடிவு.

அவருடைய முடிவில் கொஞ்சமும் ஜனநாயகத்தன்மை இல்லை. கேட்டால், ரகசியம் கசிந்து விடும் என்பார்கள். சரி. அந்தளவுக்கு ரகசியமாக வைத்திருப்பதில் தப்பில்லை; அதற்காக நிதித்துறையை கையாளும் அமைச்சரிடம்கூட மறைக்க வேண்டிய அந்தரங்கம் என்ன இருக்கிறது?

புழக்கத்தில் இருந்ததில் 86 விழுக்காடு 1000, 500 ரூபாய் தாள்களே. அதே அளவுக்கு பணச்சுழற்சி கொண்டு வர வேண் டுமெனில் புதிய நோட்டுகள் அச்சிடும் திறன் கொண்ட அச்சகங்கள்கூட இல்லை என்பதுதான் உண்மை.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத்தான் ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக இரண்டாயிரம் ரூபாய் தாள்களாக அச்சிடப்பட்டு, அவசர கதியில் புழக்கத்தில் விடப்பட்டது.

சொந்தப் பணத்தை ஏடிஎம், வங்கியில் இருந்து எடுக்கவும் விரலில் மை வைத்து அசிங்கப்படுத்தும் அவலமும் நடந்தது. வங்கி கியூவில் நின்ற முதியவர் மாரடைப்பில் மரணம் அடைந்ததைக்கூட பொருட்படுத்தாமல் நம் சாமானியர்கள் டோக்கன் மிஸ் ஆகிவிடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தனர். அப்படி நாடு முழுக்க 150க்கும் மேற்பட்ட சாமானியர்கள் இறந்தனர். அதைச்சொன்னால் நம்மை ஆன்ட்டி இந்தியன் என்கிறார்கள், காவிகள்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துக்ளக் தர்பார் என்றால் அது மோடியின் பணமதிப்பிழப்பு செயலாகத்தான் இருக்கும் என வர்ணிக்கிறார்கள்கள் இணையதளவாசிகள்.

நடிகர் எஸ்வி சேகர் போன்ற அதிமேதாவிகள், புதிய 2000 ரூபாய் தாளில் ரகசிய ‘சிப்’ பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்தால் மோடி பேசுவார் என்றும், பூமிக்கடியில் எவ்வளவு ஆழத்தில் பதுக்கி வைத்திருந்தாலும் கண்டுபிடித்து விடமுடியும் என்றெல்லாம் சரம்சரமாக காதில் பூ சுற்றினார்கள். ஆனால், மணல் மாஃபியா சேகர் ரெட்டி, தன் வீட்டில் 33 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டை பதுக்கி வைத்திருந்ததை விட்டுவிட்டனர்.

அந்தப்பணம் எந்த வங்கியில் இருந்து சென்றது என்பது குறித்து தெரியாது என ரிசர்வ் வங்கியே சொன்னதுதான் உச்சக்கட்ட தமாஷ். ஒருவேளை, அதன் ரகசியம் பன்னீர்செல்வம் வகையறாக்களுக்கு தெரிந்திருக்கக் கூடும்.

செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 விழுக்காட்டிற்கும் மேல் வங்கிகளுக்கு திரும்பவும் வந்துவிட்டன. இன்னும் வெறும் ரூ.16000 கோடி மட்டுமே வங்கி கணக்கில் வரவில்லை என்கிறது ரிசர்வ் வங்கி புள்ளி விவரம்.

அதேநேரம், புதிய ரூபாய் தாள்களை அச்சிட ரூ.7965 கோடி செலவாகியுள்ளது. அதற்கேற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றி அமைத்ததற்கான செலவு எனக் கணக்கிடும்போது பணமதிப்பிழப்பால் அரசுக்கு நட்டமே ஏற்பட்டுள்ளது.

சிறுதொழில் முடக்கம், வேலையிழப்பு, வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி என பல தோல்விகளை ஒரே நேரத்தில் கண்டுள்ளது பாஜக அரசு. இதற்கெல்லாம் ஒரே காரணம், பணமதிப்பிழப்பு.

இந்த பேரிடியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே ஜிஎஸ்டி வரி விதிப்பு. உலக நாடுகளில் இந்தியாவைத் தவிர வேறெங்கும் 28 விழுக்காடு வரையிலான வரி விதிப்பு கிடையாது.

நம்மை விட குட்டி நாடான சிங்கப்பூரை எடுத்துக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் வேண்டாஞ்சாமி. அப்புறம் பாஜகவினர் வழக்கு போடுவார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை ஒப்புக்கொண்ட மத்திய அரசு இப்போது மேலும் பல பொருள்களின் வரியை குறைக்க முடிவு செய்திருக்கிறது.

கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்பவர்கள் 2000 மதிப்பிலான தொகையை அச்சிட்டதுதான் நகைமுரணாக இருக்கிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்தப்பணம் கருப்பா? வெள்ளையா? என்பதையும் தெளிவுபடுத்தாமல் வசதியாக மறந்து போனார்கள்.

வங்கிகளிலோ, ஏடிஎம் வாசல்களிலோ எந்த ஒரு எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்களோ அல்லது செல்வந்தர்களோ நிற்கவில்லை. நின்றதெல்லாம் சாமானியர்களும், நடுத்தர வர்க்கமும்தானே. வசதி படைத்தவர்களுக்கு பணமதிப்பிழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. அதுவும் ஓரளவுக்குதான்.

தீவிரவாத கும்பலுக்கு பணம் செல்வதை தடுப்பதற்காக என்றார்கள். இப்போது அவர்களுக்கான வழிகள் அடைக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா? டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்கவே பணமதிப்பிழப்பு என்று இன்னொரு காரணம் சொன்னார்கள்.

இப்போது என்னாச்சு? ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது ரொக்கமில்லா பரிவர்த்தனை விழுக்காடு கணிசமாக குறைந்து இருக்கிறது. இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா? என்றுதான் மோடியைப் பார்த்து நாம் கேட்க வேண்டும்.

ரொக்கமில்லா பரிவர்த்தனை என்போர் எதற்காக புதிதாக 200 ரூபாய், 50 ரூபாய் தாள்களை அச்சிட வேண்டும்?. சரி. அதையாவது சரியாக புழக்கத்திற்குக் கொண்டு வந்தார்களா என்றால் அதுவும் இல்லை.

ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்னதான் சிக்கல் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லாதவர்கள்தான் வெளிப்படையான நிர்வாகம் பற்றி அதிகமாக பரப்புரை செய்கின்றனர்.

முன்னாள் பிரதமரும் பொருளியல் நிபுணருமான மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ரகுராம் ராஜன், ரங்கராஜன் போன்றோர் பணமதிப்பிழப்பின் விளைவுகள் குறித்து சொல்வதை எல்லாம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை பாஜக பரிவாரங்கள்.

சங்க பரிவாரங்கள் மட்டுமே இந்தியா அல்ல என்பதை இப்போதாவது பாஜக உணர வேண்டும்.

நம்புங்கள் பிரதமரே…முயலுக்கு நான்கு கால்கள்தான்.

– அகராதிக்காரன்.