Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்ற ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் தீக்கனலாய் பரவி வரும் நிலையில், அவரும் பாஜகவினரும் பெரியார் தன் மீதான எதிர்ப்புகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டு, நெஞ்சுரத்துடன் களமாடினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ அமைப்பே பாராட்டிய ஒப்பற்ற சமூகப் போராளியான பெரியாரின் ஒட்டுமொத்த பயணமும் திராவிடர்களுக்கானது; தமிழர்களுக்கானது. அவருடைய பயணத்தில் அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகளும், அவற்றை எதிர்கொண்ட விதமும் பற்றிய சில பதிவுகள் இங்கே…

  • திராவிடர் கழகத்தினர், சேலத்தில் 1971ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினர். அந்த மாநாட்டையொட்டி ஓர் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில், திராவிடர் கழகத்தினர் ஹிந்து மத கடவுளர்களை அவமதித்ததாகக் கூறி, அவருடைய எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் அவமதித்தனர். அதை தனக்கே உரிய நையாண்டித் தனத்துடனும், சமயோசித ஞானத்துடனும் எதிர்கொண்ட பெரியார், தானே பாதி விலையில் தனது படத்தையும், செருப்பையும் அனுப்பி வைப்பதாக அறிக்கை வெளியிட்டார்.

 

  • அதே ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் திமுகவுக்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்து இருந்தது. ராமரை செருப்பால் அடித்தவர்கள் ஆதரிக்கும் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் பரப்புரை செய்தன. ஆனால், 1967ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 137 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த திமுக, 1971ல் நடந்த தேர்தலில் 184 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த வரலாற்று வெற்றியை எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களால் கூட வீழ்த்த முடியவில்லை.

  • ”இந்த சிலை வைப்பது, உருவப்படம் திறப்பு, நினைவுச்சின்னம் எழுப்புவது போன்றவை எல்லாம் பரப்புரை காரியமே தவிர, இதெல்லாம் பெருமையல்ல. ஒருவன், இது யாருடைய சிலை எனக் கேட்டால், இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். அடுத்து அவன், பெரியார் என்றால் யார் என்று கேட்பான். உடனே அவன், பெரியாரைத் தெரியாதா? அவர்தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று கூறுவான். இப்படி நம் கருத்தானது பரவிக்கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புதான் இந்த சிலையாகும்,” என்று 24.5.1969ம் தேதி தர்மபுரியில் தமது சிலை திறப்பு விழாவில் பெரியார் பேசுகையில் குறிப்பிட்டார்.

அதேபோல், ‘விடுதலை’ இதழில் 1969ம் ஆண்டு, ஜூன் 9ம் தேதி பெரியார் எழுதிய ஒரு கட்டுரையில் இப்படி குறிபிட்டார்:

  • ”இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்த சிலை எனக்கு மணியடிக்கிற சிலை இல்லை. பூசை செய்கிற சிலை இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலை இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்பவனுடைய சிலை ஆகும்,” என்று எழுதியிருந்தார். தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்வதில் அவருக்கு நிகர் அவரே.

  • ஒருமுறை தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தது. அது, அவருடைய 89வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கூட்டம். அப்போது அவர், ”ஏதோ பலமாய் நாங்கள் சொல்கிறோம். சொல்வதை அப்படியே கண்களை மூடிக்கொண்டு நீங்கள் நம்புங்கள் என்று நாங்கள் கேட்பதில்லை. ஏதோ ஆராய்ந்து பாருங்கள். உங்கள் அறிவைக் கொண்டு நன்றாக சிந்தியுங்கள். சரி என்று பட்டால் நம்புங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர எங்கள் பேச்சை நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை,” என்றார்.

பெரியார், ஒருபோதும் தன் கருத்தை பிறர் மீது திணிக்க முயன்றவரில்லை என்பதற்கு இதுபோல் பல கூட்டங்களில் பேசியுள்ளதை சான்றாகக் கூற முடியும்.

இன்னொரு நிகழ்வு. பலருக்கும் தெரிந்திருக்கலாம். 1944ல் நடந்தது.

  • கடலூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக சக தோழர்களுடன் சென்றிருந்தார் பெரியார். பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று பலத்த மழை. கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு, ரயில் மூலம் சென்னை திரும்ப ஏற்பாடு நடந்தது. மழையால் மின்சாரம் நிறுத்தப்பட்டதால், வழியெங்கும் கும்மிருட்டு.

அப்போது மகிழுந்து வசதி இல்லாததால், ரிக்ஷா வண்டியில் தோழர் பெரியாரை அமர வைத்து, மற்ற தோழர்கள் அவரை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அந்த இருட்டுக்குள் பெரியாரின் எதிர்ப்புக் கோஷ்டியை சேர்ந்த மர்ம ஆசாமியொருவர், பெரியார் மீது ஒற்றை செருப்பை வீசிவிட்டு ஓடிவிட்டார். திடீரென்று ரிக்ஷாவை வந்த வழியே திருப்பச் சொன்னார் பெரியார்.

சிறிது தூரம் சென்றதும், பின்னர் மீண்டும் ரயில் நோக்கி ஓட்டச் சொன்னார். அவரின் நடவடிக்கைகள் சக தோழர்களுக்கு புரியவில்லை. ரயில் நிலையம் சென்றடைந்தபோது, வண்டியை பாதி வழியில் திருப்பச் சொன்னேனே ஏன் தெரியுமா? என்று கேட்டார். அப்படி கேட்டுவிட்டு அவரே அதற்கு பதிலும் சொன்னார். இருட்டாக இருந்ததால் உங்களுக்கு நடந்தது தெரியாமல் போயிருக்கும்.

யாரோ ஒருவர் என் மீது தன்னுடைய ஒரு செருப்பை வீசிவிட்டு ஓடிவிட்டார். எஞ்சியிருக்கும் ஒரு செருப்பு அவருக்கும் பயன்படாது. எனக்கும் பயன்படாது. அந்த இன்னொரு செருப்பை அவர் அங்கேதான் தவற விட்டிருக்க வேண்டும் என்பதால், அதை எடுக்கவே வண்டியை திருப்பச் சொன்னேன். இப்போது இரண்டு செருப்பும் கிடைத்துவிட்டன. அது எனக்கு பயன்படும் என்றார்.

அவர்தான் பெரியார்!.

 

– பேனாக்காரன்.