Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!; ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

-மகளிர் தின சிறப்புக் கட்டுரை-

 

இன்று உலகெங்கும் முதலாளிய வண்ணங்களுடன் பொழுதுபோக்கு சடங்காக நடத்தப்பட்டும் வரும் மகளிர் தினம் என்பது, உண்மையில் குருதியில் மலர்ந்தது. உழைக்கும் பெண்களை சுரண்டிப் பிழைத்த கூட்டத்தினரிடம் இருந்து பெண்களுக்கான உரிமையை மீட்டெடுத்த சர்வதேச பொதுவுடைமை இயக்கத் தலைவரான கிளாரா ஸெட்கின் போன்றவர்தான் சேலம் இந்திராணி (53).

இந்திராணி

சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மின்னாம்பள்ளி கிராமம். பல்வேறு சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஊர்தான். எனினும், பட்டியல் இனத்தவர் இங்கு அதிகம். 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்னாம்பள்ளி, கள்ளச்சாராய விற்பனை மையமாக இருந்தது.

அந்த ஊரில் முக்கிய தலைகள் பத்து பேர். கள்ளச்சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பதுதான் அவர்களின் முழுநேரத் தொழில். மின்னாம்பள்ளியில் கூலித்தொழிலாளர்களை போதையில் வைத்திருந்த ‘பெருமை’ அவர்களுக்கு உண்டு. கள் குடித்த குரங்குகள் என்னென்ன செய்யுமோ அத்தனை சமூக விரோத செயல்களிலும் ‘குடித்த’ ஆண்கள் ஈடுபட்டனர். படித்த ஆண்கள் அவற்றை வேடிக்கை பார்த்தனர்.

அடுத்தடுத்து நடந்த சில கள்ளச்சாராய சாவுகள் மின்னாம்பள்ளி பெண்களை உணர்வு ரீதியாக உஷார்படுத்தியது. குடிபோதையில் வீட்டிலிருக்கும் பெண்களை அடித்து உதைப்பது, வழிப்பறியில் ஈடுபடுவது, தட்டிக்கேட்போரை தூக்கிப்போட்டு மிதிப்பது என மதுவின் நீட்சியாக தொடர்ந்த குற்றங்கள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து உச்சத்தில் இருந்தது.

சமூகத்தில் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் தாக்கம் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகம். பெண்கள் நினைத்தால்தான் கள்ளச்சாராயத்தை ஒழித்துக்கட்ட முடியும் என்ற நிலை. யோசித்தனர் பெண்கள். அவர்களை வழிநடத்தினார், இந்திராணி. அவர் காளியப்பனின் மனைவி.

இந்திராணி அப்போது, ‘களஞ்சியம்’ என்ற மகளிர் குழு அமைப்பில் மின்னாம்பள்ளி பகுதியில் முக்கிய தளகர்த்தராக இருந்தார். களஞ்சியம் என்பது பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அளிப்பது மட்டுமின்றி, கந்துவட்டி மற்றும் சாராய ஒழிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வந்த வந்த நேரம்.

அந்தப் பகுதியில் அப்போது இந்திராணியின் முயற்சியால் நாலைந்து களஞ்சியம் மகளிர் குழுக்கள் உருவாக்கப்பட்டு இருந்தது.

”இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கள்ளச்சாராயத்தை அனுமதிப்பது?. தெனமும் குடிச்சிப்புட்டு வந்து வீட்டுல உள்ள பொம்பளைங்கள அடிக்கிறதும், மிரட்டுறதுமா இருந்தாங்க. ஊர்ல ஒரு சாவு எடுத்துட்டுப் போகும்போதுகூட அடிதடி நடந்து, மண்டைய உடைச்சிக்குவாங்க. சாராயத்தால எத்தனையோ குடும்பங்க காலாந்திரி ஆயிருக்கு. கள்ளச்சாரயம் குடிச்ச ஆம்பளைங்க செத்துப்போயி, அதனால அவங்க குடும்பங்கள் நடுத்தெருவுல நின்னுருக்கு.

மின்னாம்பள்ளி கிராமத்தின் இப்போதைய தோற்றம்.

லவுடிங்க (ரவுடி என்பதை லவுடி என்றே குறிப்பிடுகிறார்) தொல்லையும் அதிகமாயிருச்சு. ராத்திரி நேரத்துல தெரு வௌக்கு எல்லாத்தையும் கல் வீசி உடைச்சிடுவாங்க. போற வர்ற பொம்பளைங்ககிட்ட தகராறு பண்ணுவாங்க. நீளமான வீச்சரிவாளை எடுத்துட்டு அதை ரோட்டுலயே உரசிக்கிட்ட நடப்பானுங்க. அவனுங்கள பார்த்தாலே எல்லோரும் மிரண்டு தெறிச்சி ஓடிடுவாங்க. சாராயமும், லவுடித்தொல்லையும் அளவுக்கு அதிகமாக போச்சு.

அப்புறம் இங்கயிருந்து ஒரு லாரி சனமே கலெக்டர பார்க்கப் போயிட்டோம். எங்கூர்ல இந்த மாதிரி பிரச்னை இருக்கு. நீங்கதான் உதவி பண்ணனும்னு கேட்டுக்கிட்டோம். இந்த தகவல், அப்போது சேலம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் சாருக்கு தெரிஞ்சுபோயி, அவர் இதப்பத்தி பேசறதுக்கு எங்க வீட்டுக்கே வர்றேன்னு சொன்னாரு. என்ன காரணமோ தெரியல. அவரால அப்போது வர முடியல.

போலீசு வரலைங்கறதுக்காக நாம அப்படியே விட்டுட முடியுமா? உடனடியாக நாங்க என்ன பண்ணினோம்னா, கள்ளச்சாராயம் விற்கிறவங்கள கண்டிச்சு, ஊர்வலம், பொதுக்கூட்டம் போடலாம்னு முடிவு பண்ணினோம். அந்த நிகழ்ச்சி நடந்தது எந்த மாசத்துலனு தெரியல. ஆனா, 2005ம் வருஷத்துல ஏதோ ஒரு மாசத்தோட 27ம் தேதியன்னிக்குதான் சாராயத்துக்கு எதிராக கூட்டம் நடத்தினோம்.

இதுக்காக நாங்க மொத்தமே பத்து பத்திரிகைதான் அடிச்சோம். காரிப்பட்டி போலீஸ், எஸ்பி ஆபீசு, களஞ்சியம் ஆபீசு, இங்குள்ள நடிகர்களோட ரசிகர்கள் மன்றத்துக்குனு பத்திரிகை வெச்சோம். நாங்க இந்த மாதிரி கூட்டம் நடத்துறோம்னு எஸ்பி பொன் மாணிக்கவேல் சார்கிட்ட சொல்லி, அவரையும் கலந்துக்க வரும்படி அழைச்சோம்.

அதைக் கேட்டதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. ஆனால், மேடையில் ஒரு ஆம்பள இருக்கக்கூடாது. சாராயம் ஒழிப்பு பத்தி பொம்பளைங்கதான் பேசணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு. அதேமாதிரி அவர் விழாவுக்கு வந்தாரு. அவர் பேசும்போது, ‘இந்த ஊர்ல யார் சாராயம் வித்தாலும், லவுடித்தனம் பண்ணினாலும் எந்த நேரத்துலயும் எனக்கு ஃபோன் பண்ணுங்க’னு சொல்லி அவரோட செல்போன் நம்பர கொடுத்துட்டு போனாரு.

வீட்டுல இருக்க பொம்பளைங்க எல்லாரும் மிளகாய் பொடி அள்ளி வெச்சுக்குங்க. யாராவது உங்ககிட்ட லவுடித்தனம் பண்ணினா உடனே மிளகாய் பொடி வீசுங்கனு சொன்னாரு. அவர் அப்படி சொன்னதும் இங்குள்ள பொம்பளைங்க எல்லாருக்கும் இன்னும் துணிச்சல் வந்துடுச்சு,” என 13 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை கூறினார் இந்திராணி.

தற்போது இந்திராணி, வீடு அருகிலேயே ஒரு கடை வைத்து சிறிய அளவில் சேலை வியாபாரம் செய்து வருகிறார்.

சாராய ஒழிப்பு பொதுக்கூட்டத்திற்கு முன்பு, களஞ்சியம் பெண்கள் எல்லோரும் இந்திராணி தலைமையில் ‘ஒழிப்போம் ஒழிப்போம் சாராயத்தை ஒழிப்போம்’, ‘ஒழிப்போம் ஒழிப்போம் கந்துவட்டியை ஒழிப்போம்’ என்று வீரமுழக்கமிட்டவாறு ஊரு க்குள் ஊர்வலம் நடத்தினராம்.

காலங்காலமாக குடிகார கணவர்களிடம் மிதிபட்டு மனசுக்குள்ளேயே மருகிக்கிடந்த பெண்களின் கைகளில் இப்போது மிளகாய் பொடியும், எஸ்.பி. பொன் மாணிக்கவேலின் செல்போன் நம்பர் என்ற ஆயுதமும் கிடைத்தபின்னர் சும்மா இருப்பார்களா?

பொன். மாணிக்கவேல், ஐ.ஜி.

ஊருக்குள் சாராய வாடை அடித்தாலே காவல்துறைக்கு போன் போட்டு புகார் சொல்ல தொடங்கினர். மக்கள் ஆதரவு இருக்கும்போது காவல்துறை சும்மா விடுமா என்ன? அந்த ஊரில் கோலோச்சிக்கொண்டிருந்த கள்ளச்சாராய கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்திராணியின் போராட்டத்திற்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட பத்து குடும்பத்தினரைத் தவிர ஏனைய குடும்பத்து பெண்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அந்த ஆதரவுக்குக் காரணம், அவர்களின் குடும்பங்கள் சாராயத்தால் வீழ்ந்திருந்தது என்பதை சொல்லாமலே புரிந்திருக்கும்தானே.

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மானம், அவமானங்களுக்கு அஞ்சக்கூடாது என்பார் சமூக விஞ்ஞானியான தோழர் பெரியார். அதை இந்திராணியும் நன்றாகவே உணர்ந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மேடையிலேயே சாராய கும்பலுக்கு எதிராக முழங்கினார் இந்திராணி. அதைக்கண்டு பொறுக்க முடியாத சாராய கும்பல், அப்போது ஊர் தலைவராக இருந்த இந்திராணியின் அண்ணனிடம் (அவர் இந்திராணியின் தந்தையின் மூத்த தாரத்து மகன்) முறையிட்டுள்ளனர். ”உங்க தங்கச்சி, நம்மோட தொழிலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கறாங்க. அது நல்லதுக்கில்ல” என்று புகார் புஸ்தகம் வாசித்திருக்கின்றனர்.

அத்தோடு அந்த கும்பல் நின்றுவிடவில்லை. களஞ்சியம் குழு கூட்டங்களை நடத்த முடியாத வகையில் தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துள்ளனர். மேலும், இந்திராணியை தாக்குவதற்காக செருப்பு, விளக்குமாறுகளை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக அவரை பொதுவெளியில் ஆபாசமாக திட்டிபடியே வந்துள்ளனர்.

நம் சமூகத்தில் பெண்களைத் திட்டுவதாக இருந்தாலும் எப்படி திட்டுவார்கள் என்று நீங்களும் அறிவீர்தானே? ‘தேவரடியாள்’ என்பதை, நடைமுறை வழக்கில் திட்டுவர். பெண்ணின் அவயங்களை குறித்து வசை பாடுவர். இந்திராணிக்கும் அத்தகைய ஆபாச அர்ச்சனைகள் நடந்தது.

தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்துறையினர் இந்திராணி வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கினர். இந்த பாதுகாப்பு, அவருடைய வீட்டுக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில், களஞ்சியம் பெண்கள் எல்லோரும் ஓரணியாக இருந்து கள்ளச்சாராயத்தை ஒழித்துள்ளனர். அந்த நிகழ்வுதான் மின்னாம்பள்ளியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் முன்னோடியாக இருந்தது என்றார் இந்திராணி.

”ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள எனக்கு இத்தனை துணிச்சலையும் களஞ்சியம்தான் சார் கொடுத்துச்சு,” என்றார்.

சேலம் மாவட்டத்தில் அப்போது எஸ்.பி.யாக இருந்த பொன். மாணிக்கவேல், இப்போது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.ஆக இருக்கிறார். அவரிடம் இதுபற்றி நினைவு கூர்ந்தோம். அவரிடம் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் அதே உற்சாகத்துடன் பேசினார்.

”ஆமாமா…எனக்கு நல்லா நினைவு இருக்கு சார்… அந்த ஊரே எனக்கு பழக்கம். ஏன்னா, அங்க சாராயம் விற்கிற ஆறேழு பேரு ரொம்ப அட்டூழியம் பண்ணிட்டு இருந்தாங்க. எல்லாரையும் டக் டக்குனு உள்ளே புடிச்சி, திருப்பி கேஸூக்கு மேல கேஸூக்கு மேல போட்டோம். இல்லாட்டினா அவங்கள இவங்க வெட்டி போட்டுருவாங்க. அந்தளவுக்கு போலீசுக்கு அவங்க குளோஸா இருக்கறத பார்த்து பயந்துகிட்டிருந்தாங்க.

நைட்டு 12 மணி, 2 மணிக்கெல்லாம் கால் வரும். உடனடியாக போலீசாரை அங்கு அனுப்பி வைப்பேன். பீஸ் பீஸா எல்லாம் ஓடிப்போயிடுவானுங்க. நான் அவங்கள விசாரிச்சதா சொல்லுங்க,” என்றவர், என் நம்பர கொடுத்து பேசச்சொல்லுங்க என என்றும் மாறாத அன்புடன் குறிப்பிடவும் தவறவில்லை.

ஊரையே மிரட்டிய சாராயத்துக்கு எதிரான ஊர்வலமும், பொதுக்கூட்டமும் மின்னாம்பள்ளியை கள்ளச்சாராயமற்ற கிராமமாக மாற்றியிருக்கிறது. இந்திராணி உள்ளிட்ட பெண்களுக்குக் கிடைத்த நிகழ்கால வரலாற்று வெற்றி அது.

கள்ளச்சாராயத்தில் இருந்து மின்னாம்பள்ளி விடுதலை பெற்றுவிட்டாலும், டாஸ்மாக் மதுவின் கோரப்பிடியில் இன்னும் மோசமாக சிக்குண்டு கிடக்கிறது. டாஸ்மாக் அரக்கனை விரட்டியடிக்க, மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்தை இந்திராணிகள் தொடங்க வேண்டிய காலம் இது.

 

– இளையராஜா சுப்ரமணியம்.
பேச: 75399 91916.