சேலம் நகரம் 1866ல் உருவாக்கப்பட்டது. 153 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், 1.6.1994ல் மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. சீர்மிகு நகரமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஒரு காலத்தில்,
சேரர்களின் கட்டுப்பாட்டில்
இருந்த இந்த நகரம்,
அதன்பிறகு மைசூர்
சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில்
இருந்தது. போரில்
திப்பு சுல்தான் தோல்வி
அடைந்த பிறகு,
இந்த நகரம் கிழக்கிந்திய
கம்பெனி வசம் கொண்டு
வரப்பட்டது. அதனால்,
சேலம் மாநகரில்
முக்கிய தெருக்கள்,
அங்காடிகள், வணிக பகுதிகள்
பலவும் இயல்பாகவே
ஆங்கிலேயர்களின்
பெயர்களை
வரித்துக்கொண்டன.
உதாரணத்திற்குச் சில…
ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் (HARRY AUGUSTUS BRETTS) என்ற ஆங்கிலேயர், 1853 முதல் 1862 வரை சேலம் ஜில்லாவின் ஆட்சியராக இருந்தார். அவருடைய நினைவாக சேலம் ஆட்சியர் அலுவலகம் – கால்நடை மருத்துவமனை – முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு ‘பிரட்ஸ் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதேபோல், 1870 முதல் 1881 வரை ஆட்சியராக இருந்த சி.டி.லாங்லி (C.T.LONGLY) என்பவரின் நினைவாக, செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பகுதிக்கு ‘லாங்லி சாலை’ என பெயர் வைக்கப்பட்டது.

குமாரசாமிப்பட்டி அருகே உள்ள வின்சென்ட் பகுதியும் சேலத்தில் ரொம்பவே பிரபலம். அதன் பின்னணியிலும்கூட சுவையான தகவல் ஒன்று உண்டு. முதன்முதலில் சேலத்தில் சோடா பானம் தயாரிப்பு ஆலையைத் தொடங்கிய ஆங்கிலேயர் பெயர்தான், வின்சென்ட் (VINCENT). பின்னாளில் வின்சென்ட்டிடம் இருந்த நிறுவனத்தை இந்தியர் ஒருவர் வாங்கினார். என்றாலும், அந்த சோடா ஆலை இருந்த இடத்திற்கு இன்று வரை ‘வின்சென்ட்’ என்றே பெயரிட்டு அழைத்து வருகிறோம். இப்படி, ‘பால் மார்க்கெட்’, ‘ஜான்சன் பேட்டை’, ‘லீ பஜார்’, ‘செர்ரி ரோடு’ என ஒவ்வொரு தெருக்களின், இடங்களின் பெயர்களின் பின்னாலும் சுவாரஸ்ய கதைகள் இருக்கின்றன.
சேலம் மாநகரில்
தெருக்களின் பெயர்
பலகைகள், கல்வெட்டுகள்
காணாமல் போன நிலையில்,
மாநகராட்சி நிர்வாகம்
உயர்தரமான ஒளிரக்கூடிய
வகையில் பெயர்ப்பலகைகளை
அமைத்து வருகிறது.
இந்நிலையில், சில இடங்களில்
பெயர்ப்பலகைகளில் உள்ள
பெயர்களின் தமிழ் வடிவமும்,
ஆங்கில வடிவமும்
வேறு வேறு பொருள்
தரும்படியும், பிழையாகவும்
இருந்தன. குறிப்பாக,
‘பிரட்ஸ் ரோடு’ என்பது
ஆங்கிலத்தில் பிழையின்றி
சரியாக இருந்தது.
ஆனால், அதை தமிழில்
‘பரேட்டஸ் ரோடு’ என்று
பிழையாக குறிப்பிடப்பட்டு
இருந்தது.

இதை படம் பிடித்த நாம், ‘பூவை புஷ்பம் என்றும் சொல்லலாம்தான். ஆனால் பிரட்ஸ் ரோடு என்பதை பரேட்டஸ் ரோடு என்று சொல்ல முடிந்தால், அதுதான் சேலம் மாநகராட்சி,’ என்று பகடி செய்து, புதிய அகராதி வாட்ஸ்அப் குழுவிலும், இதர சில குழுக்களிலும் பதிவிட்டிருந்தோம். மேலும், மாநகராட்சி ஆணையரின் வாட்ஸ்அப் எண்ணிற்கும் பிழையைச் சுட்டிக்காட்டி அனுப்பி இருந்தோம். அவருக்கு செப். 25ம் தேதி மாலை 6.41 மணிக்கு இத்தகவலை அனுப்பினோம்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தரப்பில் இருந்து உடனடியாக நமக்கு மறுமொழி வந்தது. அதுபோல் 24 மணி நேரத்திற்குள் பிரட்ஸ் ரோடு பெயர் பலகையில் இருந்த பிழை நீக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட சரியான பெயர் பலகை ஒட்டப்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட பெயர் பலகையையும் மாநகராட்சி தரப்பில் இருந்து படம் எடுத்து நமக்கு அனுப்பி வைத்தனர்.

மக்களின் குரலுக்கு
மதிப்பளித்தலே ஆகச்சிறந்த
நிர்வாகத்திறனுக்கு அழகு.
பெயர்ப்பலகையில் இருந்த
பிழையை திருத்தம் செய்ததில்
விரைந்து முடித்திருப்பது
பாராட்டுக்குரியது. எனினும்,
மாநகரில் தெருக்கள்,
சாலைகளை அடையாளப்படுத்தும்
விதமாக வைக்கப்பட்டுள்ள
பலகைகளில் தமிழிலும்கூட
ரோடு என்றே (உ.ம்.: காந்தி ரோடு)
எழுதியிருக்கிறார்கள்.
தமிழ் வடிவத்தில்
எழுதும்போது ரோடு
என்பதை சாலை என்று
குறிப்பிட வேண்டாமா?
அதேபோல பல இடங்களில்
தெருக்களுக்கு சாதிகளின்
பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
அதையும் மாற்றி அமைக்க
வேண்டும். ஸ்மார்ட் சிட்டி
என்பதில் சாதியற்ற
பெயர்ப்பலகையும் அடங்கும்
என்பதே நமது கருத்து.
அதை உணராதவர் அல்ல மாநகராட்சி ஆணையர். செய்வார் என்று நம்புவோம்.
– பேனாக்காரன்