ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து முக்கிய விழாக்கள் வரிசைகட்டி நிற்கும் வேளையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முடிந்த பின்னரும்கூட இரு மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்கிறார்கள், சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.
சேலம் மாநகராட்சியில் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள், சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. மைய அலுவலகம் மூலம் நான்கு மண்டலங்களின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அலுவலக பராமரிப்பு முதல் ஊழியர்களின் சம்பளம் வரையிலான செலவினங்களுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம், வரி வருவாயையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, மாநகரில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றின் வசூலைக் கொண்டே பணியாளர்களுக்கு ஊதியம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்கள், சந்தைகள், கடைகள், கல்யாண மண்டபங்கள், நாளங்காடிகள், இறைச்சிக் கூடங்கள், வாகனங்கள் நிறுத்தும் கூடங்கள் ஆகியவற்றை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்காக, பில் கலெக்டர்களுக்கு வரி வசூலிப்பில் தனியார் நிறுவனங்கள் போல தினசரி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இலக்கு எட்டப்படவில்லை எனில், பில் கலெக்டர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட வேலை பார்க்கும் நிலை உள்ளது. என்னதான் வரி வசூலிப்பில் தீவிரம் காட்டினாலும், சம்பளம் மட்டும் உரிய தேதியில் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. காரணம் கேட்டால், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? என்று உதட்டை பிதுக்குகிறது மாநகராட்சி நிர்வாகம், என்கிறார்கள் நிதிநிலையின் உள் விவரங்களை அறிந்தவர்கள்.
சம்பளம்கூட வழங்க முடியாத அளவுக்கு அப்படிதான் என்னதான் மோசமான நிதி நிலைமை என்று நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.
”சேலம் மாநகராட்சியில் வரி, ஏலங்களின் வாயிலாக கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் நிர்வாகச்செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கமிஷனர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, புதிய வருவாய் மூலங்களை பெருக்குவதற்கான வழிமுறைகளை யாருமே அமல்படுத்தவில்லை. இப்போதுள்ள கமிஷனர் சதீஸ், வரி வசூலில் கறாராக இருக்கிறார். மாநகராட்சி மைய அலுவலகங்களில் தேவையில்லாமல் மின்விளக்குகள்கூட எரியக்கூடாது என்று மின் கட்டண செலவுகளைக்கூட வெகுவாக குறைத்திருக்கிறார்.
ஆனாலும், அம்மா உணவக பராமரிப்பால் மாநகராட்சிக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த உணவகங்களை ஏற்று நடத்த, அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் சேலம் மாநகராட்சியின் நிதி நிலவரம் ஓரளவு சீரடையும்,” என்கிறார்கள் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள்.
கள விசாரணையில் நமக்கு மேலும் சில தகவல்களும் கிடைத்தன.
”கடந்த 2011 முதல் 2016 வரை உள்ளாட்சி அமைப்பு அமலில் இருந்தபோது, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் தேவைக்கு அதிகமாக பொதுக்குடிநீர் குழாய்கள் பதிக்க வற்புறுத்தியதால், வீடுகளுக்கு புதிய இணைப்புகள் பெறுவது பெருமளவு குறைந்து போனது. அதன்மூலம் கிடைக்க வேண்டிய டெபாசிட் வருவாய் கிடைக்காமல் போனது.
அது மட்டுமல்ல. சொந்த ஊர் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சேலம் வருகிறார். அப்படி வரும்போது ஆளுங்கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகளும் உடன் வருகின்றனர். அவர்களுக்கான தங்கும் வசதிகள், போக்குவரத்து, உணவு உபசரிப்பு உள்ளிட்ட செலவுகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகம்தான் செய்து கொடுக்கிறது. சொல்லப்போனால் இதுபோன்ற செலவுகளையெல்லாம் எந்த கணக்கிலும் ஏற்ற முடியாது. அதை சமாளிக்க கஜானாவை சுரண்டுவதும், அந்தக் கணக்கு வழக்குகளை ஏதோ ஒரு தலைப்பில் ஏற்றுவதும் சகஜமாகி விட்டது,” என்று மாநகராட்சியின் கஜானா நலிவுக்கான காரணத்தைச் சொன்னார்கள் சிலர்.
ஆனால், பில் கலெக்டர்களின் புலம்பல்தான் அதிகமாக ஒலித்தன. நாம் அவர்களிடமும் பேசினோம்.
”சார்… மாநகராட்சியில்
பணியாற்றும் ஊழியர்கள்
நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில்
வருவதில்லை. என்றாலும்,
அரசு ஊழியர்களுக்கு உள்ளதுபோல்
ஏழாவது ஊதியக்குழு
பரிந்துரைகள் முதல்
இன்ன பிற பணப்பலன்கள்
அனைத்தும் எங்களுக்கும்
பொருந்தும். அரசு ஊழியர்களுக்கு
மாதத்தின் கடைசி நாளான
30 அல்லது 31ம் தேதியில்
அவரவர் வங்கிக்கணக்கில்
அந்த மாதத்திற்குரிய
சம்பளம் வரவு
வைக்கப்பட்டு விடும்.
அவர்களைப்போல நாங்களும்
மாதத்தின் கடைசி நாளில்
அந்த மாதத்திற்குரிய சம்பளத்தை
பெற்ற அதிசயம் எல்லாம்
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு
நடந்தது. அசோகன் என்பவர்
கமிஷனராக இருந்தபோது,
ஊழியர்களின் ஊதியத்திற்கான
தொகையை ஒதுக்கி
வைத்துவிட்டுதான் மற்ற
செலவினங்களுக்கு
நிதி ஒதுக்குவார்.
அதற்குப் பிறகு செல்வராஜ்
கமிஷனராக இருந்தபோது,
நிர்வாகம் ஒட்டுமொத்தமாக
சீர்குலைந்தது. அவர் காலத்தில்
சம்பளம் பெற 15ம் தேதி
வரை காத்திருக்க
வேண்டியதாகியது.
இப்போதுள்ள கமிஷனர் சதீஸ்,
கூடுமான வரை சம்பளத்தை
முதல் பத்து தேதிக்குள் வழங்க
நடவடிக்கை எடுத்தாலும்
பலன் அளிக்கவில்லை. கடைசி
வாரத்தில்தான் சம்பள பட்டுவாடா
நடக்கிறது. இப்போது ஆகஸ்ட்,
செப்டம்பர் முடிந்து அக்டோபர்
பிறந்துவிட்டது. இன்னும்
ஆகஸ்ட் மாத ஊதியமே
கிளர்க், பில் கலெக்டர்கள்,
ஆர்ஐக்கள், ஏஆர்ஓக்கள்
உள்ளிட்ட நிர்வாகப்பிரிவு
ஊழியர்களுக்கு
வழங்கப்படவில்லை.
ஆயுதபூஜை, தீபாவளி என
அடுத்தடுத்து பண்டிகைகள்
வருகின்றன. இந்தாண்டு முதல்
பண்டிகை முன்பணம் 10 ஆயிரம்
ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆனால் ஆகஸ்ட் சம்பளமே
வழங்காமல் இழுத்தடிக்கிறது
சேலம் மாநகராட்சி.
ஆணையர் சதீஸிடம் சம்பளம் பற்றிய பேச்சை எடுத்தால், கடும் நிதி நெருக்கடி என்கிறார். அதையே காரணம்காட்டி பில் கலெக்டர்களுக்கு தினமும் வரி வசூலுக்கு இலக்கு நிர்ணயிக்கிறார். இலக்கை எட்டவில்லை என்றால் கூட்டத்தில் எல்லோர் முன்னிலையிலும், ‘உங்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பினால் பொண்டாட்டி, புள்ளைங்க எல்லாம் நடுத்தெருவில் நிற்பார்கள்… பரவாயில்லையா…’ என மன உளைச்சல் ஏற்படும் வகையில் திட்டுவார்.
இப்போதுகூட ஞாயிற்றுக்கிழமைகளில்கூட வரி வசூல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறோம். களப்பணிகள் ஒரு பக்கம் முடித்துவிட்டு அப்பாடா… வேலை முடிந்தது… வீட் டுக்குப் போகலாம் என்று நினைத்தால், அப்போதுதான் அவசரக்கூட்டம் நடத்துவார். அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல இரவு 10 மணி ஆகிவிடுகிறது. கொத்தடிமை போல ஆகிவிட்டோம். கமிஷனர் சதீஸூக்கு, அரசாங்கம் உரிய தேதியில் சம்பளம் வழங்குகிறது. அதனால் அவருக்கு எங்களின் வலியும், வேதனையும் புரியாது,” என்கிறார்கள் பில் கலெக்டர்கள்.
உரிய சம்பளம் என்றில்லை;
சரியான நேரத்தில் ஊதியம்
வழங்கப்படாமல் போனாலும்
ஊழியர்கள் லஞ்ச
லாவண்யத்திற்கு ஆட்படும்
சிக்கலும் இருக்கிறது.
அதை மாநகராட்சியே
ஊக்குவித்தல் ஆகாது.
ஒட்டுமொத்த நிர்வாகமும் சிதிலமடைந்து கிடக்கும்போது, சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது கொடுத்தார்கள் எனும்போது, விருது வழங்கியவர்களின் ஆளுமையை நாம் கேள்வி எழுப்பாமல் எப்படி இருக்க முடியும்?
– பேனாக்காரன்