கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், அரசுத்தரப்பு முக்கிய சாட்சியான சுவாதியைப் போலவே, அவருடைய தாயார் செல்வியும், பிறழ் சாட்சியம் அளித்ததால் அரசுத்தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில்..:
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் – சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்திருந்தார்.
தன்னுடன் வகுப்பில் ஒன்றாக படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார் கோகுல்ராஜ்.
கடந்த 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள் 24.6.2015ம் தேதியன்று மாலையில் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல் நாளான 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, ஏழு பேர் கொண்ட கும்பல் அவர்களை மிரட்டியதோடு இருவரும் எந்த ஜாதி, தாய் தந்தையர் செய்து வரும் தொ-ழில் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுள்ளது.
ஆணவக்கொலை:
அந்த கும்பல் வலுக்கட்டாயமாக கோகுல்ராஜை வெள்ளை நிற டாடா சஃபாரி காரில் கடத்திச்சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் கும்பல்தான் கடத்திச்சென்றிருப்பது தெரிய வந்தது.
யுவராஜ் சார்ந்த கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கோகுல்ராஜும் காதலிப்பதாக கருதிய அந்த கும்பல் கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்று அப்போது சர்ச்சைகள் கிளம்பின.
இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கின் சாட்சிகள் விசாரணை 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. அரசுத்தரப்பில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ள சுவாதி செப்டம்பர் 10, 2018ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
சுவாதி பிறழ் சாட்சியம்:
சிஆர்பிசி 164 அறிக்கையின்போது நாமக்கல் மாவட்ட ஜேஎம்-2 நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது சொன்ன வாக்குமூலத்திற்கு அப்படியே நேர் எதிராக சுவாதி, கடந்த 10ம் தேதியன்று பிறழ் சாட்சியம் அளித்தார். அதுகுறித்து முன்பே புதிய அகராதி விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது.
சுவாதியின் தாயார் சாட்சியம்:
இந்நிலையில், அரசுத்தரப்பில் ஐந்தாவது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள சுவாதியின் தாயார் செல்வி, இன்று (செப்டம்பர் 18, 2018) நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சி கூண்டில் ஏறிய சுவாதியின் தாயார் செல்வியிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்…
வழக்கறிஞர் கருணாநிதி: உங்கள் மகள் சுவாதிக்கு சாமி கும்பிடும் வழக்கம் உண்டா?
செல்வி: உண்டு
வழக்கறிஞர்: அவர் எப்போதாவது தனியாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருக்கிறாரா?
செல்வி: தெரியாது
வழக்கறிஞர்: நீங்கள் இருவரும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறீர்களா?
செல்வி: இல்லை
வழக்கறிஞர்: கோகுல்ராஜ் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் 23.6.2015ம் தேதி உங்கள் மகள் சுவாதியும், கோகுல்ராஜூம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது யுவராஜ் உள்ளிட்ட சிலர் உங்கள் மகளையும், கோகுல்ராஜையும் மிரட்டியதாக உங்கள் மகள் சொன்னதாக ஏற்கனவே போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள்…
செல்வி: நான் அப்படி சொல்லவில்லை. நான் சொல்லாததையெல்லாம் போலீசார் எழுதியுள்ளனர்
வழக்கறிஞர்: உங்கள் மகளை வீடியோவில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியுமா?
செல்வி: முடியும்
வழக்கறிஞர்: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை போட்டுக் காட்டுகிறோம். அதில் உங்கள் மகள் இருக்கிறாரா? என்று பார்த்துச் சொல்லுங்கள்.
இதையடுத்து சம்பவத்தன்று கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா-1 மற்றும் கேமரா-5 ஆகியவற்றில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகள் புரஜக்டர் மூலம் சாட்சி கூண்டுக்கு பக்கத்தில் உள்ள சுவரில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. 15 நிமிடங்களுக்கு மேலாக அந்த வீடியோ திரையிடப்பட்டது.
இரண்டு கேமராவிலும் பதிவாகியிருந்த வீடியோக்களிலும் உள்ள சில உருவங்களைக் காட்டி, அதில் உள்ளவர்கள் யார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் செல்வியிடம் கேட்டார்.
அதற்கு செல்வி, வீடியோவில் இருப்பது யார் என்று தெரியவில்லை என்று பதில் அளித்தார்.
வழக்கறிஞர்: சென்னையில் உங்கள் மகள் ஒரு அகாடமியில் படித்து வந்தபோது, அவரிடம் பேசிய யுவராஜ் தரப்பைச் சேர்ந்த ஒருவர், யுவராஜை நீங்கள் அடையாளம் காட்டக்கூடாது என்று மிரட்டியதாக சுவாதி உங்களிடம் சொன்னாரா?
(அப்போது நீதிபதி கே.ஹெச்.இளவழகன் குறுக்கிட்டு, அவர் இதை செவிவழிச்செய்தியாகத்தான் கேட்டுள்ளார். அதனால் அதை ஒரு கேள்வியாக கேட்க வேண்டாம் என்று ஆட்சேபம் தெரிவித்தார்)
வழக்கறிஞர்: (செல்வி சிம் கார்டு வாங்குவதற்காக செல்வியின் புகைப்படம் ஒட்டியிருந்த ஓர் ஆவணத்தைக் காட்டியபடி) இதில் இருப்பது உங்கள் புகைப்படம்தானே?
செல்வி: தெரியவில்லை
(செல்வி அப்படிச் சொன்னபோது நீதிபதியே லேசாக புன்புறுவலித்தார்)
வழக்கறிஞர்: அந்த ஆவணத்தில் உள்ளது உங்கள் கையெழுத்துதானே?
செல்வி: தெரியாது
(அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புகைப்படமே யாருடையது என்று தெரியாது என்று சொன்னபிறகு, கையெழுத்து யாருடையது என்று கேட்கத் தேவையில்லை என ஆட்சேபித்தார்)
வழக்கறிஞர்: கோகுல்ராஜ் புதிய செல்போன் வாங்குவதற்காக தன்னிடம் ஆயிரம் ரூபாய் கேட்டதாக சுவாதி உங்களிடம் சொன்னாரா?
செல்வி: தெரியாது
வழக்கறிஞர்: நீங்களும் யுவராஜூம் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரை காப்பாற்றும் நோக்கில் பொய் சாட்சி சொல்கிறீர்கள் என்று சொல்கிறேன்.
செல்வி: இல்லை
இவ்வாறு விசாரணை நடந்தது.
சுவாதியைப்போல் செல்வியும் பிறழ் சாட்சியம் அளித்ததால், அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அவரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தவில்லை. இதைத் தொடர்ந்து மதியம் 1.45 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பின்னர் 3.15 மணிக்கு மீண்டும் சாட்சி விசாரணை தொடர்ந்தது. கோகுல்ராஜ் மற்றும் சுவாதியின் நண்பரும் கல்லூரியில் உடன் படித்தவருமான கார்த்திக் ராஜாவிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார்.
அவரிடம் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார். கார்த்திக் ராஜா இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஆறாவது சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
அவரைத் தொடர்ந்து, சம்பவத்தன்று ஈரோடு ரயில் நிலைய அலுவலராக இருந்த கதிரேசன், லோகோ பைலட் வடிவேல், உதவி லோகோ பைலட் முனுசாமி, கேஎஸ்ஆர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர்.
மாலை 5.45 மணிக்கு சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை முடிந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார்.
எதிரியால் தாமதம்:
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 14 பேரையும் போலீசார் பாதுகாப்பாக நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு உரிய நேரத்திற்கு அழைத்து வந்துவிட்டனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் டிரைவரான அருண் என்பவரை அழைத்து வர எஸ்கார்ட் போலீசார் தரப்பில் தாமதம் ஆனது. அதனால் பகல் 12.45 மணிக்குதான் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கின் முந்தைய சாட்சி விசாரணைகள் செய்திகளை படிக்க கீழே உள்ளவற்றை சொடுக்கவும்…
– பேனாக்காரன்.