Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது சுவாதியும், கோகுல்ராஜூம்தான் என்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார். இதனால் அரசுத்தரப்பினருக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

 

பொறியியல் பட்டதாரி:

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா. கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஏழை கூலித் தொழிலாளியான சித்ராவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், கலைச்செல்வன். இளைய மகன், கோகுல்ராஜ் (23).

 

திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த கோகுல்ராஜ், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்தார்.

ஆனாலும், அவ்வப்போது நண்பர்களை பார்க்க கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்படித்தான், 23.6.2015ம் தேதியன்றும் ஓமலூரில் இருந்து கல்லூரி பேருந்தில் சென்றுள்ளார் கோகுல்ராஜ். அன்று இரவு வரை மகன் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

 

மறுநாள் 24.6.2015ம் தேதியன்று மாலை, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் சடலமாகக் கிடந்தார். தலை வேறு உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது.

 

தோழியுடன் நெருக்கம்:

 

கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நடந்தை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார்.

 

கல்லூரி படிப்பை முடித்த பிறகும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது. 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்.

 

அப்போது அங்கு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர், அவர்கள் இருவரையும் மிரட்டியுள்ளனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

ஆணவக் கொலை:

 

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும் காதலிப்பதாக கருதிய யுவராஜ் தரப்பு, கோகுல்ராஜை கடத்திச்சென்று ஆணவக் கொலை செய்து, சடலத்தை தண்டவாளத்தில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

 

இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் ஜாமினில் சென்றபோது தலைமறைவாகிவிட்டார்.

 

இந்நிலையில் கடந்த 30.8.2018ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.

 

சுவாதி அந்தர் பல்டி:

 

வழக்கில் நான்காவது சாட்சியான சுவாதி, அரசுத்தரப்பின் முக்கிய சாட்சியாக கருதப்பட்டார். கடந்த 10ம் தேதி சாட்சியம் அளித்த சுவாதியிடம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் சம்பவத்தன்று பதிவாகி இருந்த காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் உருவங்கள் யாரென்று தெரியாது என்று சாட்சியம் அளித்தார்.

 

மேலும், கோகுல்ராஜ் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்பதைத் தவிர அவர் யாரென்றே தெரியாது; கல்லுரி படிப்பை முடித்த பிறகு அவரை சந்தித்ததே இல்லை என்றும் அந்தர் பல்டி அடித்தார்.

சம்பவத்தன்று தான் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லவில்லை என்றும் பிரழ் சாட்சியம் அளித்தார். இதுகுறித்து, மிக விரிவான செய்தியை ‘புதிய அகராதி’ ஏற்கனவே பதிவு செய்திருக்கிறது.

 

இந்நிலையில், இந்த வழக்கில் அரசுத்தரப்பின் ஐந்தாவது சாட்சியும், சுவாதியின் தாயாருமான செல்வி, நேற்று முன்தினம் (செப்டம்பர் 18, 2018) நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவருக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

 

தாயார் பிறழ் சாட்சியம்:

 

வீடியோவில் இருப்பவர்கள் யாரென்று தெரியாது என செல்வியும் பிறழ் சாட்சியம் அளித்தார். ஏற்கனவே நாமக்கல் மாவட்ட ஜேஎம்-2 நீதிமன்றத்தில் சிஆர்பிசி 164ன் கீழ் சுவாதியும், அவருடைய தாயார் செல்வியும் அளித்திருந்த வாக்குமூலத்திற்கு முரணாக பிறழ் சாட்சியம் அளித்ததால், அரசுத்தரப்பு வழக்கறிஞரும், சிபிசிஐடி போலீசாரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

 

செல்வி சாட்சியம் அளித்ததைத் தொடர்ந்து, சுவாதி மற்றும் கோகுல்ராஜ் ஆகியோரின் நண்பரும், கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தவருமான நாமக்கல் மாவட்டம் கலியனூரை சேர்ந்த கார்த்திக்ராஜா, சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டார். அரசுத்தரப்பில் இவர், 6வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

கார்த்திக்ராஜா சாட்சியம்:

 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் மாலை 3.15 மணிக்கு கூடியது. அப்போது ஆஜரான கார்த்திக்ராஜாவிடம் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி விசாரணை நடத்தினார். அதன் சுருக்கமான வடிவம்:

 

கருணாநிதி: நீங்கள் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் எந்த ஆண்டு படித்தீர்கள்?

 

கார்த்திக்ராஜா: 2011 முதல் 2015ம் ஆண்டு வரை பி.இ., படித்தேன்.

 

கருணாநிதி: எப்போது படிப்பை முடித்தீர்கள்?

 

கார்த்திக்ராஜா: 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம்

 

கருணாநிதி: நீங்களும் கோகுல்ராஜூம் நண்பர்களா?

 

கார்த்திக்ராஜா: எங்களுடன் படித்த எல்லோருமே கோகுல்ராஜூக்கும் நண்பர்கள்தான்.

 

கருணாநிதி: 24.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் உங்களுக்கு போன் செய்தாரா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

கருணாநிதி: எத்தனை மணிக்கு போன் செய்தார்?

 

கார்த்திக்ராஜா: அன்று காலை சுமார் 7.30 மணி இருக்கும்

 

கருணாநிதி: கலைச்செல்வன் உங்களிடம் என்ன பேசினார்?

 

கார்த்திக்ராஜா: கோகுல்ராஜ் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றான். அவன் கல்லூரிக்கு வந்தானா அல்லது நண்பர்களை பார்க்க வந்தானா என்று கேட்டார்.

 

கருணாநிதி: அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?

 

கார்த்திக்ராஜா: அதுபற்றி எனக்குத் தெரியாது என்று கூறினேன்.

 

கருணாநிதி: பிறகு என்ன நடந்தது?

 

கார்த்திக்ராஜா: அதன்பிறகு சுவாதிக்கு போன் செய்தேன். அவருடைய போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது

 

கருணாநிதி: சுவாதியின் செல்போன் நம்பர் சொல்ல முடியுமா?

 

கார்த்திக்ராஜா: இப்போது ஞாபகம் இல்லை

 

கருணாநிதி: சுவாதி உங்களை தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லியிருக்கிறீர்கள்…

 

கார்த்திக்ராஜா: கோகுல்ராஜ் எங்கே சென்றான் என்பது குறித்து நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தேன். அதை அறிந்த சுவாதி, தனது தாயார் செல்போனில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

 

கருணாநிதி: சுவாதி உங்களிடம் என்ன சொன்னார்?

 

கார்த்திக்ராஜா: 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜ் சுவாதியிடம் புதிதாக செல்போன் வாங்குவதற்காக ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டதாகவும், பணத்தை திருச்செங்கோட்டில் வந்து பெற்றுக்கொள்வதாகவும் கோகுல்ராஜ் சுவாதியிடம் கூறியதாகவும் சொன்னார்.

 

அதன்படி சுவாதி, திருச்செங்கோடுக்கு சென்று கோகுல்ராஜீக்கு பணத்தைக் கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து இருந்தனர்.

 

அங்கு வந்த ஒருவர், யுவராஜ் கூப்பிடுவதாகச் சொல்லி அழைத்ததன்பேரில் கோகுல்ராஜ் அங்கு சென்று பேசியதாகவும், பின்னர் சுவாதியும் அவர்களிடம் பேசியதாகவும் சொன்னார். அதன்பிறகு சுவாதியை நான்கு பேர் கோயிலுக்குக் கீழே அனுப்பி,

 

அவரை பேருந்தில் இருவர் அழைத்துச் சென்றதாகவும் கூறினார். அப்போது காரில் ஒருவர் வந்தார். அவரிடம் கோகுல்ராஜ் எங்கே என்று கேட்டதற்கு, அவரை மலையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று சுவாதியிடம் கூறியதாக சுவாதி என்னிடம் கூறினார்.

 

கருணாநிதி: இதையெல்லாம் கோகுல்ராஜின் அண்ணனிடம் கூறினீர்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம். சுவாதி என்னிடம் சொன்ன விவரங்களை கலைச்செல்வனிடம் கூறினேன்.

 

கருணாநிதி: அப்போது கலைச்செல்வன், உங்களிடம் சுவாதியின் செல்போன் நம்பரை கேட்டாரா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

கருணாநிதி: அதற்கு நீங்கள், எஸ்எம்எஸ் மூலம் செல்போன் நம்பரை அனுப்புவதாக கூறி, அதன்படி நம்பரை அனுப்பினீர்கள்…

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

கருணாநிதி: கலைச்செல்வன் உங்களையும், சுவாதியையும் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வருமாறு அழைத்தாரா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

கருணாநிதி: பிறகு அங்கே வேண்டாம் என்று திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்திற்கு வரச்சொன்னாரா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

கருணாநிதி: திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் வைத்து 24.6.2015ம் தேதியன்று காலை சுவாதியுடன் கலைச்செல்வன் பேசினாரா? அப்போது எத்தனை மணி இருக்கும்?

கார்த்திக்ராஜா: ஆமாம். அப்போது காலை சுமார் 9.30 மணி இருக்கும்.

 

கருணாநிதி: சுவாதியுடன் கலைச்செல்வன் பேசும்போது உடன் வேறு யார் யார் இருந்தார்கள்?

 

கார்த்திக்ராஜா: கோகுல்ராஜின் உறவினர்கள் இருந்தனர்.

 

கருணாநிதி: அதன்பிறகு நீங்களும், சுவாதியும் கோகுல்ராஜின் உறவினர்களும் திருச்செங்கோடு டவுன் காவல் நிலையத்திற்குச் சென்றீர்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

கருணாநிதி: கோகுல்ராஜ் விவகாரம் குறித்து திருச்செங்கோடு காவல் நிலையத்தில் யார் புகார் அளித்தது?

 

கார்த்திக்ராஜா: கோகுல்ராஜின் தாயார்தான் புகார் அளித்தார்

 

கருணாநிதி: அப்போது எத்தனை மணி இருக்கும்?

 

கார்த்திக்ராஜா: மதியம் சுமார் 1.30 மணி

 

கருணாநிதி: 24.6.2015ம் தேதியன்று மாலை 4.30 மணியளவில் நீங்கள் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் இருக்கும்போது கோகுல்ராஜின் தாயாரின் செல்போனுக்கு ரயில் தண்டவாளத்தில் ஒரு சடலம் கிடப்பதாக தகவல் வந்தது…

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

கருணாநிதி: உங்களிடம் காவல் நிலையத்தில் யாராவது விசாரித்தார்களா?

 

கார்த்திக்ராஜா: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் விசாரித்தார். 24.6.2015ம் தேதியன்று இரவு டிஎஸ்பியும் என்னிடம் விசாரித்தார்

 

கருணாநிதி: சுவாதி உங்களிடம் கூறிய தகவலை ஏற்கனவே நாமக்கல் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் சிஆர்பிசி 164 வாக்குமூலமாக அளித்திருக்கிறீர்கள்…

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

கருணாநிதி: எந்த தேதியில் வாக்குமூலம் அளித்தீர்கள்?

 

கருணாநிதி: அந்த வாக்குமூலத்தில் நீங்கள் ஏதாவது கையெழுத்து போட்டீர்களா?

 

கார்த்திக்ராஜா: வாக்குமூலத்தில் கையெ-ழுத்து போட்டேன்.

 

கருணாநிதி: அதன்பிறகு உங்களிடம் வேறு எந்த போலீசாராவது விசாரித்தார்களா?

 

கார்த்திக்ராஜா: சிபிசிஐடி போலீஸ் எடிஎஸ்பி என்னிடம் விசாரித்தார்.

 

கருணாநிதி: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோர் செல்போன்களை யாரிடம் கொடுத்தார்கள் என்று தெரியுமா?

 

(இப்படி அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேள்வி எ-ழுப்பியபோது, எதிரிகள் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கிட்டு, இது பதிலுடைய வினா (Leading Question) என்று கூறி ஆட்சேபம் தெரிவித்தார்.

 

அதற்கு நீதிபதி கே.ஹெச்.இளவழகன், இந்த வினா, பதிலுடைய வினா அல்ல. இந்த வினா அனுமதிக்கப்படுகிறது என்றார். இதையடுத்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்விக்கு கார்த்திக்ராஜா பதில் அளித்தார்)

 

கார்த்திக்ராஜா: சுவாதியின் செல்போனை மட்டும் அங்கு வந்து விசாரித்தவர் பெற்றுக்கொண்டார். மறுநாள் தருவதாக கூறியதாக சுவாதி என்னிடம் கூறினார்.

 

கருணாநிதி: சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோரை உங்களுக்கு எவ்வளவு காலமாக தெரியும்?

 

கார்த்திக்ராஜா: அவர்கள் இருவரையும் எனக்கு நான்கு, ஐந்து ஆண்டுகளாக தெரியும்

 

கருணாநிதி: சிசிடிவி ஃபுட்டேஜ் காட்சிகளைப் பார்த்தால் உங்களால் அவர்களை அடையாளம் காட்ட இயலுமா?

 

கார்த்திக்ராஜா: இயலும்

 

அடையாளம் காட்டினார்:

 

(இதையடுத்து, 23.6.2015ம் தேதியன்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கோகுல்ராஜும், சுவாதியும் சாமி கும்பிடச் சென்றது, அவர்களிடம் சிலர் பேச்சுக்கொடுப்பது போன்ற காட்சிகள் அடங்கிய சிசிடிவி கேமரா வீடியோ காட்சிகளை புரஜக்டர் மூலம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. சாட்சி கூண்டுக்கு பின்னால் உள்ள சுவரில் இக்காட்சிகள் திரையிடப்பட்டன.

 

கேமரா-1ல், 10.52 நிமிடம் மற்றும் 53, 54, 55, 56வது நொடிகளில் கோயிலின் நுழைவு வாயிலின் இடதுபுறமாக கடை பக்கமாக திரும்பி சென்ற நபர்களில் முதலில் இருந்த ஆண் நபர் கோகுல்ராஜ் என்றும், அவருடன் வந்த பெண் நபர் சுவாதி என்றும் கார்த்திக்ராஜா அடையாளம் காட்டினார்.

 

கேமரா-1ல் 11.58வது நிமிடத்தில் 1 மற்றும் 49வது நொடிகளில் முதலில் கோயிலின் நுழைவு வாயிலின் வழியாக வெளியில் செல்லும் பெண் சுவாதி போல் தெரிகிறது. அதற்குப் பின்னால் கோகுல்ராஜ், சில நபர்களுடன் வெளியே சென்றுவிட்டு மீண்டும் கோயிலுக்கு உள்ளே வருகிறார். அவர்களுடன் உள்ள நபர்கள் யாரென்று எனக்குத் தெரியாது.

 

கேமரா-5ல், 10.55வது நிமிடத்தில் 32வது நொடி, 10.58வது நிமிடத்தில் 58வது நொடி ஆகிய நேரங்களில் வருபவர்கள் சுவாதி மற்றும் கோகுல்ராஜ் போல தெரிகிறது என்று கார்த்திக்ராஜா அடையாளம் காட்டினார்).

 

கருணாநிதி: சிசிடிவி ஃபுட்டேஜில் நீங்கள் அடையாளம் காட்டிய நபர்கள் எல்லா காட்சிகளிலும் ஒரே நிற ஆடைதான் அணிந்திருக்கிறார்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம். ஒரே நிற ஆடையைத்தான் அணிந்துள்ளார்கள்.

 

இவ்வாறு கார்த்திக்ராஜா சாட்சியம் அளித்தார்.

 

இதையடுத்து, யுவராஜ் உள்ளிட்ட 15 எதிரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, கார்த்திக்ராஜாவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

ஜிகே: வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?

 

கார்த்திக்ராஜா: உண்டு

 

ஜிகே: நீங்கள் நன்றாக படிக்கக்கூடியவர்தானா?

 

(அப்போது நீதிபதி கே.ஹெச்.இளவழகன் குறுக்கிட்டு, இந்தக் கேள்வி தேவையா? என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் ஜிகே ஏதோ விளக்கம் அளித்தார். பின்னர் அந்தக் கேள்வியை அனுமதித்தார்)

 

கார்த்திக்ராஜா: நான் நன்றாக படிப்பேன்.

 

ஜிகே: உங்களுடைய அண்ணன் யு.கே.யில் எம்பிஏ முடித்திருக்கிறார்தானே?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: உங்கள் அண்ணனுக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் உள்ளது…

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

ஜிகே: உங்களிடமும் பாஸ்போர்ட், விசா உள்ளது…

 

கார்த்திக்ராஜா: என்னிடம் பாஸ்போர்ட் மட்டும்தான் உள்ளது.

 

ஜிகே: உங்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது…

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: இந்த வழக்கு விசாரணை காலத்தில் நீங்கள் படிப்பை முடித்து விட்டீர்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம். முடித்துவிட்டேன்.

 

ஜிகே: நீங்கள் 24.6.2015ம் தேதியன்று திருச்செங்கோடு டவுன் காவல் நிலையம் சென்றபோது முதலில் உங்களிடம் விசாரித்தது யார்?

 

கார்த்திக்ராஜா: எஸ்ஐ சந்திரகலா என்பவர் என்னிடம் முதலில் விசாரித்தார்.

 

ஜிகே: புகார் கொடுத்த உடனே விசாரித்தார்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: நீங்கள் கூறிய தகவல்களை அவர் ஏதேனும் வாக்குமூலமாக பதிவு செய்தாரா?

 

கார்த்திக்ராஜா: இல்லை

 

ஜிகே: அந்த நேரத்தில் சுவாதியும் திருச்செங்கோடு காவல் நிலையத்தில்தான் இருந்தாரா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்.

 

ஜிகே: சுவாதியுடமும் எஸ்ஐ சந்திரகலா விசாரித்தாரா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: அவருடைய வாக்குமூலத்தை எஸ்ஐ சந்திரகலா பதிவு செய்தாரா?

 

கார்த்திக்ராஜா: இல்லை

 

ஜிகே: எஸ்ஐ சந்திரகலாவிடம் புகார் கொடுக்கப்பட்டதா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்.

 

ஜிகே: அந்த புகாரை அவர் உங்களிடம் படித்துக் காட்டினாரா?

 

கார்த்திக்ராஜா: இல்லை

 

ஜிகே: புகாரில் உங்களிடமோ அல்லது சுவாதியிடமோ கையெழுத்து பெறப்பட்டதா?

 

கார்த்திக்ராஜா: இல்லை

 

ஜிகே: 24.6.2015ம் தேதியன்று திருச்செங்கோடு டவுன் காவல் நிலையத்திற்கு நீங்கள் செல்லும்போது எத்தனை மணி இருக்கும்?

 

கார்த்திக்ராஜா: காலை சுமார் 11.30 மணி இருக்கும்

 

ஜிகே: எவ்வளவு நேரம் அங்கே இருந்தீர்கள்?

 

கார்த்திக்ராஜா: மறுநாள் இரவு வரை காவல் நிலையத்தில்தான் இருந்தேன்

 

ஜிகே: சுவாதியும் மறுநாள் இரவு வரை காவல் நிலையத்தில்தான் இருந்தாரா?

 

கார்த்திக்ராஜா: சுவாதியை போலீசார் பக்கத்தில் அழைத்துச் சென்றனர். சுவாதி காவல் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருந்தார் என்று தெரியாது.

 

ஜிகே: திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சந்தித்த பிறகு, மீண்டும் சுவாதியை எப்போது சந்தித்தீர்கள்?

 

கார்த்திக்ராஜா: சிஆர்பிசி 164 வாக்குமூலம் பதிவு செய்த நாளன்றுதான் சுவாதியை மீண்டும் பார்த்தேன்.

 

ஜிகே: சிஆர்பிசி 164 வாக்குமூலம் அளிக்கும்போது நீங்களும், சுவாதியும் ஒன்றாகத்தான் நீதிமன்றத்தில் இருந்தீர்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: சிஆர்பிசி 164 வாக்குமூலம் அளிப்பதற்காக நாமக்கல் ஜேஎம்&2 நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உங்களுக்கு சம்மன் வந்ததா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: சம்மனை உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தது யார்?

 

கார்த்திக்ராஜா: போலீஸ்காரர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார்.

 

ஜிகே: ஜேஎம்&2 நீதிமன்றத்திற்கு நீங்களே சென்றீர்களா? அல்லது உங்களை யாராவது அழைத்துச் சென்றார்களா?

 

கார்த்திக்ராஜா: நானாகச் செல்லவில்லை. எனக்கு சம்மன் கொண்டு வந்து கொடுத்த போலீஸ்காரர்தான் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.

 

ஜிகே: சுவாதியையும் போலீசார்தான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: எஸ்ஐ சந்திரகலா உங்களிடம் விசாரித்தபிறகு வேறு யாராவது விசாரித்தார்களா?

 

கார்த்திக்ராஜா: இன்ஸ்பெக்டர் சக்கரபாணி விசாரித்தார்

 

ஜிகே: சிஆர்பிசி 164 வாக்குமூலம் பதிவு செய்யும்போது, உங்களிடம் போலீசார் விசாரித்த விவரங்கள் குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: அப்போது, நீதித்துறை நடுவர் உங்களிடம், காவல்துறையில் மீண்டும் உங்களை ஒப்படைக்க மாட்டோம் என்று உறுதி கூறினார்களா?

 

கார்த்திக்ராஜா: அதுபற்றி ஞாபகம் இல்லை.

 

ஜிகே: பாஸ்போர்ட், விசா ஆகியவை போலீசார் விசாரணை நடத்திதான் வழங்கப்படும் என்று உங்களுக்கு தெரியுமா?

 

(அப்போது நீதிபதி கே.ஹெச். இளவழகன் குறுக்கிட்டு, பாஸ்போர்ட்டுக்குதான் போலீசார் விசாரிப்பார்கள். விசாவுக்கு போலீசார் விசாரணை தேவையில்லை என்றார். பிறகு, வழக்கறிஞர் ஜிகே, போலீசார் விசாரணைக்குப் பிறகுதான் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று தெரியுமா? எனக்கேட்டார்)

 

கார்த்திக்ராஜா: தெரியும்

 

ஜிகே: உங்களுக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது. பகுஜன் சமாஜ் கட்சிக்காரர்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்காரர்களும், காவல்துறையினரும் உங்களை மிரட்டியும், உங்களுடைய மற்றும் உங்கள் சகோதரருடைய பாஸ்போர்ட்டையும் முடக்கி விடுவோம் என்று அச்சுறுத்தியும், உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததன்பேரில் நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன்…

 

கார்த்திக்ராஜா: தவறு.

 

ஜிகே: சுவாதி உங்களிடம் எதுவும் சொல்லவில்லை…

 

கார்த்திக்ராஜா: தவறு.

 

ஜிகே: கோகுல்ராஜை காணவில்லை என்று உங்களிடம் முதன்முதலில் விசாரித்தது குமரன் என்ற நபரா?

 

கார்த்திக்ராஜா: ஞாபகம் இல்லை

 

ஜிகே: நீதித்துறை நடுவர் உங்களை விசாரித்தபோது கோகுல்ராஜை காணவில்லை என்று உங்களிடம் முதல்முறை விசாரித்தது குமரன் என்பவர்தான் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்…

 

கார்த்திக்ராஜா: இப்போது ஞாபகம் இல்லை.

 

ஜிகே: கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனை இதற்கு முன்பே தெரியுமா?

 

கார்த்திக்ராஜா: கலைச்செல்வனை பார்த்துள்ளேன். ஆனால் அவருடன் எனக்கு பழக்கம் இல்லை.

 

ஜிகே: குமரன் மற்றும் குமரனின் நண்பர்கள்தான் உங்களை இந்த வழக்கில் சேர்த்துள்ளார்கள்…

 

கார்த்திக்ராஜா: தெரியாது.

 

ஜிகே: உங்களுடன் கல்லூரியில் லதா என்ற நபர் படித்தாரா?

 

கார்த்திக்ராஜா: தெரியாது.

 

ஜிகே: லதாவை உங்களுக்கு நன்றாக தெரியும்…

 

கார்த்திக்ராஜா: தவறு

 

ஜிகே: சம்பவத்திற்கு முன்பே கலைச்செல்வனுடன் உங்களுக்கு நல்ல தொடர்பு இருந்தது…

 

கார்த்திக்ராஜா: கலைச்செல்வன் என்னை அழைத்தது 24.6.2015ம் தேதிதான். அதற்கு முன்பாக கலைச்செல்வனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது.

 

ஜிகே: கலைச்செல்வன் பற்றி காவல்துறையினரிடம் என்ன கூறினீர்கள்?

 

கார்த்திக்ராஜா: கோகுல்ராஜ் குறித்து கலைச்செல்வன் போன் மூலம் கேட்டார் என்று கூறியுள்ளேன்.

 

ஜிகே: நீங்கள்தான் கோகுல்ராஜ் பற்றி கலைச்செல்வனிடம் கேட்டீர்கள் என்று காவல்துறையில் கூறியிருக்கிறீர்கள்…

 

கார்த்திக்ராஜா: இல்லை

 

ஜிகே: உங்களை காவல்துறையினர் விசாரித்தபோதும், சிஆர்பிசி 164 சாட்சியத்திலும் நீங்கள், ‘24.6.2015ம் தேதியன்று காலை 7.30 மணிக்கு கோகுல்ராஜின் மூத்த சகோதரர் கலைச்செல்வன் எனக்கு போன் செய்து, கோகுல்ராஜ் கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு வந்தான். கோகுல்ராஜ் கல்லூரிக்கு வந்தானா இல்லை நண்பர்களை பார்க்க சென்றுவிட்டானா என்று என்னிடம் கேட்டார்,’ என்றும்,

 

அதற்கு நான் ‘எனக்குத் தெரியவில்லை’ என்றும், அதன்பிறகு சுவாதிக்கு போன் செய்து பார்த்தபோது அவர் நம்பர் சுவிட்ச் ஆப் என்று வந்தது என்றும், சுவாதியின் செல்போன் நம்பர் தற்போது ஞாபகம் இல்லை என்றும், நான் நண்பர்களிடம் கோகுல்ராஜை பற்றி கேட்டுக் கொண்டிருந்ததை அறிந்த சுவாதி தன் தாயார் செல்போனில் இருந்து எனக்கு போன் செய்தார் என்றும் கூறியுள்ளீர்களா?

 

கார்த்திக்ராஜா: கூறியுள்ளேன்.

 

ஜிகே: உங்களை காவல்துறையினர் விசாரித்தபோதும், சிஆர்பிசி 164 சாட்சியத்திலும், ‘இருவரும் மேற்படி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து இருந்தபோது,’ என்று கூறியுள்ளீர்களா?

 

கார்த்திக்ராஜா: கூறியுள்ளேன்.

 

ஜிகே: திண்ணைக்கும் பிரகாரத்திற்கும் வித்தியாசம் தெரியுமா?

 

கார்த்திக்ராஜா: தெரியும்

 

ஜிகே: உங்களை காவல்துறையினர் விசாரித்தபோதும், சிஆர்பிசி 164 சாட்சியத்திலும், Ôநான் மேற்சொன்ன விவரத்தை கலை ச்செல்வனிடம் போன் செய்து கூறினேன் என்றும், அதற்கு கலைச்செல்வன் சுவாதியின் செல்போன் நம்பரை கேட்டார் என்றும் நான் சுவாதியின் நம்பரை எஸ்எம்எஸ் மூலம் கலைச்செல்வனுக்கு அனுப்பி வைத்தேன் என்றும் கூறினீர்களா?

 

கார்த்திக்ராஜா: போன் நம்பர் கொடுத்தேன். எஸ்எம்எஸ் அனுப்பியதாக கூறவில்லை.

 

ஜிகே: நீங்கள் காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்றபோது உங்களுடைய செல்போனை காவல்துறையினர் எப்போதாவது எடுத்து பார்த்தார்களா?

 

கார்த்திக்ராஜா: இல்லை.

 

ஜிகே: உங்களுடைய செல்போன் நம்பரை காவல்துறையினர் வாங்கிக் கொண்டார்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: நீங்கள் படித்த படிப்பு எத்தனை ஆண்டுகள் கொண்டது?

 

கார்த்திக்ராஜா: நான்கு வருட படிப்பு.

 

ஜிகே: கோகுல்ராஜை உங்களுக்கு எப்படி தெரியும்?

 

கார்த்திக்ராஜா: கல்லூரியில் என்னுடன் படித்த நபர் என்ற முறையில் கோகுல்ராஜை எனக்குத் தெரியும்.

 

ஜிகே: உங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் உண்டா?

 

கார்த்திக்ராஜா: உண்டு

 

ஜிகே: நீங்கள் இருவரும் சேர்ந்து எங்காவது சென்றதுண்டா?

 

கார்த்திக்ராஜா: நானும் கோகுல்ராஜும் ஒன்றாக இண்டர்வியூக்குப் போயிருக்கிறோம்.

 

ஜிகே: நீங்கள் கோகுல்ராஜின் வீட்டிற்குச் சென்றிருக்கிறீர்களா?

 

கார்த்திக்ராஜா: சென்றுள்ளேன்.

 

ஜிகே: தினேஷ், வைத்தியலிங்கம், விக்கி ஆகியோரை தெரியுமா?

 

கார்த்திக்ராஜா: பார்த்திருக்கிறேன். அவர்களும் கோகுல்ராஜின் நண்பர்கள்தான்.

 

ஜிகே: உங்களையும் தினேஷ், வைத்தியலிங்கம், விக்கி ஆகியோரையும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை என்று கூறி, காவல் நிலையத்தில் வைத்திருந்தார்கள்…

 

கார்த்திக்ராஜா: தவறு.

 

ஜிகே: நீங்கள் 24.6.2015ம் தேதி திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் கலைச்செல்வனை சந்தித்தபோது, அங்கு கோகுல்ராஜின் உறவினர்கள் இருந்தார்களா?

 

கார்த்திக்ராஜா: இருந்தார்கள்

 

ஜிகே: காவல்நிலையத்திற்கு சென்றபோது அங்கும் கோகுல்ராஜின் உறவினர்கள் இருந்தார்களா?

 

கார்த்திக்ராஜா: இருந்தார்கள்

 

ஜிகே: கோகுல்ராஜ் இறந்தது தொடர்பாக அப்போது போராட்டங்கள் நடந்தன என்பது தெரியுமா?

 

கார்த்திக்ராஜா: தெரியும்

 

ஜிகே: அந்த போராட்டங்களில் நீங்களும் கலந்து கொண்டீர்களா?

 

கார்த்திக்ராஜா: இல்லை

 

ஜிகே: கோகுல்ராஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை மிரட்டியதால் நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்கள்…

 

கார்த்திக்ராஜா: தவறு

 

ஜிகே: சுவாதியின் தாயாருக்கு நீங்கள்தான் போன் செய்து காவல் நிலையத்திற்கு வரச்சொன்னீர்களா?

 

கார்த்திக்ராஜா: இல்லை.

 

ஜிகே: காவல்துறையினர் விசாரணையில் சுவாதியின் தாயாருக்கு நீங்கள் போன் செய்ததாக சொல்லி இருக்கிறீர்கள்…

 

கார்த்திக்ராஜா: இல்லை

 

ஜிகே: சிசிடிவி ஃபுட்டேஜை இந்த நீதிமன்றத்தில்தான் முதன்முதலில் பார்க்கிறீர்களா? இல்லை, இதற்கு முன்பே பார்த்திருக்கிறீர்களா?

 

கார்த்திக்ராஜா: இப்போது நீதிமன்றத்தில்தான் முதன்முதலில் பார்க்கிறேன்.

 

ஜிகே: போலீசார் உங்களிடம் கோகுல்ராஜ், சுவாதி ஆகியோரின் புகைப்படங்களை உங்களுக்கு காட்டினார்களா?

 

கார்த்திக்ராஜா: ஆமாம்

 

ஜிகே: புகைப்படங்களை காவல் உதவி ஆய்வாளர் காண்பித்தாரா அல்லது ஆய்வாளர் காண்பித்தாரா?

 

கார்த்திக்ராஜா: தெரியவில்லை.

 

ஜிகே: சிசிடிவி ஃபுட்டேஜில் வரும் நபர்களை அடையாளம் காண்பிக்கும் அளவிற்கு தெளிவாக இல்லை. என்றாலும், போலீசார் உங்களிடம் புகைப்படங்ளை காண்பித்து, சொல்லிக்கொடுத்ததன் பேரில் நீங்கள் சிசிடிவி ஃபுட்டேஜில் வரும் நபர்களை அடையாளம் காண்பித்துள்ளீர்கள் என்கிறேன்…

 

கார்த்திக்ராஜா: தவறு.

 

ஜிகே: சிசிடிவி ஃபுட்டேஜில் நீங்கள் அடையாளம் காண்பித்த நபர்கள் கோகுல்ராஜும், சுவாதியும் இல்லை என்று நான் சொல்கிறேன்…

 

கார்த்திக்ராஜா: தவறு.

 

இவ்வாறு கார்த்திக்ராஜாவிடம் குறுக்கு விசாரணை நடந்தது. குறுக்கு விசாரணை மாலை 4.45 மணிக்கு முடிந்தது.

 

அதன் பிறகு, சம்பவத்தன்று ஈரோடு ரயில் நிலைய அலுவலராக இருந்த கதிரேசன், லோகோ பைலட் வடிவேல், உதவி பைலட் முனுசாமி, கோகுல்ராஜ் படித்த கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகிய சாட்சிகளிடமும் விசாரணை, குறுக்கு விசாரணை நடந்தது.

 

இதையடுத்து சாட்சிகள் விசாரணை வரும் அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச்.இளவழகன் உத்தரவிட்டார்.

 

முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ் சாட்சியம் அளித்ததால் சோர்வு அடைந்திருந்த அரசுத்தரப்பினர், மற்றொரு முக்கிய சாட்சியான கார்த்திக்ராஜா சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்து சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோரை அடையாளம் காட்டியதால் அரசுத்தரப்பு வழக்கறிஞரும், சிபிசிஐடி போலீசாரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

– பேனாக்காரன்

 

இந்த வழக்கின் முந்தைய செய்திகளை படிக்க கீழே உள்ளவற்றை சொடுக்கவும்…

#day1           #day2         #day3          #day4        #day5           #day6