Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஓசூரில் புதன்கிழமை (ஜன. 5) கைது செய்யப்பட்டார்.

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது
பால்வளத்துறை அமைச்சராக
இருந்தவர் ராஜேந்திரபாலாஜி.
தனது பதவிக்காலத்தில், ஆவின்
நிறுவனத்தில் வேலை வாங்கித்
தருவதாக பலரிடம் பணம் வசூலித்துக்
கொண்டு 3.10 கோடி ரூபாய் வரை
மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பின.

 

இது தொடர்பான இரு வேறு
புகார்களின் பேரில், ராஜேந்திரபாலாஜி
மற்றும் அவருடைய உதவியாளர்கள்
முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய
நான்கு பேர் மீதும் விருதுநகர் குற்றப்பிரிவு
காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட
5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இதையடுத்து ராஜேந்திரபாலாஜி,
முன்ஜாமின் கேட்டு மதுரை
உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அவருடைய மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து,
திடீரென்று அவர் தலைமறைவானார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு,
கேரளா ஆகிய இடங்களில் தனக்கு
நெருக்கமான நண்பர்கள் வீடுகளில்
தலைமறைவாக இருந்தார்.
செல்போன் எண்களையும் அடிக்கடி
மாற்றிக் கொண்டே இருந்ததால்
அவரை பின்தொடர்வதில்
காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது.

 

இதற்கிடையே, டெல்லியில்
பாஜக பிரமுகர் ஒருவரிடம்
அடைக்கலமாகி விட்டதாகவும்
தகவல்கள் பரவின. இதையடுத்து,
அவரை சைபர் கிரைம் காவல்துறையினர்,
தனிப்படை காவல்துறையினர்
தீவிரமாக கண்காணித்தனர்.

 

இந்நிலையில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்
ஓரிடத்தில் பதுங்கி இருப்பதாக
கிடைத்த ரகசிய தகவலின்பேரில்
தனிப்படை காவல்துறையினர்
அவரை புதன்கிழமை (ஜன. 5) கைது செய்தனர்.
விரைவில் அவரை விருதுநகருக்கு
அழைத்துச்சென்று காவல்துறையினர்
விசாரணை நடத்த உள்ளனர்.

 

மோசடி புகாரில் ஏற்கனவே திருப்பத்தூரில் கைதான அதிமுக பிரமுகர்கள் இருவர் அளித்த தகவல்கள்தான், ராஜேந்திரபாலாஜியை சுற்றி வளைத்துப் பிடிக்க பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை (ஜன. 6) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.