Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வெல்லம் உருகி ஊத்துது… மிளகு சப்ளை இல்ல… தொடரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு குளறுபடி!

உருகி ஓடும் வெல்லம், தரமற்ற மளிகைப் பொருள்கள், தருவதாகச் சொல்லப்பட்ட துணிப்பை இல்லாதது என ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி,
தமிழக அரசு அரிசி பெறக்கூடிய
2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும்
திட்டத்தை ஜன. 4ம் தேதி தொடங்கியது.
1200 கோடி ரூபாயில் இத்திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

 

பச்சை அரிசி (ஒரு கிலோ),
வெல்லம் (ஒரு கிலோ),
முந்திரி (50 கிராம்),
உலர் திராட்சை (50 கிராம்),
ஏலக்காய் (10 கிராம்),
பாசிப்பருப்பு (500 கிராம்),
ஆவின் நெய் (100 கிராம்),
மஞ்சள்தூள் (100 கிராம்),
மிளகாய்த்தூள் (100 கிராம்),
மல்லித்தூள் (100 கிராம்),
கடுகு (100 கிராம்),
சீரகம் (100 கிராம்), மிளகு (50 கிராம்),
புளி (200 கிராம்), கடலைப்பருப்பு
(250 கிராம்), உளுந்தம் பருப்பு (500 கிராம்),
ரவை (ஒரு கிலோ), கோதுமை மாவு (ஒரு கிலோ),
உப்பு (500 கிராம்), துணிப்பை (ஒன்று),
முழு கரும்பு (ஒன்று) ஆகிய 21 பொருள்கள்
கொண்ட பரிசத்தொகுப்பாக
வழங்கப்பட்டு வருகிறது.

 

பொங்கல் பரிசுத்தொகுப்புடன்
வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்ட துணிப்பை,
குறிப்பிட்ட காலத்திற்குள் தயார் செய்ய
இயலாததால் கடைகளுக்கு விநியோகம்
செய்யப்படுவதில் தொடர்ந்து
நெருக்கடி நிலவுகிறது. துணிப்பைகள்
தைத்துக் கொடுக்கும் ஒப்பந்தம்,
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது. ஒரு பை தைக்க,
ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 32 ரூபாய்
ஒதுக்கப்பட்டு உள்ளது. துணிப்பை
இல்லாததால் பல இடங்களில்
ரேஷன் கார்டுதாரர்கள் வெறுங்கையுடன்
ரேஷன் கடைக்கு சென்று,
பொங்கல் பரிசுத்தொகுப்பைப்
பெற்றுச்செல்ல முடியாமல் ஏமாற்றம்
அடைந்தனர். பின்னர் வீட்டில்
இருந்து பை எடுத்து வந்து
பரிசுத்தொகுப்பைப் பெற்றுச்சென்றனர்.

 

பொங்கல் பரிசுத்தொகுப்பில்
ஏதேனும் குறைகள் இருந்தால் புகார்
தெரிவிக்கலாம் என அமைச்சர்
சக்கரபாணி ஒரு டோல்ப்ரீ எண்
வெளியிட்டார். அந்த எண்ணும்,
உபயோகத்தில் இல்லை என்று
வந்ததாகச் சொல்கிறார்கள்
கார்டுதாரர்கள்.

 

இது ஒருபுறம் இருக்க,
பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு
இன்னும் 40 சதவீத கார்டுதாரர்களுக்குத்
தேவையான வெல்லம், மிளகு உள்ளிட்ட
பொருள்கள் அனுப்பி வைக்கப்படவில்லை
என்ற புகார்கள் கிளம்பியுள்ளன.
இதனால் பல இடங்களில் பொங்கல்
பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படாமல்
ரேஷன் கடைகள் திடீரென்று
மூடப்பட்ட சம்பவங்களும்
நடந்துள்ளன.

 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை,
முழுநேர ரேஷன் கடைகள் 848,
பகுதி நேர கடைகள் 373 என
மொத்தம் 1221 ரேஷன் கடைகள்
இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம்
அரிசி பெறக்கூடியவர்கள் 10.50 லட்சம்
கார்டுதாரர்கள் உள்ளனர்.

 

ஆயிரம் கார்டுகளுக்கு மேல் கொண்ட
ரேஷன் கடைகளில், கடந்த 4ம் தேதி முதல்
இதுவரை 50 சதவீதம் பேருக்கு மட்டுமே
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு
உள்ளதாகச் சொல்கிறார்கள்
கூட்டுறவுத்துறை ஊழியர்கள்.

பரிசுத்தொகுப்புக்காக கடைகளுக்கு
அனுப்பி வைக்கப்பட்ட வெல்லம்,
பல இடங்களில் வெப்பம் தாங்காமல்
உருகி ஓடுவதாகவும், ரவை, கடலைப்பருப்பு
உள்ளிட்ட மளிகை பொருள்கள்
தரமற்று உள்ளதாகவும்
புகார்கள் எழுந்துள்ளன.

 

சேலம் மாவட்டம் சித்தனூர் அருகே
தளவாய்ப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில்
(கடை எண்.: ஏசி 045) 1200 கார்டுதாரர்கள்
உள்ளனர். இந்த கடைக்கு இன்னும்
400 கார்டுகளுக்குத் தேவையான
மண்டை வெல்லம் அனுப்பி வைக்கப்படாததால்,
பரிசுத்தொகுப்பை விநியோகம் செய்யவில்லை.
இதனால், ஜன. 8ம் தேதி திடீரென்று
அந்த ரேஷன் கடை மூடப்பட்டது. கடையின் முகப்பில்,
‘ரேஷன் விற்பனையாளர் மளிகை
பொருள்களை எடுத்து வர குடோனுக்குச்
சென்றதால் இன்று விற்பனை இல்லை.
விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்’
என்று சாக்பீஸில் எழுதப்பட்டு உள்ளது.
இதையறியாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு
வாங்க வந்த கார்டுதாரர்கள் கடை
மூடப்பட்டதைப் பார்த்து ஏமாற்றத்துடன்
வீடு திரும்பினர்.

சேலம் பொன்னம்மாபேட்டையில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கு பரிசுத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள மிளகு (50 கிராம்) இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிகளிலும் பரிசுத்தொகுப்பு விநியோகம் முடங்கியுள்ளது.

 

இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் நம்மிடம் பேசினர்.

 

”பொங்கல் பரிசுத்தொகுப்பை தயார்
செய்வதற்கு போதிய அவகாசம்
இல்லாததால் கிடங்குகளில் இருந்து
ரேஷன் கடைகளுக்கு பொருள்களை
அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
பரிசுத்தொகுப்பில் மளிகை பொருள்களை
பொட்டலம் தயார் செய்து போடும்
பணிகளையும் இரவோடு இரவாக
செய்து வருகிறோம்.

 

பரிசுத்தொகுப்புடன் தருவதாகச்
சொல்லப்பட்ட துணிப்பையும்
முழுமையாக சப்ளை செய்யப்படவில்லை.
கடைகளுக்கு எப்போது சப்ளை செய்யப்பட்டாலும்,
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்
துணிப்பை வழங்கப்பட்டு விடும்
என்பதை சொல்லி இருக்கிறோம்.

 

மண்டை வெல்லம் அச்சில் ஊற்றி
எடுத்த பிறகு, அதை உலர்த்த வேண்டும்.
ஆனால் அவசரகதியில் அச்சில்
ஊற்றப்பட்ட உடனேயே ரேஷன்
கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால்
வெப்பத்தில் உருகி விடுகின்றன.
கடைசியில் கார்டுதாரர்களின் ஏச்சுக்கும்
பேச்சுக்கும் ரேஷன் ஊழியர்கள்தான்
ஆளாக நேரிடுகிறது.

 

தமிழக அரசு அறிவித்துள்ளதுபோல
எல்லோருக்கும் 6 அடி நீள கரும்பு கொடுப்பது
நடைமுறையில் சாத்தியமில்லை.
சப்ளை செய்யப்பட்ட கரும்பிலேயே
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 

ரேஷன் ஊழியர்களையும் முன்கள
பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்
என்று அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.
இந்த நேரத்தில் எங்கள் கோரிக்கையையும் அரசு
கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்கிறார்கள்
ரேஷன் கடை பணியாளர்கள்.

 

இது தொடர்பாக சேலம் மாவட்ட
நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்
சிவக்குமாரிடம் கேட்டபோது, ”பொங்கல்
பரிசுத்தொகுப்பில் எந்தெந்த பொருள்கள்
தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததோ அவற்றை
எல்லாம் கடைகளுக்கு அனுப்பி
வைக்கும் பணிகள், இந்த லாக்டவுன்
நேரத்திலும் கூட நடந்து வருகின்றன.
திங்கள்கிழமை முதல் எல்லா கடைகளிலும்
பொங்கல் பரிசுத்தொகுப்பு
தடையின்றி வழங்கப்படும்,” என்றார்.

 

இதற்கிடையே, பொங்கல் பரிசுத்தொகுப்பு பதிலாக 500 ரூபாய் ரொக்கமும், எப்போதும் போல கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட 130 ரூபாய் மதிப்பிலான பொருள்களை இலவசமாகவும் கொடுத்திருந்தாலே கூட ரேஷன் கடைகளில் கூட்டத்தையும், வேலைப்பளுவையும் தவிர்த்திருக்க முடியும் என கார்டுதாரர்கள் தங்கள் எதிர்பார்ப்பையும் கூறுகின்றனர்.

 

– பேனாக்காரன்