Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தால் தண்டனை!”; எங்கே தெரியுமா?

சம வேலைக்கு சம ஊதியமே தர மாட்டேங்கிறார்கள் என்ற புலம்பல்கள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு குறைவாக ஊதியம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தடாலடியாக சட்டம் கொண்டு வந்திருக்கிறது ஐஸ்லாந்து.

ஆண், பெண் பாலின சமத்துவத்தில் ஆசிய நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகள் எப்போதும் ஒரு படி மேலேதான் இருக்கிறது எனலாம். அட, நம்ம இந்தியாவில் ஆண்கள் செய்யும் அதே வேலையை பெண்கள் செய்தாலும்கூட, ஆண்களுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு சம்பளமே கொடுக்கப்படுவது இல்லை. ஆண்கள் பெறும் ஊதியத்தில் 60 முதல் 70 விழுக்காடுதான் பெண்களின் ஊதியமாக இருக்கிறது. இத்தனைக்கும் நம்ம நாட்டு மக்கள்தொகையில் சரிபாதி பெண்கள்.

இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதுமே பெண்கள் எல்லா இடங்களிலும் பாலின பாகுபாட்டை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளிலும் இந்த பிரச்னை இருக்கு. ஆனாலும், ஆசிய கண்டம் அளவுக்கு மோசமில்லை.

இந்த மாதிரியான பாலின பாகுபாட்டை கொஞ்சம்கூட ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் சகித்துக் கொள்வதில்லை. பாலின சமத்துவம், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு அந்த நாட்டின் உழைக்கும் பெண்களும் பலகட்டமாக போராடினர். பின்னே, சும்மா வருவாளா சுகுமாரி? ஆனால், நம்ம ஊரில் சம்பள உயர்வு பேரம் படியவில்லை என்றதும் ராவோடு ராவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பஸ் ஊழியர்கள் போல் அல்ல அவர்களின் போராட்டம்.

அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே நேரத்தில், அதாவது பணியை முடிப்பதற்கு 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் 30 சதவீத பெண்கள் திரண்டனர். மற்றவர்கள் அவர்களின் பணிகளைக் கவனித்தனர். இப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசின் கவனத்தை ஈர்த்தனர். வேறு வழியின்றி அரசும் இறங்கி வந்துதானே ஆக வேண்டும்? வந்தது.

கடந்த 2017, மார்ச் மாதம் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகம் சம்பளம் கொடுப்பதை தண்டனைக்குரிய குற்றம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. கடந்த 1.1.2018ம் தேதி முதல் அந்த சட்டத்தை அமலுக்கும் கொண்டு வந்து, புத்தாண்டு கொண்டாட்டத்தை உண்மையிலேயே அர்த்தம் உள்ளதாக்கியிருக்கிறது. இப்படி ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பது இப்போதைக்கு உலகிலேயே ஐஸ்லாந்து நாடு மட்டும்தான்.

இச்சட்டத்தின்படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் பெண்களுக்கும், ஆண்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்குகிறோம் என்ற உறுதிச்சான்றிதழை அரசிடமிருந்து பெற வேண்டும். இல்லையெனில், அந்நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த சட்டத்திற்கு அந்த நாட்டில் ஏகோபித்த வரவேற்பு.

குடிமக்களின் தேவைகளை அறிந்து தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதும், அவர்களின் துயரங்களிலும் பங்கெடுப்பதும்தான் நல்ல அரசியல் தலைவனுக்கான இலக்கணம். அதை ஐஸ்லாந்து நாட்டின் தலைவர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். ஸ்ஸ்ஸ்……இந்தியாவைப் பற்றி இப்போது எதற்கு பேசுவானேன்?

பாலின சமத்துவம் குறித்த உலக பொருளாதார அமைப்பின் தரவுகள்படி, கடந்த 9 ஆண்டுகளாக ஆண்-பெண் பாலின சமத்துவத்தில் ஐஸ்லாந்து சிறந்து விளங்குகிறது. அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டுக்குள் ஆண், பெண்ணுக்கிடையே நிலவும் ஊதிய வேறுபாட்டை களைய ஐஸ்லாந்து அரசு உறுதிகொண்டுள்ளது.

அது சரி…பாலின சமத்துவத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்? மொத்தம் 144 நாடுகளில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டது. அதில் 139வது இடம், இந்தியாவுக்குத்தான்.