சினிமாவில் மட்டுமில்லாமல் தனது சொந்த வாழ்க்கையில் ரஜினிகாந்த் பேசிய பேச்சும் இப்போது டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி, விஜய், அஜீத், கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரையும் நெட்டிஸன்கள் கிண்டலடித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றதுடன், ஆன்மிக அரசியல்தான் தனது கொள்கை என்றும் அறிவித்தார். அப்போது பேசுகையில், ”திடீரென்று ஒரு டிவி கேமராமேன் என்னிடம் வந்து உங்க கட்சியின் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு,” என்று பேசினார்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஜினிகாந்த் சொன்ன, ‘ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு’ என்ற பேச்சுதான் இன்று இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. ‘#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு’ என்ற பெயரில் ஹேஸ்டேக் செய்துள்ளனர்.
வழக்கமாக ரஜினி படங்களில் வரும் அவருடைய பஞ்ச் வசனங்கள் மட்டுமே சமூக ஊடகங்களில் பெரிதாக ஹேஷ்டேக் செய்யப்படுவது உண்டு. இந்நிலையில், அவருடைய சொந்த வாழ்க்கையில் பேசிய பேச்சும்கூட, இன்று டிரெண்டிங் ஆகி ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வாழ்வில் எந்தெந்த தருணங்களில் எல்லாம் தங்களுக்கு ‘ஒரு நிமிஷம் தலை சுத்தியது’ என்ற அனுபவங்களை கேலியாகவும், தமாஷாகவும் ‘மீம்’கள் மூலம் பதிவிட்டுள்ளனர். விஜய், அஜீத் ரசிகர்கள் வழக்கம்போல் இந்த வசனத்தை வைத்தும் மாறி மாறி கேலியாக விமர்சனம் செய்து மீம்களை பதிவிட்டுள்ளனர்.
அண்மையில் யூ டியூபில் வெளியாகி பெரும் கவனத்தைப் பெற்ற ‘லட்சுமி’ என்ற குறும்படத்தில், நாயகி பேசும் வசனங்களை வைத்தும் பலர் ரஜினி, அவருடைய மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷ் ஆகியோரையும் கிண்டல் செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
உலக மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் பரத நாட்டியம் ஆடினார். கவிஞர் வைரமுத்துவின் பாடலுக்கு அவர் பரதம் ஆடினார். ஆனால், அவருடைய நடனம் பரதக்கலையின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கவில்லை என்றும், கலையை கேவலப்படுததி விட்டதாகவும் அப்போது விமர்சனங்கள் கிளம்பின.
அதை உணர்த்தும் வகையில், ரஜினிகாந்த் தனது கட்சியின் தொடக்க விழாவன்று ஐஸ்வர்யா நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன், ‘ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு’ என்று ரஜினியே நினைப்பதுபோல் கிண்டலடித்துள்ளனர்.
மற்றொருவர், இன்று நடந்து வரும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை மையப்படுத்தி, அதற்கு ரஜினியிடம் சென்று, ”நீங்களும் முன்னாள் கண்டக்டர்தானே. எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்,” என்று கேட்பதுபோலவும், அதை நினைத்து ரஜினிக்கு ‘ஒரு நிமிஷம் தலைச்சுத்திருச்சு’ என்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.
ரசிகர் மன்றங்களை புதுப்பிப்பது, புதிய உறுப்பினர்களை மன்றத்தில் சேர்ப்பதற்கு வசதியாக ரஜினி மன்றம் என்ற பெயரில் புதிததாக செயலி ஒன்றை ரஜினிகாந்த் கடந்த 1ம் தேதி தொடங்கினார். அதில் இதுவரை 50 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது.
அதே நாளில், மற்றொரு நாளிதழில் ரஜினி மன்றம் செயலிக்கு போதிய வரவேற்பு இல்லை என்றும் செய்தி வெளியானது. இதை குறிப்பிடும் வகையில், ‘சிஸ்டம் சரியில்லை’ என்று ரஜினி புலம்புவது போலவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒரு குறும்புக்கார பதிவர், ”வைகோ தனது கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விட்டால் என்று யோசிக்கும்போதே எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு” என்று ரஜினி தன்னைத்தானே நொந்து கொள்வதுபோலவும் கிண்டலடித்துள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர், நடிகை ஹன்சிகாவுடன் விளம்பரங்களில் நடிப்பதை பார்க்கும்போது தனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவர், ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஒருவர், ‘இப்போலாம் எங்கே போனாலும் லஞ்சம் கேட்கிறார்கள்’ என்று புலம்புவைத் கேட்டு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர், மனைவி புதிதாக ஒரு ரெசிபி சமைத்திருப்பதை கேட்டபோதும், தனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி என்றும் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் கூறிய ஆன்மிக அரசியல் குறித்தும் அரசியல் வெளியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இப்போது அவருடைய பேச்சையும் கிண்டலடித்திருப்பது அவருடைய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.