Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

”அய்யோ… இப்ப வரைக்கும்
எங்களுக்கு அந்த படபடப்பும்
பயமும் போகலைங்க.
ஈரக்குலையெல்லாம் நடுங்கிப்
போச்சுங்க சார். சம்பவம்
நடந்து மூணு நாளாச்சு.
உங்ககிட்ட பேசும்போதுகூட
எங்க முகமெல்லாம் குப்புனு
வேர்த்துப் போச்சு பாருங்க…,”
என கொஞ்சமும் பதற்றம்
தணியாமல் பேசினர்,
பாலப்பாளையம் கிராம மக்கள்.
நாமக்கல் மாவட்டம்
ஆண்டகளூர் கேட்டில் இருந்து
திருச்செங்கோடு சாலையில்
இருக்கிறது, இந்த கிராமம்.

கோடீஸ்வரன் மற்றும் பெற்றோர்

பாலப்பாளையம் உப்பிலிய நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன், மதியழகன். திருமணமாகி விட்டது. பெரம்பலூரில் அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இரண்டாவது மகன், கோடீஸ்வரன் (31). எம்.எஸ்சி., பி.எட்., கணிதம் படித்திருக்கிறார். பெற்றோருக்கு எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும், மகன்களை படித்து ஆளாக்கியுள்ளனர்.

 

கோடீஸ்வரனும்,
எப்படியாவது அரசுப்பள்ளி
ஆசிரியராகி விட வேண்டும்.
அல்லது, ஏதாவது ஒரு
அரசு உத்தியோகத்தில்
சேர்ந்து விட வேண்டும் என
ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.
இதற்காக மதுரையில் உள்ள
ஒரு தனியார் போட்டித்தேர்வு
பயிற்சி மையத்தில் மூன்று
மாதங்கள் படித்து வந்துள்ளார்.
எல்லாம் சரியாக போய்க்
கொண்டிருந்த நேரத்தில்தான்,
பெற்றோரும் ஊர்க்காரர்களும்
கொஞ்சமும் எதிர்பாராத
ஒரு சம்பவம் ஆக. 7, 2020ம்
தேதி அரங்கேறியுள்ளது.

 

அன்று பகல் 12.30 மணியளவில்,
திடீரென்று வீட்டில் இருந்து
கொடுவாளுடன் கிளம்பிய
கோடீஸ்வரன், தன்னுடைய
வீட்டுக்கு அருகே வசித்து வந்த
அவருடைய பெரியப்பாவான
பெரியண்ணன் (70) என்பவரை
மண்டையில் ஒரே போடாக
போட்டு வெட்டிக் கொன்றார்.
அடுத்ததாக, தெரு முனையில்
நடந்து சென்ற தனது அத்தை
லட்சுமியை (65) தலை, கழுத்து
ஆகிய இடங்களில் சரமாரியாக
வெட்டினார். லட்சுமி
நிகழ்விடத்திலேயே இறந்தார்.
பெரியண்ணன், சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.
அதன்பிறகும் கோடீஸ்வரனுக்கு
வெறித்தனம் அடங்கவில்லை.
கண்ணில் எதிர்ப்பட்டவர்களை
எல்லாம் வெட்டுவதற்காக
துரத்த ஆரம்பித்தார் என்கிறார்கள்
ஊர்க்காரர்கள்.

கொலையுண்டவர்கள்…

இச்சம்பவம் நடந்த
மூன்றாவது நாளில்
ஆக. 10ம் தேதி நாம்
பாலப்பாளையத்தில் நேரில்
விசாரித்தோம். பதினைந்து
வீடுகள் கொண்ட ஒரு
குறுகலான தெரு. எல்லாருமே
நாயக்கர் சமூகத்தினர்தான்.
சொல்லி வைத்தாற்போல்
எல்லாருமே கட்டடத்
தொழிலாளிகளும்கூட.

 

கோடீஸ்வரன் வீட்டுக்கு
எதிரில் உள்ள ஒரு சந்தில்
வசிக்கும் தெய்வாணை (61),
”அவன், கொடுவாளோட வெறித்தனமா
வீட்டுல இருந்து கிளம்பி பக்கத்துல
பெரியண்ணன் வீட்டுக்குள்ள
நுழையறத ஜன்னல் வழியாக
பார்த்துட்டேன். செத்த நேரத்துல
ரத்தம் படிஞ்ச கொடுவாளோட
ஆவேசமா வந்த அவன்,
என்னைப் பார்த்ததும் ‘திடுதிடு’னு
என்னையும் வெட்ட வந்தான்.
நான் சுதாரிச்சிக்கிட்டு
வாசலுக்கு வந்து கதவை
உள்பக்கமாக சாத்திக்கிட்டேன்.
கோடீஸ்வரன் ஆவேசமாக
கதவை கொடுவாளால் பலமுறை
வெட்டிட்டு ஓடிப்போய்ட்டான்.
அன்னிக்கு சிக்கியிருந்தா
இன்னிக்கு உங்ககிட்ட பேசிட்டு
இருந்திருக்க மாட்டேன்…,”
என்றார் பதற்றத்துடன்.

 

தெய்வாணையை துரத்திக்கொண்டு
சந்துப்பக்கம் போனதைப்
பார்த்ததும் தெருவில் இருக்கும்
மற்றவர்கள் அச்சத்தில் வீட்டுக்குள்
நுழைந்து கதவை தாழிட்டுக்
கொண்டார்கள்.
”கோடீஸ்வரன் வீடும்,
நாங்களும் பங்காளிங்கதான் சார்.
ஆக. 7ம் தேதி நான் வேலைக்குப்
போயிட்டு, சாயந்திரம் 4.30 மணிக்கு
மேலதான் வந்தேன். அன்னிக்கு
வீட்டுல இருந்திருந்தா நாங்களும்
சின்னாபின்னமாகி இருப்போம்.
அவனுக்கு என்னாச்சோ தெரியலீங்க.
நல்லாதான் இருந்தான்.
ஆத்திரத்துல எங்க வீட்டுக்கதவையும்
நாலஞ்சு இடத்துல வெட்டிட்டு
போயிருக்கான். அவன கைது
பண்ணிட்டாலும் நாங்க இன்னும்
‘கருக் கருக்’னுதாங்க வீட்டுக்குள்ள
பூட்டிக்கிட்டு படுத்திருக்கோம்,”
என அச்சம் தணியாதவராகச்
சொன்னார் ஜோதி.

 

இவருடைய வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் பழனியப்பன் என்பவர் கோடீஸ்வரன் ஆவேசமாக வருவதைப் பார்த்து, பதறியடித்து உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அவரை போட்டுத்தள்ளச் சென்ற கோடீஸ்வரன், கையில் சிக்காத கோபத்தில் வீட்டுக் கதவை பிளந்து விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய வீட்டுக் கதவை 7 இடங்களில் வெட்டியிருக்கிறார். தகர கதவு என்பதால், கொடுவாள் வெட்டில் தகரமே கிழிந்து போயிருந்தன.

 

அதே ஊரைச் சேர்ந்த சரவணன், பூபதி ஆகியோர் கோடீஸ்வரனின் இன்னொரு பக்கத்தைக் கூறினர்.

சரவணன், பூபதி

அவர்கள்,
”இதே தெருவில் நல்லம்மாள்
என்பவர் வீட்டில்தான்
கோடீஸ்வரனின் தாயார் அஞ்சலை,
அவருடைய அத்தை லட்சுமி
ஆகியோர் சம்பவத்தின்போது
பேசிக் கொண்டு இருந்தனர்.
‘கோடீஸ்வரன், கொடுவாளோடு
வர்றான். கதவை சாத்திக்குங்க’னு
சொல்லிட்டு லட்சுமி வெளியே
சென்று விட்டார்.

 

யாரும் கையில் சிக்காததால்,
அருகில் வேப்ப மரத்தடியில்
உட்கார்ந்து இருந்த லட்சுமியையும்
நாலஞ்சு வெட்டு வெட்டிப்புட்டான்.
டேய் வேணாம்டா… விட்டுடுடானு
அந்தம்மா கெஞ்சுது.
அப்பவும் அவனுக்கு ஆத்திரம்
அடங்கல. அந்தம்மா ரத்த
வெள்ளத்துல சரிஞ்சிடுச்சு.
அத்தைய வெட்டிக் கொன்னுட்டோம்கிற
பயமோ, குற்ற உணர்வோ
இல்லாமல் மல்லிகாங்கிறவங்க
வீட்டுக்கு முக்குல போய்
நின்னுட்டான். அந்த நேரம்
பார்த்து, ராசிபுரத்தைச் சேர்ந்த
நரேஷ்குமார் (30) என்பவர்,
இருசக்கர வாகனத்தில்
வந்தார்.

 

அவர் ரோடு ஓரத்தில் லட்சுமி,
ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப்
பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் மீது
பாய்ந்த கோடீஸ்வரன்,
அவரையும் வெட்டத் தொடங்கினார்.
ஹெல்மெட் போட்டிருந்ததால்
வெட்டு ஆழமாக விழவில்லை.
அவர் தப்பித்தோம் பிழைச்சோம்னு
வண்டிய போட்டுட்டு அங்கிருந்து
ஓடிவிட்டார். அப்பவும் விடாமல்
துரத்திட்டு போன கோடீஸ்வரன்
ஒரு கட்டத்தில் திரும்பி
வந்துட்டான்.

 

ஆனால்,
உண்மையில் எங்களுக்குத்
தெரிஞ்ச வரைக்கும் கோடீஸ்வரன்
தங்கமான பையன் சார்.
இருக்கற இடமே தெரியாது.
நல்லா படிச்சிருக்கான்.
வேலை கிடைக்கலைங்கிற
விரக்தியில் இப்படி செய்துட்டானோ
என்னவோ தெரியல.
யார்கிட்டயும் ஒரு சொல்
அதிர்ந்து பேச மாட்டான்.
இப்படி ஒரு பையன் இருக்கிறானா
என்பதே ஊர்ல பலருக்கு
தெரியாது. என்னமோ
கெட்ட காலம்,” என்கிறார்கள்
சரவணனும் பூபதியும்.

 

கோடீஸ்வரன் வெட்டியதில் லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பெரியப்பா பெரியண்ணன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். நரேஷ்குமாருக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை கொடுவாளுடன் துரத்திச் செல்லும் சிசிடிவி ஃபுட்டேஜ் காட்சிகளை நாமும் பார்த்து உறுதி செய்து கொண்டோம். அவருக்கு, பின் கழுத்துப் பகுதியில் ஒரு வெட்டு இருந்தது. சம்பவத்தன்று அவருக்கு உள்ளூர்க்காரர்கள் ரத்தத்தை துடைத்துவிட்டு, 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

 

ஜெயா என்ற இளம்பெண், ”கோடீஸ்வரன் பக்கத்து சந்துலதான் இருக்காரு. நானே எப்பவாவதுதான் பார்த்திருக்கிறேன். அவருக்கு என்னாச்சுனு தெரியாது. ஆனா அவரை ஊருக்குள்ள விடறது, என்னிக்கு இருந்தாலும் ஆபத்துதான். சைக்கோ மாதிரி போற வர்றவங்களை எல்லாம் துரத்தி துரத்தி வெட்டறது என்னனு சொல்ல? அவரை விஷ ஊசி போட்டுக் கொன்னுட்டாதான் ஊரு நல்லாருக்கும். அன்னிக்கு தெருவுல ஏராளமான சின்னப் புள்ளைங்களாம் விளையாடிட்டு இருந்தாங்க. குழந்தைகளை ஏதாவது ஆகியிருந்தா என்னாகியிருக்கும்?,” என ஆவேசமாகக் கூறினார்.

உறவினர்கள்

கள விசாரணையில், நமக்கு வேறு சில பரபரப்பு தகவல்களும் கிடைத்தன. கோடீஸ்வரன், அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொன்ன நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்கிறார். அரசு வேலை ஆசையில் இருந்த சிலரிடம் பணம் வசூலித்தும் அந்த நண்பரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய நண்பரோ, சொன்னபடி வேலை வாங்கித் தராததோடு, கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டாராம்.

 

இதனால் பணம் கொடுத்தவர்கள் கோடீஸ்வரன் மீது நாமக்கல் காவல்துறையில் புகாரளிக்க, அவரை கைது செய்துள்ளனர். சிறையில் இருந்த அவரை பெற்றோர்தான் பிணையில் எடுத்து மீட்டுக் கொண்டுவந்துள்ளனர். அப்போது இருந்தே, கோடீஸ்வரன் தன்னை மேலும் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். வேலை கிடைக்காத விரக்தியும், பணத்தை ஏமாற்றிய நபரும் அவரை மேலும் இறுக்கமாக்கி இருக்கலாம் என்கிறார்கள்.

 

கோடீஸ்வரனின் பெற்றோர் பெருமாள், அஞ்சலையிடம் பேசினோம்.

 

”அரசாங்க வேலைக்காக என் பையன் மதுரையில் ஒரு இடத்துல படிச்சிட்டு இருந்தானுங்க. அங்கதான் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பையனோட சினேகிதம் ஏற்பட்டிருக்கு. அந்தப் பையன்தான் என் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தர்றதா சொல்லியிருக்கான். அதை நம்பி கோடீஸ்வரன், வீட்டுல இருந்த 12 பவுன் நகைய வித்து அவனுக்கு பணம் கொடுத்திருக்கான். இன்னும் சில பேருக்கிட்டயும் 15 லட்சம் வரைக்கும் வசூலித்து கொடுத்திருக்கான்.

 

ஆனா அந்தப் பையன் வேலை வாங்கித் தராமல், கோடீஸ்வரன் பெயரிலேயே பைனான்ஸ் கம்பெனி நடத்திட்டு வந்திருக்கான். கடைசியில என் பையன்தான் ஏமாத்திட்டான்னு புகார் வரவும், அவனை கைது பண்ணிட்டு போய்ட்டாங்க. பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருங்க என் பையனை அடி அடினு அடிச்சு துவைச்சுட்டாங்க. அதுல இருந்துதான் கோடீஸ்வரன் ஒரு மாதிரி ஆகிட்டான். சின்ன வயசுல இருந்தே அவ்வளவாக யாரிடமும் பேச மாட்டான். போலீஸ்காரங்க அடிச்சதுக்கப்புறம் பேசறதை இன்னும் குறைச்சிக்கிட்டான்.

 

ஊர்ல பல பேரு அவன்கிட்ட வேலை கிடைக்கலியானு கேட்கறதும், ஜெயிலுக்குப் போனதப் பத்தி கேட்கறதும் அவனுக்கு பிடிக்கலீங்க. அதனாலேயே, அவன் மெயின் ரோட்டுக்கு போறதுனாகூட வேறு தெரு வழியாக புகுந்து போய்க்கிட்டு வந்துட்டு இருந்தான். நாங்க வேலைக்குப் போய்ட்டு வந்தாகூட எங்களுக்கு அவன்தான் காபி போட்டுக் கொடுப்பான். சில நேரம் சமைச்சும் கூட வெச்சிடுவான். அவன், அத்தைகூடதான் நெருக்கமாக பழகுவான். இப்ப அத்தையையும் வெட்டிப்புட்டான். இந்த ஊருதான் அவனை பைத்தியம்… சைக்கோனு என்னென்னவோ சொல்லுது. நாங்க என்னத்தங்க சொல்றது… ப்ச்… எல்லாம் கெட்ட நேரம்…,” என கண்ணீர் மல்கக் கூறினர் பெற்றோர்.

 

ஓய்வு பெற்ற பி.எப்., கமிஷனர் தேவதாஸ், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் சம்பவ இடம் அருகே வசிக்கின்றனர். அவர்கள், கோடீஸ்வரன் கொடுவாளுடன் கொலை வெறியுடன் சுற்றித்திரிவதை வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்து, சத்தம் போட்டுள்ளனர். அதனால் அவர்களைப் போட்டுத்தள்ளும் ஆத்திரத்துடன் மாடிப்படிகள் ஏறிச்சென்று வெட்டச் சென்றுள்ளார் கோடீஸ்வரன்.

தேவதாஸ் – சாந்தி

அவர்களும், தலை தப்பித்தால் தம்பிரான் புண்ணியம் கணக்காக வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டனர். அவர்களின் வீட்டுக் கதவையும் ஆவேசமாக நாலைந்து முறை கொத்தி விட்டு இறங்கியிருக்கிறார் கோடீஸ்வரன். தேக்கு மரக்கதவு என்பதால் கதவு உடையவில்லை. ”அவனிடம் சிக்கியிருந்தால் எங்க விதியும் முடிஞ்சி போயிருக்கும். அன்னிக்கு மட்டும் அவன் கையில சிக்கியிருந்தா எப்படியும் பத்து தலைகளாவது உருண்டிருக்கும். ரெண்டு உசுரோட போச்சு.

 

இப்பக்கூட எங்களுக்கு படபடப்பு குறையலீங்க. சம்பவத்தின்போது எங்களுக்கு ஈரக்குலையே ஆடிப்போச்சுங்க. இப்போது கூட உடம்பெல்லாம் வியர்க்குது. அவனை கண்டிப்பாக ஜாமினில் விடக்கூடாதுங்க. அப்படி விடுவதாக இருந்தால், எங்களுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணும். இது சம்பந்தமாக தனியாக ஒரு புகார் அளிக்கலாம்னு இருக்கோம்,” என்றனர்.

 

பெரம்பலூரில் இருந்து எப்பவாவது ஊருக்கு வரும் அண்ணன், அண்ணியிடம் கோடீஸ்வரன் கண்ணியமாக நடந்து வந்துள்ளார். ”நான் ஊருக்கு வந்தால், எனக்கு சிரமம் தரக்கூடாது என்பதற்காக கோடீஸ்வரனே குடத்தில் தண்ணீர் பிடித்து வைச்சிடுவாரு. காபி போட்டுத்தருவார். நல்லாதான் பழகுவாரு. ஆனா ரொம்ப பேசமாட்டாரு. அவருக்கு மரங்கள், புறாக்கள் மேல ரொம்பவே பிரியம். அவங்க அண்ணன்கிட்ட எப்ப பேசினாலும், ஊருக்கு வரும்போது மரக்கன்று வாங்கிட்டு வரத்தான் சொல்வார். புறாக்களுக்காக ராசிபுரம் வரைக்கும் போயி தீனி வாங்கிட்டு வருவாரு,” என்கிறார் கோடீஸ்வரனின் அண்ணி காயத்ரி.

 

வீட்டு மொட்டை மாடியில் பந்தைய புறாக்களை பராமரித்து வந்திருக்கிறார் கோடீஸ்வரன். அவற்றுக்காக விலை உயர்ந்த சத்தான தீனியும் வாங்கிப் போட்டிருந்தார். வீட்டுக்குப் பின்னால் மா, வாழை, அத்தி, கொய்யா மரங்களையும், பூச்செடிகளையும் வளர்த்து வருவதையும் பார்த்தோம். கோடீஸ்வரன் படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் இந்த மரங்களுடனும், புறாக்களுடனுமே கழித்திருக்கிறார்.

 

உண்மையில் கோடீஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ன நடந்தது என்பது குறித்து நாமக்கல் காவல்துறை டிஎஸ்பி காந்தியிடம் கேட்டோம்.

 

”கோடீஸ்வரன் இருவரை வெட்டிக்கொன்று விட்டு, பலரை துரத்தி துரத்தி கொல்ல முயற்சித்துள்ளார். பின்னர் அவர் தன் வீட்டுக்குள் சென்று உள் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு ஒளிந்து கொண்டார். பொதுமக்கள் வெளிப்புறமாக தாழ் போட்டிருந்தனர். அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் எனத் தெரியாததால் முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத் துறையினருடன் சென்றோம்.

 

கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாக அந்த அறைக்குள் மிளகாய்ப்பொடி தூவினோம். பிறகு, பெப்பர் ஸ்பிரே அடித்தோம். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. எங்களில் பலருக்கு நெடி தாங்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதே தவிர, கோடீஸ்வரன் அந்த அறைக்குள்ளேயே இருந்தார். பிறகு தாழ்ப்பாளை நெம்பித்தான் கதவை திறந்து உள்ளே சென்றோம். அவரை பெட்ஷீட் போட்டு அமுக்கிப் பிடித்தோம். அப்போது அவர் கொடுவாளை அந்த அறையின் மேல் சிலாப்பில் வைத்துவிட்டு தரையில் உட்கார்ந்து இருந்தார்.

 

கைது செய்து விசாரித்தபோது, அவர் என் கண்களைப் பார்த்துப் பேசாமல் மேலே பார்த்தபடியே பேசினார். ஆரம்பத்தில் எங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலும் சொல்லவில்லை. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் இல்லாததால், நாமக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி 48 மணி நேரம் கண்காணிப்பில் வைத்திருந்தோம். மருத்துவ பரிசோதனையில் அவர் நார்மல் ஆக இருப்பது தெரிய வந்தது.

 

மீண்டும் அவரிடம் விசாரித்தபோது, அவர் வேலைக்குச் செல்லாதது குறித்து அத்தையும், பெரியப்பாவும் அடிக்கடி அட்வைஸ் செய்து வந்துள்ளனர். அரசு வேலைக்காக யாரோ ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததும், அவரிடம் பணம் கொடுத்தவர்கள் அளித்த புகாரால் அவர் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியாலும்தான் அத்தையையும், பெரியப்பாவையும் வெட்டியதாகச் சொன்னார். ஆனால், சம்பவத்தன்று அந்த வழியாக வண்டியில் வந்த கூரியர் சர்வீஸ் ஊழியர் நரேஷ்குமாரை எதற்காக துரத்திச்சென்று வெட்டினார் என்பதற்கு பதில் இல்லை. ஆக. 13ம் தேதி அவரை ராசிபுரம் சிறையில் அடைத்துவிட்டோம். அப்போது அவர் நார்மல் ஆகத்தான் இருந்தார்,” என்கிறார் டிஎஸ்பி காந்தி.

 

வேலையின்மையும், ஏமாற்றங்களும் ஒருவரை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு செல்லுமா? என்பது குறித்து, ஈரோடு அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் தனராஜ் சேகரிடம் கேட்டோம்.

மனநல மருத்துவர் தனராஜ் சேகர்

”சில சம்பவங்களில், நடந்தது என்ன என்பது பற்றி பாதிக்கப்பட்டவருக்கு நினைவில் இருக்காது. வலிப்பு நோயில், ‘காம்ப்ளக்ஸ் பார்ஷியல் சீசர்ஸ்’ (Complex partial seizures) என்றொரு வகை உண்டு. அதுபோன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு செயலை ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம், அது தவறா சரியா என்பதும் தெரியாது. நடந்த சம்பவம் பற்றியும் நினைவில் இருக்காது. மூளையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ, கட்டி ஏதாவது உருவானாலோ கூட இதுபோன்ற பாதிப்பு வரும். எந்த வயதிலும் வரலாம்.

 

மேலும், ‘டெலூஷன்’ (Delusion) பாதிப்பாகவும்கூட இருக்கலாம். அதாவது, குறிப்பிட்ட ஒரு குற்றம் செய்த பிறகு ஏற்படும் விளைவு என்னனு தெரியாமலும், கற்பனை உலகில் வாழும் ஒரு நபராக இருப்பார்கள். அவர்கள் கொலையே செய்தாலும், சட்டத்தின் வழியில் தண்டிக்க முடியாது. ஆனால் அவருக்கு அசைலத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நீங்கள் சொல்லும் நபர் கொலைகளைச் செய்திருக்கிறார். அதன்பிறகு, நார்மல் மனிதர் போல பேசுகிறார் என்றால், ‘டிஸ்ஸோசியேட்டிவ் டிஸ்ஸார்டர்’ (Dissociative disorder) பிரச்னையாகவும் இருக்கலாம். அதாவது ‘அந்நியன்’ படத்தில் விக்ரம் அந்நியனாக மாறி கொலைகளைச் செய்துவிட்டு, அம்பியாக மாறி நல்லவர்போல் இருப்பாரே… அப்படிப்பட்ட பிரச்னைதான் இது.

 

இந்த வழக்கில் குறிப்பிடப்படும் நபர், பணத்தைக் கொடுத்து ஏமாந்து இருக்கிறார். வேலை கிடைக்கவில்லை. அதனால் மன அழுத்தத்தில் கொலை குற்றங்களைச் செய்திருக்கலாம். அதன்பிறகு, வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மனநலம் பாதித்தவர்போல நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனினும், அவரிடம் நேரில் விசாரித்தால்தான் என்ன பிரச்னை என்று துல்லியமாக கண்டறிய முடியும். தற்போது நார்மல் என மருத்துவர் சான்றளித்தாலும்கூட, சம்பவத்தின்போது அவர் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை அறிவதும் முக்கியம்,” என்கிறார் மனநல மருத்துவர் தனராஜ் சேகர்.

 

மரங்களிடமும்,
புறாக்களிடமும் பரிவு காட்டும்
கோடீஸ்வரன், மனிதர்களை
தேடித்தேடி வெட்டி
வீழ்த்தியிருக்கிறார்.
அவரால், இன்று ஒரு
கிராமமே தூக்கம் தொலைத்து
கிடக்கிறது. கோடீஸ்வரன்
ஒருவரிடம் பணத்தைக்
கொடுத்து ஏமாந்தாரே,
அவரைப் பற்றி முழுமையாக
காவல்துறை விசாரித்து
இருந்தாலும், இன்றைக்கு
ஒரு கொலையாளி உருவாகி
இருக்காமல் போயிருக்கவும் கூடும்.
அதை காவல்துறையினர்
தவற விட்டுவிட்டனர்.

 

ஒரு விதத்தில், முதுநிலை பட்டதாரி இளைஞர் கொலையாளி ஆனதற்கு காவல்துறையும், மோசடி நபரும் மட்டுமின்றி இந்த சமூகமும் ஆகப்பெரும் காரணமாகி இருக்கிறது.